Published:Updated:

50 சென்ட்... 60 நாள்... 60 ஆயிரம்...

நிறைவான வருமானம் தரும் நூக்கல்! த. ஜெயகுமார்

##~##

உற்பத்தி செய்த பொருளை விற்க அலைவதைவிட... தேவை அதிகம் உள்ள பொருளை உற்பத்தி செய்வதுதான், சிறந்த தொழிலதிபர் ஆவதற்கான சூத்திரம். இது விவசாயத்துக்கும் பொருந்தும். அந்த வகையில், ஓசூர், பெங்களூரு சந்தையில் அதிகத் தேவையுள்ள 'டர்னிப்’ எனப்படும் நூக்கலை, (சில பகுதிகளில் 'நூல்கோல்’ என்றும் நூக்கல் என்றும் அழைக்கிறார்கள்) கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கெலமங்கலம், பேரிகை, சூளகிரி ஆகிய பகுதிகளில் அதிகளவில் பயிரிட்டு, தொடர்ந்து லாபமீட்டி வருகிறார்கள்... விவசாயிகள்!

பீட்ரூட், கேரட், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ்... போன்ற 'இங்கிலீஷ்’ காய்கறிகள் வரிசையில் நூக்கலும் ஒன்று. மிதமான குளிரும், வெப்பமும் இருக்கும் பகுதிகளில் வளரக்கூடிய இது, நல்ல வருமானம் தரக்கூடிய பயிராகவும் இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளில் இது விளைவதற்கான சூழல் நிலவுவதால், அங்கு அதிகமாக விளைவிக்கப்படுகிறது.

இப்படி பல ஆண்டுகளாக நூக்கல் சாகுபடியில் ஈடுபட்டு வருபவர்களில், ஒருவரான வெங்கடேசனைத் தேடி, அவருடையத் தோட்டத்துக்குச் சென்றோம். கெலமங்கலத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் டி.கொத்தப்பள்ளி கிராமத்தில்தான் இருக்கிறது, இவருடைய  தோட்டம்.

''முன்ன, டெம்போ வெச்சு ஓட்டிட்டிருந்தேன். சுத்து வட்டாரத்துல இருந்து காய்கறிகளை ஏத்திக்கிட்டு, ஓசூர் மார்க்கெட்டுக்கு தினமும் போயிட்டு வருவேன். கேரட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், பீட்ரூட்னு காய்கறிகளுக்கு நல்ல தேவை இருந்துச்சு. விவசாயிக 3 மாசத்துல நல்ல காசு பார்த்துட்டு இருந்தாங்க. அதனால, எனக்கும் காய்கறி சாகுபடியில ஆசை வந்துச்சு. என்னோட நிலத்துல காய்கறிகள போட ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல, பீட்ரூட், கேரட், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்குனு போட்டுட்டு இருந்தேன். சந்தையில 'டிமாண்ட்’ உள்ள காயோட விதைகளைக் கொடுத்து, வியாபாரிங்க விதைக்கச் சொல்லுவாங்க. அப்படித்தான் என்னோட நிலத்துல நூக்கல் போட ஆரம்பிச்சேன். கர்நாடகா மாநிலத்திலிருந்து ஓசூர் பகுதிக்கு வந்த காய்கறிகள்ல இதுவும் ஒண்ணு.

50 சென்ட்... 60 நாள்... 60 ஆயிரம்...

மொத்தம் 5 ஏக்கர் நிலமிருக்கு. அதுல, கொஞ்ச நிலத்துல நூக்கல் போட்டேன். என்னோட நிலத்துல நல்லாவே வந்துச்சு. அதனால வருஷா வருஷம் நூக்கல் போட ஆரம்பிச்சுட்டேன். இந்த முறை 50 சென்ட்ல போட்டு, அறுவடை பண்ணிட்டேன். வழக்கமா 60 நாள்ல வர்றது, இந்த முறை

45 நாள்லயே மகசூலுக்கு வந்துடுச்சு'' என்று முன்கதை சொன்ன வெங்கடேசன்,

50 சென்ட் நிலத்தில் நூக்கல் சாகுபடி செய்யும் முறை பற்றி சொல்ல ஆரம்பித்தார். அது அப்படியே பாடமாக இங்கே...

50 சென்ட்... 60 நாள்... 60 ஆயிரம்...

ஏக்கருக்கு 625 கிராம் விதை!

'நூக்கல் அனைத்துப் பகுதிகளிலும் வளரக்கூடியது. குறிப்பாக, பனிக்காலத்தில் நன்றாக விளையும். நாற்று நடவு, நேரடி விதைப்பு என இரண்டு முறைகளில் நடவு செய்யலாம். அதிகப்பரப்பில் சாகுபடி செய்ய வேண்டுமானால், நேரடி விதைப்புதான் ஏற்றது. சாகுபடி நிலத்தில் (அரை ஏக்கர்) இரண்டு டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி, இரண்டு சால் உழவு ஓட்ட வேண்டும். பிறகு, தானியங்களை விதைப்பது போல் நூக்கல் விதையை நிலத்தில் தூவிவிட வேண்டும் (ஒரு ஏக்கர் நிலத்துக்கு 625 கிராம் விதை தேவைப்படும்). விதைத்த பிறகு ஏர் கலப்பையிலோ, டிராக்டரிலோ நிலத்தை சமன் செய்து, பாசனம் செய்ய வசதியாக, பார் பாத்தி அமைத்துக் கொள்ள வேண்டும். நிலத்தின் அமைப்பைப் பொருத்து பாரின் அளவை அமைத்துக் கொள்ளலாம்.

50 சென்ட்... 60 நாள்... 60 ஆயிரம்...

மேக மூட்டம் கவனம்!

நான்கு நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். களைகள் வளர்வதைப் பொருத்து, விதைத்த 15 நாட்கள் முதல் 20 நாட்களுக்குள் அவற்றை அகற்ற வேண்டும். களை எடுக்கும்போதே, ஒவ்வொரு செடிக்கும் 3 அங்குலம் அல்லது 4 அங்குலம் இடைவெளி இருப்பதுபோல (இடைவெளி இருந்தால்தான் காய் பெருக்கும்) அதிகப்படியான செடிகளை கொத்திவிட்டு, பரிந்துரைக்கப்படும் உரங்களைத் தேவையான அளவு கொடுக்க வேண்டும். 25 நாட்களுக்கு மேல் காய்கள் வர ஆரம்பிக்கும். மேக மூட்டம் இருக்கும் சமயத்தில், புழுக்கள், பூச்சிகளின் தொல்லை இருக்கும். அந்த சமயத்தில், பூச்சிவிரட்டிகளைத் தெளிக்க வேண்டும். அவ்வப்போது, மண்ணின் தன்மையைப் பொருத்து... பரிந்துரைக்கப்படும் நுண்ணூட்ட உரங்களைக் கொடுத்து வந்தால், கிழங்கின் எடை கூடும். நடவு செய்த 45 நாட்களுக்கு மேல் கிழங்குகள் பெருத்து, 60 நாட்களுக்குள் அறுவடைக்கு வந்துவிடும். செடிகளை வேரோடு பறித்து, வேர்களை முறுக்கி எடுக்க வேண்டும். மேற்பகுதியில் இருக்கிற தழைகளை ஒடித்துவிட்டு, அப்படியே மூட்டை பிடிக்கலாம். நன்றாக விளைந்திருந்தால், ஒரு கிழங்கு கால் கிலோ அளவு எடை இருக்கும்.’

50 சென்ட்... 60 நாள்... 60 ஆயிரம்...

81 மூட்டை மகசூல்!

சாகுபடிப் பாடம் சொன்ன வெங்கடேசன் நிறைவாக, ''50 சென்ட்ல இருந்து 80 மூட்டைக்கு (80 கிலோ மூட்டை) குறையாம நூக்கல் மகசூல் கிடைக்கும். இந்த முறை எனக்கு 81 மூட்டை கிடைச்சுது. பெங்களூர் சந்தைக்கு 40 மூட்டையை அனுப்பினேன். மூட்டை ஆயிரம் ரூபாய்னு விலை போச்சு. மீதியை, மூட்டை 500 ரூபாய்னு ஓசூர் மார்க்கெட்லேயே போட்டுட்டேன். மொத்தம் 60 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைச்சுது. எல்லா செலவும் போக... 49 ஆயிரம் ரூபாய் லாபமா நின்னுச்சு. எவ்வளவு உற்பத்தியானாலும், ஒரு கிலோ நூக்கல் விலை, 6 ரூபாய்க்குக் கீழ எப்பவும் குறையறதில்லை'' என்று சந்தோஷமாக விடை கொடுத்தார்.  

தொடர்புக்கு,
வெங்கடேசன், செல்போன்: 98430-67410
மகேஷ், செல்போன்: 94431-41366

இயற்கை முறையிலும், சாகுபடி செய்யலாம்!

நூக்கலை இயற்கை முறையில் பயிர் செய்வது குறித்து, நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாய ஆலோசகர் மகேஷ் சொன்ன விஷயங்கள் இங்கே... ''நூக்கலை, ஊடுபயிராகவோ, தனிப்பயிராகவோ இரண்டு முறைகளிலுமே சாகுபடி செய்யலாம். தனிப்பயிராக சாகுபடி செய்ய, ஒரு ஏக்கருக்கு ஒன்றரை கிலோ விதை தேவைப்படும். நாற்று நடவு முறையில் சாகுபடி செய்ய, குழித்தட்டுகளில் நாற்றுகளை உற்பத்தி செய்ய வேண்டும். குழித்தட்டில் தேங்காய் நார், மண்புழு உரம் ஆகியவற்றைப் போட்டு நிரப்பி, விதைகளை ஊன்றி விட வேண்டும். தினமும் பூவாளி மூலமாக தண்ணீர் தெளித்து வந்தால், 25 நாட்களில் நாற்று தயாராகி விடும்.

