Published:Updated:

காணாமல் போகும் நிலத்தடி நீர்... காப்பாற்ற என்ன வழி?

நிரந்தரத் தீர்வுக்கு, நிலங்களில் மழை நீர் அறுவடை !ஆர். குமரேசன் படங்கள்: வீ. சிவக்குமார்

பிரீமியம் ஸ்டோரி
##~##

'தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்’ என்று நமக்கு முந்தைய தலைமுறை, நினைத்துக்கூடப் பார்த்திருக்காது. இன்றைக்கு விலை கொடுத்து தண்ணீரை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் நம் தலைமுறை... கூடவே, 'அடுத்தத் தலைமுறைக்கு, விலை கொடுத்துக் கேட்டாலும்... தண்ணீர் கிடைக்குமா?’ என்கிற கேள்வியையும் எழுப்பி, பதறும் நிலையில் பரிதாபமாக நின்று கொண்டிருக்கிறது!

'நிலத்தடி நீர்’ என்பது ஒன்றும் அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி அல்ல. இது, வங்கியில் பணத்தை சேமித்து வைப்பது போலத்தான். சேமிப்பதை விட்டுவிட்டு பணத்தை எடுத்துக் கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில், 'உங்கள் கணக்கில் போதுமான பணம் இருப்பு இல்லை’ என்றுதான் எஸ்.எம்.எஸ். வரும். அதைப்போலத்தான் நிலத்தடி நீரும். அவ்வப்போது கிடைக்கும் நீரை சேமித்துக் கொண்டே இருந்தால்தான், தேவைக்கு எடுத்துக் கொண்டே இருக்க முடியும். சேமிக்கும் பழக்கம் இல்லாது போனதால்தான், தண்ணீரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியிருக்கிறோம். வீடுகளில் மழை நீரை சேமிப்பதுபோல... நிலங்களிலும் மழை நீரை சேமிக்க வேண்டும்.

காணாமல் போகும் நிலத்தடி நீர்...  காப்பாற்ற என்ன வழி?

''நிலங்களில் விளைபொருட்களை மட்டுமல்ல... மழை நீரையும் அறுவடை செய்ய வேண்டும். அதுதான் நிலைத்த நீடித்த விவசாயத்தின் முதற்படி'' எனச் சொல்லும் திண்டுக்கல் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் கால்நடைத்துறைப் பேராசிரியர் ரெங்கநாதன்,

''நிலங்களில் மழை நீரை சேகரிப்பதன் மூலமாக நிலத்தடி நீர்மட்டத்தை கணிசமாக உயர்த்த முடியும். நம் நிலத்தில் பெய்யும் மழை நீரை அடுத்தவர் நிலத்துக்குப் போக விடாமல், நமது நிலத்திலேயே தேங்குமாறு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அதற்காக நிலத்தில் வேகத்தடைகளை உருவாக்க வேண்டும். அதாவது... மழைக்காலத்துக்கு முன்பாகவோ அல்லது ஒரு மழை பெய்தவுடனேயோ, நிலத்தை நன்றாக உழவு செய்து வைக்க வேண்டும். இப்படி செய்தால் பெய்யும் மழை நீர் நிலத்தால் முழுமையாக உறிஞ்சப்பட்டு நிலத்தின் அடிமட்டம் வரை சென்று சேமிக்கப்படும். தமிழகத்தில் இருக்கும் லட்சக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்கள், மானாவாரி நிலங்களில் இப்படி உழவு போட்டு வைத்தாலே, நிலத்தடி நீர் மட்டத்தை கணிசமாக உயர்த்த முடியும்'' என்றவர், தொடர்ந்தார்.

காணாமல் போகும் நிலத்தடி நீர்...  காப்பாற்ற என்ன வழி?

''ஆறுகளில் தடுப்பணை அமைப்பது போல... நிலங்களில் ஆங்காங்கே 'சமச்சீர் வரப்புகள்’ அமைக்க வேண்டும். இதன் மூலம், ஒரு குறிப்பிட்ட வயலில் பெய்யும் மழை நீர் அந்தப் பகுதியிலேயே தேங்கி, மெதுவாக நிலத்துக்குள் இறங்கும். இப்படி வரப்புகளை அமைக்கும்போது... நீர் தேங்கும் பகுதியில் வரப்புகளை ஒட்டி இரண்டடி ஆழம், அரையடி அகலத்தில் நீளமாக வாய்க்கால்களையும் வெட்டி வைக்கலாம்.

வரப்புகளைத் தாண்டி வரும் மழை நீர் அந்த வாய்க்கால்களில் நிரம்பி, முழுவதுமாக பூமிக்குள் ஊடுருவும். மானாவாரி நிலங்களில் மரப்பயிர்களை சாகுபடி செய்பவர்கள், மழைக்காலத் துக்கு முன்பாக ஒவ்வொரு மரத்தைச் சுற்றியும் கொத்தி விட்டு, வட்டப்பாத்தி எடுத்து வைக்க வேண்டும். சரிவான நிலங்களில் மரங்களை வளர்ப்பவர்கள், வழிந்து வரும் நீரைத் தேக்கும் விதமாக, மரங்களின் அருகே பிறை வடிவ வாய்க்கால்களை எடுத்து வைக்கலாம். விவசாய நிலங்களுக்கு இடையில் ஓடைகள் குறுக்கிட்டால், அங்கு தடுப்பணைகள் கட்டுவதன் மூலமாகவும் நீரை சேமிக்கலாம்'' என்ற ரெங்கநாதன் நிறைவாக,

''நீரை சேமிப்பதைப்போலவே, அதை சிக்கனமாகவும், முறையாகவும் பயன்படுத்த வேண்டியது அவசியம். 'நமது கிணற்றில்தான் நீர் இருக்கிறதே...’ என விரயம் செய்யக் கூடாது. வாய்க்கால் வழி பாசனத்தைத் தவிர்த்து, சொட்டுநீர்ப் பாசன முறைக்கு மாற வேண்டும். பாசன நீர் ஆவியாவதைக் குறைக்க, பண்ணைக் கழிவுகள் மூலமாக மூடாக்கு போட வேண்டும். அதிக தண்ணீர் தேவைப்படும் தென்னந்தோப்புகளில், இரண்டு வரிசைக்கு இடையில் அரையடி அகலம், இரண்டடி ஆழத்தில் வாய்க்கால்கள் எடுத்து, தென்னங்கழிவுகளை அதனுள் போட்டு பாசனம் செய்வதன் மூலம், வறட்சியான காலத்திலும் மரங்களைக் காப்பாற்றலாம்'' என்று பயனுள்ள யோசனைகளையும் தந்தார்!

'வரப்புயர...' என்று சும்மாவா பாடி வைத்தார் ஒளவையார்!

-முற்றும்.

 தேவை... கதவணைகள்!

காணாமல் போகும் நிலத்தடி நீர்...  காப்பாற்ற என்ன வழி?

'மழை மற்றும் வெள்ளக் காலங்களில் கடலில் கலக்கும் நீரை சேமிக்க காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் குறுக்கே கதவணைகள் கட்ட வேண்டும்’ என்பது விவசாயிகளின் நெடுநாளைய கோரிக்கை. காவிரிப் பாசனப் பகுதிகளின் பொறியியலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற என். நடராஜன், இது தொடர்பான தெளிவான திட்டம் ஒன்றை தயாரித்து, அரசுக்கு அனுப்பி உள்ளார்.

இதைப்பற்றி, கடந்த 10.09.2007-ம் தேதியிட்ட 'பசுமை விகடன்’ இதழில், விரிவாக எழுதியிருந்தோம். ஆனால், அரசின் அலட்சியம் தொடர்ந்ததால், விவசாயிகள் தொடர் போராட்டத்தைக் கையிலெடுத்தார்கள். அதைப்பற்றி 10.09.12-ம் தேதியிட்ட 'பசுமை விகடன்’ இதழில் எழுதியிருந்தோம். தொடர்ந்து அரசு செவி சாய்க்காமல் இருக்கும் நிலையில், அதன் கவனத்தை ஈர்ப்பதற்காக ஜூலை 26 அன்று கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில், விவசாயிகள் 'வாகனப் பேரணி’ நடத்த முயன்றனர். அதற்கு தடை விதித்த காவல்துறை, 108 விவசாயிகளைக் கைது செய்து வழக்கும் பதிவு செய்துள்ளது.

இதைப்பற்றி நம்மிடம் பேசிய கீழணைப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் வினாயகமூர்த்தி, ''கதவணைகள் கட்டச் சொல்லி பல வருஷமா போராடுறோம். எந்த அரசும் கண்டுக்கறதில்லை. விவசாயிகளைக் கைது செய்றதுலதான் தீவிரமா இருக்காங்க. கதவணைகள் இல்லாததால, இப்போ எங்க கண்ணு முன்னாடியே பல லட்சம் கன அடி காவிரி தண்ணி கடல்ல கலந்துக்கிட்டு இருக்கு'' என்கிறார், வேதனையுடன்.

கண்ணீர் கணக்கு!

2005-ம் ஆண்டு 70.96 டி.எம்.சி.
2006-ம் ஆண்டு 42.85 டி.எம்.சி
2007-ம் ஆண்டு 64.41 டி.எம்.சி
2008-ம் ஆண்டு 78.15 டி.எம்.சி
2009-ம் ஆண்டு 65.42 டி.எம்.சி

-இது என்ன கணக்கு தெரியுமா... காவிரியில் கரைபுரண்டு வந்து, 'உபரிநீர்' என்கிற பெயரில் வீணே கடலில் கலந்த நீரின் கணக்குதான். 2010, 2011 மற்றும் 2012 ஆகிய மூன்று ஆண்டுகளில்... தண்ணீருக்கு கையேந்தியபடி கண்ணீர் வடித்த நாம், கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரு நாள் மட்டுமே மீண்டும் கொள்ளிடம் வாயிலாக 6 டி.எம்.சி அளவு தண்ணீரை நேரடியாக கடலில் கலக்கவிட்டுள்ளோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு