மதிப்புக்கூட்டும் மந்திரம்! 
லாபத்தைப் பெருக்கும் லட்டு தொடர்!

##~##

உலக அளவில் வாழை உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. ஒட்டுமொத்த உற்பத்தியில் 25 சதவிகிதம் இந்தியாவில்தான் பயிரிடப்படுகிறது. வாழையில் நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின்-சி உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இது, உடல் நலத்துக்கு மிகவும் உறுதுணையானது. ஆனாலும் கூட, நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வாழை முழுமையாக நுகர்வோரைச் சென்றடைவதில்லை.

நன்கு முதிர்ந்து, பழுக்கத் தொடங்கும் நிலையில், அறுவடை செய்யப்படும் வாழையை சுமார் 10 நாட்கள் வரை மட்டுமே இருப்பு வைக்க முடிகிறது. அறுவடை செய்யப்பட்ட வாழையில் எத்திலீன் வாயு தொடர்ச்சியாக உற்பத்தியாவதால்... அதை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்க முடியாது. அதனால், தரம் குறைந்து கொண்டே வந்து ஒரு கட்டத்தில் முழுமையாக வீணாகி விடும். இதனால், விவசாயிகளுக்கு ஏராளமான பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் ஆண்டுக்குக் கிட்டத்தட்ட

180 கோடி ரூபாய் மதிப்புள்ள வாழைப்பழங்கள் வீணாகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமானால், வாழையானது... பணப்பயிராக மாற்றப்பட வேண்டும். அதாவது, வாழையில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கப்பட வேண்டும். அவற்றைத் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள் பற்றிப் பார்ப்போம்.

குறைந்த வெப்பநிலையில் சேமித்தல்!

பழுத்த நிலையில் உள்ள வாழைப் பழங்களை குளிர்சாதனப் பெட்டியில் 10 டிகிரி சென்டிகிரேட் முதல் 11 டிகிரி சென்டிகிரேட் வரையிலான வெப்பநிலையில், 85% முதல் 95% ஈரப்பதத்தில் சேமித்து வைக்கும்போது, 3 வாரங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

வாழைப் பழரசம்!

பழரசம் அருந்துவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், இதற்கான விற்பனை வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. 20 சதவிகிதம் வாழைப் பழச்சாறு, 15 சதவிகிதம் சர்க்கரை, 0.3 சதவிகிதம் உப்புடன் கூடிய எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைக் கொண்டு பழரசம் தயாரிக்க முடியும். இதற்கு புளிப்பு மற்றும் இனிப்புத் தன்மை அதிகமுள்ள ரகங்கள் ஏற்றவை. ஒரே நிலையில் பழுத்த நல்ல தரமான பழங்களைத் தேர்வு செய்து, அவற்றை நன்கு கூழாக்கி, அதனுடன் உப்புடன் கூடிய எலுமிச்சைச் சாறைக் கலந்து... 40 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் வைக்க வேண்டும். 12 மணி நேரம் முதல் 32 மணி நேரத்துக்குள், வாழைப் பழக்கூழில் இருந்து தெளிந்த சாறு மட்டும் தனியாகப் பிரியும். இதனை வடிகட்டி எடுத்துக் கொண்டு, அதில் சர்க்கரைப் பாகை சேர்த்து, 85 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் 5 நிமிடம் சூடுபடுத்தி, அதே கொதிநிலையில் கிருமி நீக்கம் செய்யப்பட்ட டின்கள் அல்லது பாட்டில்களில், நிரப்பி மூட வேண்டும். இது 6 மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

வகை வகையாய் வாழைப் பொருட்கள் !

வாழைப்பழ பவுடர்!

நன்கு முதிர்ச்சி அடைந்த வாழைப்பழங்களை 5 மில்லி மீட்டர் முதல் 7 மில்லி மீட்டர் அளவு தடிமனில் துண்டுகளாக்கி, சல்பர்-டை-ஆக்சைடு கரைசலில் ஒரு நிமிடம் ஊற வைக்க வேண்டும். அவற்றை, தட்டு உலர்த்தியில், 60 டிகிரி சென்டிகிரேட் முதல் 75 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் உலர்த்த வேண்டும். உலர்த்தியில் துண்டுகளைப் பரப்பும் போது, ஓர் அடுக்கு மட்டுமே இருக்க வேண்டும். ஒன்றின் மீது ஒன்றாக வைக்கக் கூடாது. உலர்ந்தத் துண்டுகளை, அரவை இயந்திரத்திலிட்டு, பொடியாக்கி பிரத்யேக பைகளில் சேமித்து, தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். இப்பொடியை பாலில் கலந்து ஊட்டச்சத்து பானமாக அருந்தலாம். குழந்தைகளுக்கான உணவுத் தயாரிப்பு மற்றும் பால் சார்ந்த பழ பானங்களிலும் இதைப் பயன்படுத்தலாம். காய்கறி சூப்பில், கலந்தும் சாப்பிடலாம்.