50 சென்ட்... 60 நாள்... 60 ஆயிரம்...

10 டன் தொழுவுரம், ஒரு கிலோ பவேரியா பேசியானா, 5 கிலோ மணல், ஒரு கிலோ கொம்புசாணம் அல்லது ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், ஒரு கிலோ பாஸ்போ-பாக்டீரியா ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, ஒரு ஏக்கர் சாகுபடி நிலத்தில் தூவி... இரண்டு சால் உழவு ஓட்டி, பார் பாத்திகளை அமைத்துக் கொண்டு, நான்கு அங்குல இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். 8-ம் நாள், ஏக்கருக்கு 4 டேங்க் (10 லிட்டர்) வேப்பங்கொட்டைக் கரைசலை (100 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ பச்சை வேப்பங்கொட்டையை நசுக்கி 3 நாட்கள் ஊற வைத்த கரைசல்) தெளிக்க வேண்டும். இது, வெட்டுப்புழு, வேர்களைத் தாக்குகிற வெள்ளைப் புழு, கருப்புப் புழுக்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். நடவு செய்த 8 நாட்கள் முதல் 14 நாட்களுக்குள் நிலத்தைக் கொத்தி களைகளை அகற்றி, ஒன்றரை டன் மண்புழு உரத்தைத் தூவி பாசனம் செய்ய வேண்டும். 35-ம் நாளில் ஒன்றரை டன் மண்புழு உரம் கொடுக்க வேண்டும்.

15 மற்றும் 45-ம் நாட்களில் பத்து லிட்டர் தண்ணீருக்கு, 100 கிராம் சூடோமோனஸ் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு 4 டேங்குகள்  தேவைப்படும். இது, இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்தும்.

45-ம் நாளுக்கு மேல் பாத்திக்கு ஒரு லிட்டர் பிண்ணாக்குக் கரைசல் (40 கிலோ கடலைப் பிண்ணாக்கு, 60 கிலோ ஆமணக்குப் பிண்ணாக்கு, 100 கிலோ பசுஞ்சாணம்,

3 கிலோ வெல்லம், ஆகியவற்றை 300 லிட்டர் தண்ணீரில் மூன்று நாட்களுக்கு ஊறவைத்த கரைசல்) தெளிக்க வேண்டும். நூக்கல் குடும்பத்தைச் சேர்ந்த முட்டைகோஸ், காலிஃபிளவர்... பயிர்களை அருகில் சாகுபடி செய்தால், கெண்டை நோய் தாக்க வாய்ப்பு உள்ளது.

வழக்கமாக, நீலகிரி மலைப்பகுதியில் நாற்று நடவு செய்து 55 நாட்கள் கழித்துதான், (அதாவது, விதைத்து 80 நாட்கள் ) அறுவடை செய்வோம். ஆனால், ஓசூர் பகுதிகளில் தேவை காரணமாக, விதைத்து 60 நாட்களுக்குள்ளாகவே அறுவடை செய்து விடுகிறார்கள். நாட்கள் விட்டு அறுவடை செய்தால், கிழங்கின் எடை அதிகரிக்கும்'' என்றார்.  

மொத்த விலைக்கும் விற்க முடியும்!

பென்னிக்கல் என்கிற கிராமத்தில் நூக்கல் பயிரிட்டிருக்கும் வெங்கடசாமி,

50 சென்ட்... 60 நாள்... 60 ஆயிரம்...

''25 வருஷமா விவசாயம் செஞ்சுட்டு இருக்கேன். 30 சென்ட்ல நூக்கல் போட்டிருக்கேன். நானே அறுவடை பண்ணி, மூட்டை பிடிச்சு அனுப்பறது சிரமம். அதனால, தோட்டத்தை மொத்த விலைக்குப் பேசி விட்டுட்டேன். அவங்களே அறுத்து எடுத்திட்டு போயிடுவாங்க. சந்தை விலையைப் பத்தி நமக்கு கவலையில்ல. ஒவ்வொரு முறையும் செய்ற செலவைப் பொருத்து கட்டுபடியாகற விலைக்குப் பேசி விட்டுடுவேன். இந்த முறை முப்பதாயிரம் ரூபாய்னு பேசி விட்டுருக்கேன். அதுலயே எல்லா செலவும் போக, எப்படியும் பதினஞ்சாயிரம் ரூபாய் கையில நிக்கும்'' என்று தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு