Published:Updated:

காசு... பணம்... துட்டு... மரம், மரம்!

ஜி. பழனிச்சாமி படங்கள்: தி. விஜய்

காசு... பணம்... துட்டு... மரம், மரம்!

ஜி. பழனிச்சாமி படங்கள்: தி. விஜய்

Published:Updated:

 வனம்

##~##

'மரம், மண்ணின் வரம்!’ என்றார், கவிஞர் வைரமுத்து. 'அவை, மனிதனுக்கு வளம்’ என்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த முன்னோடி மரப்பயிர் விவசாயி, தேவராஜன். கடந்த 12 ஆண்டுகளாக கோயம்புத்தூர் மாவட்ட மரம் மற்றும் மூலிகைப் பயிர் வளர்ப்போர் சங்கத்தின் தலைவராக இருக்கும் தேவராஜன், அன்னூர் அடுத்துள்ள கானூர்புதூர் கிராமத்திலிருக்கும் தனது 10 ஏக்கர் நிலத்தில், பலவிதமான மரங்களை வளர்த்து வருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சமீபத்தில், பெய்த பெருமழையின் ஈர மண்வாசனை, சிலிர்க்க வைக்கும் சிலுசிலு காற்று, குறுக்கும் நெடுக்குமாக காற்றில் ஏரோட்டும் பட்டாம் பூச்சிகள், குட்டி 'ஹெலிகாப்டர்’களாக வட்டமடிக்கும் தும்பிகள், பெயர் தெரியாதப் பறவைகளின் கவியோசை... என சிறிய வனத்துக்கு உண்டான அத்தனை அம்சங்களுடனும் இருக்கிறது, அவருடையத் தோட்டம்.

ஆங்காங்கு கமகம வாசம் வீசும் பவளமல்லி; பறவைகளை ஈர்க்கும் சிங்கப்பூர் செர்ரி; கமண்டலம் செதுக்கத் தேவையான பலாசு மரம்; மணம் வீசும் இலைகளைக் கொண்ட பன்னீர் புஷ்ப செடிகள்; காற்றைச் சுத்திகரிக்கும் 'ஆத்துவாரி’ செடிகள்; பகலில் வாசனை வீசி உற்சாகம் ஏற்படுத்தும் 'டே குயின்’ மரம்; இரவில் மட்டுமே வாசனை வீசும் 'நைட் குயின்’ மரங்கள் என ஏகப்பட்ட மரங்களும் செடிகளும் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கின்றன அங்கே!

காசு... பணம்... துட்டு... மரம், மரம்!

உள்ளே நடந்து கொண்டே பேச ஆரம்பித்த தேவராஜன், ''நான், பூர்விகமா விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவனா இருந்தாலும், படிச்சு முடிச்சு லாரி தொழில் செய்ய கோயம்புத்தூர் வந்துட்டேன். வீட்டுக்குப் பக்கத்துல குமரவேலுனு வனத்துறை அதிகாரி ஒருத்தர் இருந்தார். அவரு கொடுத்த 'ஐடியா’தான் மரப்பயிர் விவசாயம் பக்கம் என்னை இழுத்துச்சு. பிறகு, அடிக்கடி வனத்துறை நடத்துற பயிற்சிகள்லயும் கலந்துக்கிட்டேன். தமிழ்நாட்டுல முதன்முதலா, வன விரிவாக்க மையத்தின் ஆதரவுல 'மரம் வளர்ப்போர் சங்க’த்தையும் கோயம்புத்தூர்ல தொடங்கியிருக்கோம். 450 உறுப்பினர்களோட இன்னிக்கும் சிறப்பா செயல்பட்டுட்டு வர்றோம்'' என்று முன்கதை சொன்னவர், தொடர்ந்தார்.  

முழு இயற்கை முறை!

''ஆரம்பத்துல மேம்போக்காதான் மரம் வளர்ப்பில் ஈடுபட்டேன். 'பசுமை விகடன்’ அறிமுகத்துக்குப் பிறகு, நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர்னு எல்லாரோட கருத்துரைகளையும் தெரிஞ்சுக்கிட்டு முழுக்க இயற்கை வழிக்கு மாறிட்டேன். நிலத்தை உழவு செய்றதில்ல. புல், பூண்டு, செடி, கொடிகளைப் பிடுங்கி அப்படியே மூடாக்கா போட்டுடறேன். மரத்திலிருந்து விழுற இலை, தழைகளும் மண்ணுல கிடந்து மட்கி, உரமாகிடுது. என்னோட நிலத்துல வரப்புப் பயிராகவும், தனிப் பயிராகவும் பல விதமான மரங்களையும், மூலிகைகளையும் வளர்த்துட்டு வர்றேன்.

காசு... பணம்... துட்டு... மரம், மரம்!