மனித உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தரக்கூடிய மிக முக்கிய ஊட்டச்சத்தான கார்போ-ஹைட்ரேட், வாழைப் பழப்பொடியில் நிறைந்து காணப்படுகிறது. தற்போது, மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள நூடுல்ஸ், மேக்ரோனி, சேமியா... போன்றவற்றை, வாழைப் பழப்பொடியைக் கொண்டு தயாரிக்கலாம். அல்சர் நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய நுண்ணூட்டச் சத்துக்களும் இதில் நிறைந்துள்ளன.

வகை வகையாய் வாழைப் பொருட்கள் !

வாழைக்காய் வற்றல்!

முதிர்ந்த நிலையில் உள்ள வாழைக்காயைத் தேர்ந்தெடுத்து, தோல் நீக்கி அரை சென்டி மீட்டர் தடிமனில் நறுக்கிக் கொள்ள வேண்டும். இவற்றின் நிறம் மாறாமல் இருக்க, பதனக்கரைசலில் 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வேக வைக்க வேண்டும். பிறகு,  மின்சாரம் மூலம் இயங்கும் உலர்த்தி  ( டிரையர்) அல்லது சூரிய உலர்த்தியிலிட்டு உலர்த்த வேண்டும். நன்கு உடையக்கூடிய தன்மை வரும் வரை உலர்த்திய பிறகு, பிரத்யேக பைகளிலிட்டு தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். பல மாதங்களுக்கு இது தரம் குறையாமல் இருக்கும். சாம்பார், குழம்பு, வறுவல், பொரியல் போன்றவற்றுக்கு இதைப் பயன்படுத்தலாம்.

வாழை சிப்ஸ்!

தோல் நீக்கிய வாழைக்காயை, உப்புக் கரைசலிலிட்டு, குளிர் நிலையில் ஒரு நிமிடம் வைக்க வேண்டும். பிறகு, அரை மில்லி மீட்டர் அல்லது ஒரு மில்லி மீட்டர் தடிமனுக்கு துண்டுகளாக்கி, 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு, வாழைக்காய்த் துண்டுகளை மெல்லியத் துணியில் பரப்ப வேண்டும். ஈரம் முழுமையாக உலர்ந்த பிறகு, கொதிநிலையிலுள்ள எண்ணெயிலிட்டு பொரிக்கலாம். எண்ணெயில் சிறிதளவு உப்புக்கரைசல் சேர்த்தால், சிப்ஸ் மொறுமொறுப்பாக இருக்கும்.  

வாழைத்தோல் வினிகர்!

சமைத்த உணவுப்பொருட்கள் கெட்டுப் போகாமல் இருக்கவும், சுவையை அதிகரிக்கவும் வினிகர் சேர்க்கும் வழக்கம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இதற்கு வாழைப்பழத்தின் தோல் அல்லது காயின் தோலைப் பயன்படுத்தலாம். நன்கு சுத்தம் செய்து, மண் ஜாடியில் இட்டு, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் நிரப்பி... வெல்லம் மற்றும் ஈஸ்ட் சேர்த்து காற்று புகாதவாறு, ஜாடியின் வாய்ப்பகுதியை ஒரு மெல்லியத் துணியால் இறுக்கி கட்ட வேண்டும். அது, நன்கு புளித்த பிறகு வடிகட்டி, 10 நிமிடம் சூடாக்கி, பிறகு நன்கு குளிர வைத்து, வடிகட்டினால் வினிகர் தயார். இதை, கிருமி நீக்கம் செய்யப்பட்ட கலன்களில் நிரப்பி சேமித்து வைக்கலாம்.

வாழைப்பழ ஜாம்!

நன்கு பழுத்த வாழைப்பழங்களைக் கூழாக்கி, அதன் எடையில் 50% முதல் 75% வரை சர்க்கரையும், 1% அளவு எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து சூடாக்க வேண்டும். வெப்பநிலை, 112 டிகிரி சென்டிகிரேடை அடைந்ததும், சூடாக்குவதை நிறுத்தி, வெப்பநிலை 80 சதவிகித அளவுக்குக் குறைவதற்கு முன் பாட்டில்களில் நிரப்பி மூடி வைத்தால்... வாழைப்பழ ஜாம் தயார்.

- மதிப்புக் கூடும்.