Published:Updated:

ஊருக்கு ஊர் பசுமைக் கடை!

ஊருக்கு ஊர் பசுமைக் கடை!

ஊருக்கு ஊர் பசுமைக் கடை!

ஊருக்கு ஊர் பசுமைக் கடை!

Published:Updated:
##~##

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

'சென்னையில் மலிவு விலையில் காய்கறிகளை விற்பனை செய்துவரும் 'பண்ணை-பசுமை நுகர்வோர் காய்கறிகடை'களுக்கு, ஐந்தாயிரம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக காய்கறிகள் கொள்முதல் செய்யப்படும்' என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ளது. இதற்காக... சென்னையை ஒட்டியிருக்கும் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளிடம் இருந்து, கொள்முதல் செய்யப்படும் என்று தெரிகிறது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது உண்மையிலேயே வரவேற்கக் கூடிய திட்டமே! அதேசமயம், சென்னையில் மட்டுமே என்றில்லாமல், உடனடியாக அனைத்து மாவட்ட மற்றும் தாலூகா தலைநகரங்களில் எல்லாம் 'பசுமை-பண்ணை நுகர்வோர் காய்கறிக் கடை'களைத் திறக்கும்போதுதான்... அதன் பலன் தமிழகம் முழுக்க உள்ள பொதுமக்களுக்கும் சென்று சேரும். இந்தக் காய்கறிகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் உரிய விலை கிடைக்கும்!

ஆம்... 'சுண்டைக்காய் கால் பணம், சுமைக் கூலி முக்கால் பணம்’ என்பது போலத்தானே இன்றைக்கு விவசாயிகளின், குறிப்பாக, காய்கறி விவசாயிகளின் நிலை இங்கே நீடிக்கிறது! சிறு மற்றும் குறு விவசாயிகள் என்கிற நிலையில் வருபவர்களே இங்கே அதிகம். சாகுபடி செலவுக்குத் தேவையான பணம் கையில் இல்லாததால்தான்... கடன்களை நம்பியே அவர்களில் பெரும்பாலானவர்கள் காலத்தை ஓட்டுகிறார்கள்.

வங்கிகளுக்குச் சென்றால்... ஆயிரத்தெட்டு கேள்விகள், அடமானங்கள் என்று மாற்றி மாற்றி விரட்டப்படுவதால்... பெரும்பாலான விவசாயிகளுக்குத் தெரிந்த ஒரே ஆபத்பாந்தவன்... அவசர காலத்தில் பணம் கொடுத்து உதவும் 'இடைத்தரகர்கள்' எனப்படும் வியாபாரிகளே! அதனால்தான், விளைவித்த காய்கறியை அவர்களிடமே, அடிமாட்டு விலைக்குக் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது!

இதிலிருந்து விடுதலை பெறும்போதுதான்... இந்த விவசாயிகளின் வாழ்க்கை சிறக்கும். இதற்கு முதல்படியாக தற்போது ஆரம்பமாகியிருக்கும் பசுமை-பண்ணை நுகர்வோர் கடைகள்... ஊருக்கு ஊர் திறக்கப்படும் நாளை ஆவலுடன் எதிர்பார்ப்போம்!

- ஆசிரியர்