எல்லா மரங்களுக்கும் சொட்டுநீர்ப் பாசனம்தான். எந்த மரமா இருந்தாலும், நட்ட ரெண்டு வருஷம் வரைக்கும், வாரம் மூணு தடவை... பிறகு, வாரம் ஒரு தடவைனு தண்ணி பாய்ச்சினா போதும். ஒவ்வொரு மரத்துக்கும் தேவைப்படுற அளவுக்கு தவறாம கவாத்து பண்ணிடுவேன். தென்மேற்குப் பருவமழை ஆரம்பமாகறதுக்கு முன்ன ஒரு மரத்துக்கு 5 கிலோ தொழுவுரம் கொடுத்துடுவேன். வடகிழக்குப் பருவமழை சமயத்துல ஒவ்வொரு மரத்துக்கும், ஒரு கிலோ கோழி எரு, ரெண்டு கிலோ மண்புழு உரத்தைக் கலந்து கொடுத்துடுவேன். நோய் எதிர்ப்புக்காகவும், வளர்ச்சி ஊக்கியாவும் செயல்படுறதுக்காக... பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் ரெண்டையும் மாத்தி மாத்தி, மாசத்துக்கு ஒரு தடவை, பாசனத் தண்ணியில கலந்து விடுவேன். தெளிச்சும் விடுவேன்.

10 அடி இடைவெளியில தனிப் பயிராவும், 5 அடி இடை வெளியில வரப்புப் பயிராவும் 550 மலைவேம்பு மரங்கள் இருக்கு. எல்லாத்துக்கும் நாலு வயசுல இருந்து ஏழு வயசுக்குள்ள இருக்கும். தீக்குச்சி கம்பெனிகள், அஞ்சு வயசுள்ள மலைவேம்பு மரங்களை வாங்கிக்கறாங்க. 10 வயசு மரங்களை பிளைவுட் கம்பெனிக்காரங்க வாங்கிக்கிறாங்க. இதுபோக, வெள்ளைக் கடம்பு, மகோகனி, மூங்கில், சந்தனம், பதிமுகம், செஞ்சந்தனம், குமிழ், பீநாரி, தேக்கு, வேங்கை மாதிரியான மரங்களையும் வளத்துட்டு இருக்கேன்'' என்ற தேவராஜன், தோட்டத்தில் உள்ள ஒவ்வொரு மரத்தைப் பற்றியும் விவரிக்கத் தொடங்கினார் (வணிக ரீதியான மரங்கள் பற்றி தேவராஜன் சொன்ன விஷயங்கள் தனி அட்டவணையில்).

தொடர் வருமானத்துக்கு புன்னை!

''வரப்புப் பயிரா 15 அடி இடைவெளியில, நாலு வயசான 20 புன்னை மரங்கள் இருக்கு. இது, அஞ்சு வருஷத்துல பலன் கொடுக்கும். 50 வருஷம் வரைக்கும் விதைகளை சேகரிச்சு விக்கலாம். இந்த விதையிலிருந்து பயோ-டீசல் உற்பத்தி செய்யலாம். ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்கு 300 கிலோ விதை கிடைக்கும். ஒரு கிலோ விதை 15 ரூபாய்னு விலை போகுது. தேனீக்களை ஈர்க்கும் ஆற்றல் புன்னை மரத்துக்கு உண்டு. தேனீ வளப்புக்கு இந்த மரம் ரொம்ப உதவியா இருக்கும்.

காசு... பணம்... துட்டு... மரம், மரம்!

இலுப்பை!

இலுப்பை விதைகள்ல இருந்தும் ஆயில் எடுக்கலாம். 10 வருஷத்துல இருந்து இந்த மரம் பலன் கொடுக்கும். ஒரு மரத்தில் இருந்து வருஷத்துக்கு குறைஞ்சபட்சமா

250 கிலோ விதை கிடைக்கும். ஒரு கிலோ, 200 ரூபாய் வரை விலை போகுது. என் தோட்டத்துல அங்கங்க பரவலா நாலு மரங்கள் நிக்குது.

டிம்லா அத்தி!

இது ஒரு வகை அத்திப் பழ மரம். இந்தப் பழத்துல இரும்புச்சத்து அதிகமா இருக்கு. மரத்தோட வேர் பகுதியில கொத்துக் கொத்தா பழங்கள் காய்க்கும். ஒரு வருஷத்துக்கு ஒரு மரத்துல இருந்து, 50 கிலோ அளவுக்கு பழங்கள் கிடைக்குது. ஒரு கிலோ, 400 ரூபாய்க்கு விக்குது. என்கிட்ட 3 மரங்கள் இருக்கு.

காசு... பணம்... துட்டு... மரம், மரம்!

ஏழிலைப் பாளை!

இது ஒரு மூலிகை மரம். ஏழு இலைகள் கொண்ட விழுதுகள் இருக்கறதால, இந்த பேர் வந்துடுச்சு. அஞ்சு வருஷத்துல இருந்து அறுபது வருஷம் வரைக்கும் பலன் கொடுக்கும். இதோட, இலை, பட்டைகளை விக்கலாம். ஒரு கிலோவுக்கு 50 ரூபாய் விலை கிடைக்கும். சித்த மருத்துவர்கள் தேடி வந்து வாங்கிக்குவாங்க.

இயற்கைச் சாயத்துக்கு அனாட்டா!

கொய்யா செடி போல கிளை பரப்பி வளர்ற இந்தச் செடியோட காய்கள் சிவப்பு நிறத்துல கொத்துக் கொத்தா தொங்கும். பழங்கள்ல இருக்கற விதைகளை எடுத்து கசக்கிப் பிழிஞ்சா, சாந்துப் பொட்டு நிறத்துல திரவம் வரும். துணிகளுக்கு இயற்கைச் சாயம் ஏத்தவும், தின்பண்டங்களுக்கு கலர் கொடுக்குறதுக்காகவும் இது பயன்படுது. எதிர்காலத்தில இதோட தேவை அதிகமா இருக்கும்.

இயற்கைச் சாயத்துக்கு பயன்படுற 'டிங் ஆயில்’ மரமும் மூணு இருக்கு. அஞ்சு வயசுல இருந்து எழுபது வயசு வரைக்கும் மகசூல் கொடுக்குற இந்த மரத்துல இருந்து வருஷத்துக்கு அஞ்சாயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

தான்றி!

என்கிட்ட அஞ்சு வயசுள்ள 10 தான்றி மரங்கள் வரப்புல நிக்குது. பத்து வருஷத்துல இருந்து தான்றிக்காய் கிடைக்கும். ஒரு மரத்துக்கு சராசரியா 100 கிலோ காய் கிடைக்கும். இந்த காய்களுக்கு மருத்துவ குணம் உண்டு. சர்வரோக நிவாரணியான திரிபலா சூரணம் தயாரிக்க

காசு... பணம்... துட்டு... மரம், மரம்!

முக்கிய மூலப்பொருள் இது. ஒரு கிலோ, 50 ரூபாய்க்கு மேல விற்பனையாகுது.

பாதாம் மரம்!

பாதாம் மரம் பத்து வயசுல இருந்து மகசூல் கொடுக்கும். ஒரு மரத்துல இருந்து 10 கிலோ அளவுக்கு பருப்பு கிடைக்கும். ஒரு மரத்திலிருந்து வருஷத்துக்கு ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். என்கிட்ட பத்து மரங்கள் இருக்கு.

நோனி (வெண் நுணா)!

'பல வகை நோய்களை குணப்படுத்துற மருத்துவ குணம் இதுக்கு இருக்கு. இந்தப் பழச்சாறை தினமும் குடிச்சா புற்றுநோய் கூட குணமாகும்’னு சொல்றாங்க. என்கிட்ட ஆறு மரங்கள் இருக்கு. அஞ்சு வருஷத்துக்கு பிறகு, ஒரு மரம் மூலமா வருஷத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

இதுபோக, பெங்களூரா ரகத்துல, அஞ்சு வயசுள்ள 15 மாமரங்கள் நிக்குது. வருஷத்துக்கு இரண்டு அறுவடை மூலம் மரத்துக்கு 150 கிலோ கிடைக்கும். கிலோ 30 ரூபாய்க்கு குறைஞ்சு இதுவரைக்கும் வித்ததில்லை. இயற்கை விளைபொருள் விக்குற கடைக்காரங்க நேரடியாக வந்து வாங்கிக்கிறாங்க. பரவலா 30 பெருநெல்லி மரங்க இருக்கு. ஒரு மரத்துல வருஷத்துக்கு 100 கிலோ காய் கிடைக்கிது. அது மூலமா வீட்டுல நெல்லிக்காய் ஜூஸ் தயாரிச்சு அக்கம் பக்கத்தில விற்பனை செய்றோம்'' என்று தெளிவாக விவரங்களை அடுக்கிய தேவராஜன்,

காசு... பணம்... துட்டு... மரம், மரம்!

''இப்போதைக்கு உத்தேசமான வருமானத்தைத்தான் சொல்லியிருக்கேன். இதுவரைக்கும் அஞ்சு லட்ச ரூபாய் செலவாகியிருக்கு. இன்னும் 5 வருஷம் கழிச்சு, கோடிகளில் வருமானம் பாத்துடுவேன்னு நம்பிக்கை இருக்கு.

மனுசங்க கைவிட்டாலும் மரங்கள் கைவிடாது. ஒவ்வொருத்தரும் நிலத்துல நட்டு வெக்குற மரங்க, 'பேங்க்’ல போடுற 'ஃபிக்சட் டெபாசிட்’ மாதிரி. பத்து வருஷத்துல பல மடங்கு அதிகமா திரும்பி வரும்'' என்று சொல்லி விடைகொடுத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism