நாட்டு நடப்பு
Published:Updated:

வாழ்வாதாரத்தைக் கொள்ளையடித்த, வரலாறு காணாத வறட்சி!

கு. ராமகிருஷ்ணன் படங்கள்: மு. ராமசாமி

பிரச்னை

##~##

கிட்டத்தட்ட கடந்த மூன்று ஆண்டுகளாகவே தமிழகம் முழுக்க வறட்சியின் கோரத்தாண்டவம்தான்! அதிலும் இந்த ஆண்டின் நிலை, இதுவரையிலும் மிகமிக மோசமே! தற்போது காவிரியில் ஓரளவு தண்ணீர் வருகிறது... ஆங்காங்கே திடீர் மழை பொழிகிறது... இதன் காரணமாக குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் நிலைமை மாற ஆரம்பித்தாலும்... வடமாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள் என்று பெரும்பான்மை பகுதியின் நிலை... சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதே உண்மை!

வறட்சியின் உச்சத்தில் சிக்கித் தவிக்கிறது விவசாய சமூகம் என்பதற்கு ஒரு சோறு பதமாக, பரிதாபத்திலும் பரிதாபமாக நிற்கின்றன... பெரம்பலூர்-திருச்சி மாவட்டங்களின் எல்லையோர கிராமங்களான நாரணமங்கலம், புதுக்குறிச்சி, வெங்கலம், வடகரை, பெரகம்பி, மணியாக்குறிச்சி, சிறுகனூர், ரெட்டிமாங்குடி, திருப்பட்டூர், ஆயிக்குடி, எதுமலை, வாழையூர் உள்ளிட்ட பல கிராமங்கள்! பொதுவாகவே... 'எங்கள் வாழ்க்கையில் இதுவரை சந்தித்திராத வறட்சி’ என்கிற வார்த்தை வந்துவிழுவது வாடிக்கை. ஆனால், அந்த வார்த்தை நூற்றுக்கு நூறு உண்மை என்பதை, நம்மால் உணர முடிந்தது இந்தப் பகுதிகளுக்கு நேரில் சென்றபோது... எலுமிச்சை, மா, நெல்லி, தென்னை என பல்லாயிரக்கணக்கான மரங்களும் காய்ந்து கருவாடாகி... வெறும் குச்சிகள் மட்டுமே எஞ்சிய நிலையில் அந்தப் பிரதேசத்தையே சோக பூமியாக்கிப் போட்டுள்ளன.

வாழ்வாதாரத்தைக் கொள்ளையடித்த, வரலாறு காணாத வறட்சி!

''ஒரு வருஷமா இந்த பகுதியில துளிகூட மழை பெய்யல. அதனால, கிணறு, போர்வெல் எல்லாமே வத்திப் போச்சு. என் கிணறு 87 அடி ஆழம். அதுக்குள்ளாற 300 அடி ஆழத்துக்கு போர்வெல் போட்டும் ஒரு பிரயோஜனமும் இல்லை. எலுமிச்சைக்கு வாரம் ஒரு தடவையாவது

வாழ்வாதாரத்தைக் கொள்ளையடித்த, வரலாறு காணாத வறட்சி!

தண்ணி தந்தாகணும். ஆனா, மாசக்கணக்கா தண்ணி பாய்ச்ச முடியாம எல்லாம் காய்ஞ்சு கருகி சாகுது. வேதனையோட வேடிக்கைதான் பார்க்க முடியுது. 15 வருஷமா படாதபாடு பட்டு 6 ஏக்கர்ல வளர்த்த 800 எலுமிச்சை மரங்கள்ல முக்கால்வாசி அழிஞ்சிடுச்சு'' -பிரம்மலிங்கம்

''ஒரு ஏக்கர்ல எலுமிச்சை சாகுபடி செஞ்சோம்னா, வருஷத்துக்கு 80 ஆயிரம் ரூபாய் லாபமா மிஞ்சும். எங்க குடும்பத்துக்கு ஒரே வாழ்வாதாரம், 2 ஏக்கர் எலுமிச்சைதான். இப்போ தோட்டம் முழுக்க வெறும் சருகுதான் நிக்குது. போன மாசம் முப்பதாயிரம் ரூபா செலவு பண்ணி, லாரியில தண்ணீர் கொண்டு வந்து ஊத்தினேன். அப்படியும் மரங்களைக் காப்பாத்த முடியல''

- சரவணன்.

''பத்து வருடங்களாகப் பார்த்துப் பார்த்து வளர்த்த தென்னை, கொய்யா அத்தனையும் கருகிடுச்சு''

- முகமது சுலைமான்.

இப்படி அந்தக் கிராம விவசாயிகள் ஒவ்வொருவரிடமும் ஓராயிரம் சோகக்கதைகள்தான்.

''இனி, என்னதான் பெரிய மழை பெஞ்சாலும், இந்த மரங்களுக்கு புத்துயிர் கொடுக்க முடியாது. செத்தது செத்ததுதான். 'தானே’ புயல்ல கடலூர் மாவட்டத்துல வந்த பாதிப்பு மாதிரிதான் இதுவும். அந்த மாவட்டத்துக்கு உதவி செஞ்ச மாதிரி எங்களுக்கும் அரசாங்கம் உதவி செய்யணும். அப்போதான் எங்க வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியும்'' என்பதுதான் இப்பகுதி விவசாயிகளின் ஒட்டுமொத்தக் கோரிக்கை.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தாரேஸ் அகமது மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோரின் கவனத்துக்கு இந்த விஷயத்தை நாம் கொண்டு சென்றோம். ''விவசாயிகளை இதுபற்றி மனு கொடுக்கச் சொல்லுங்கள். தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட துறைகள் மூலமாக உரிய நிவாரணம் கிடைக்கவும், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றவும் அரசுக்கு பரிந்துரை செய்யத் தயாராக இருக்கிறோம்'' என்று இருவருமே கனிவுடன் நம்மிடம் நம்பிக்கை தந்தார்கள்.

வாழ்வாதாரத்தைக் கொள்ளையடித்த, வரலாறு காணாத வறட்சி!

இந்த விஷயத்தை விவசாயிகளுக்குத் தெரிவித்து, உடனடியாக மனுக்களை அனுப்பச் சொல்லியிருக்கிறோம்.

காத்திருப்போம்... நல்லதே நடக்குமென்று!

சாறு உறிஞ்சும் பூச்சிக்கு கவர்ச்சிப் பொறி!

வாழ்வாதாரத்தைக் கொள்ளையடித்த, வரலாறு காணாத வறட்சி!

இந்த வரலாறு காணாத சோகத்துக்கு நடுவேயும்... ஆறுதலாக ஒரு விஷயத்தைச் சொல்கிறார், திருச்சி மாவட்டம், ரெட்டிமாங்குடி கிராம விவசாயியான மணிமாறன். ''சில இடங்கள்ல மட்டும் 'போர்வெல்’ல ஓரளவுக்கு தண்ணீர் இருக்கறதால... அதைப் பாய்ச்சி மரங்களக் காப்பாத்திட்டோம். ஆனா, மேல் மழை பெய்யாததால, 'சாறு உறிஞ்சும் பூச்சிகள்’ தாக்குதல், அளவுக்கு அதிகமா இருக்கு. இதனால துளிர்கள் அழியுறதோட, காய்கள்ல உள்ள பச்சையமும் பறிபோக ஆரம்பிச்சுருக்கறதுதான் சோகம். இதை அப்படியே விடமுடியாதுங்கறதால... நாலு அடி உயரத்தில் இரண்டு குச்சிகளை நட்டு, அதில் இரண்டரை அடி நீளம், ஒரு அடி அகலத்துக்கு மஞ்சள் நிற பாலிதீன் காகிதத்தைக் கட்டி, அதில் விளக்கெண்ணெயைத் தடவி வெச்சோம். இந்தக் கவர்ச்சிப் பொறியால கவரப்பட்டு சாறு உறிஞ்சும் பூச்சிகள் ஆயிரக்கணக்கில் அதுல உட்கார்ந்து அழிஞ்சுடுச்சுங்க...'' என்று தன் அனுபவம் சொன்னார் மணிமாறன்.