Published:Updated:

கோவணாண்டி - விவசாயிகள பலி கொடுத்தா... ஆட்சியும் பலியாகிடும்...

இத்தாலி சோனியாவுக்கு, இந்திய கோவணாண்டி எச்சரிக்கை

கோவணாண்டி - விவசாயிகள பலி கொடுத்தா... ஆட்சியும் பலியாகிடும்...

இத்தாலி சோனியாவுக்கு, இந்திய கோவணாண்டி எச்சரிக்கை

Published:Updated:

முறையீடு

##~##

''பாரத தேசத்த உலக அரங்குல நம்பர் ஒன் நாடா மாத்திக் காட்டப் போறோம்னு உதார் வுடுற கதர்சட்டைங்களோட பாசக்கார அன்னை; கலைஞரய்யாவோட நடமாடும் மணிமேகலை; கோவணாண்டிங்க குலத்துக்கு ஓயாம வேட்டு வைக்கிற இத்தாலி அம்மாவுக்கு... வணக்கம் சொல்லிக்கிறான் இந்தக் கோவணாண்டி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'உலகத்துலயே நம்பர் ஒன் ஊழல் பண்ணினதை (2-ஜி ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, காமன்வெல்த்...) பத்திதானே சொல்ல வந்திருக்கே?'னு நீங்க அக்கினிப் பார்வை வீசுறது நல்லாவே சுடுது தாயீ. ஆனா, அது போன மாசம்... நான் சொல்ல வந்தது இந்த மாசம்.

அதாவது, 'உணவுப் பாதுகாப்புச் சட்டம்'னு ஒண்ண போட்டு வெச்சு, எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு

82 கோடி பேரை பிச்சைப் பாத்திரம் ஏந்த வெச்சு, உங்களுக்குனு தனிப் பெருமையத் தேடிக்கிட்டீங்க பாருங்க... அதை யாராலயும் அடிச்சுக்கவே முடியாது... அடிச்சுக்கவே முடியாது... அடிச்சுக்கவே முடியாது! இதை கின்னஸ் புத்தகத்துல கட்டாயம் போடச் சொல்லுங்க. இல்லாட்டி, தஞ்சாவூர் பெரியக் கோயில் கல்வெட்டுலயாவது எழுதி வைக்க ஏற்பாடு பண்ணுங்க. அப்பதானே வருங்கால சந்ததிங்ககிட்டயும்... உங்க ஆட்சியோட லட்சணம் சந்தி சிரிக்கும்!

எத்தைத் தின்னா பித்தம் தெளியுங்கிற கணக்கா, எதையாவது செஞ்சு, பாசக்கார மகன் ராகுலுக்கு பட்டாபிஷேகம் கட்டத் துடிக்கிறீங்க. அதுக்காக, ஏழைகளுக்கு இலவச செல்போன்... மலிவு விலை உணவு தானியம்... அது, இதுனு கலர்கலரா கழட்டி விட்டுக்கிட்டே இருக்கீங்க. 'இலவசத்துக்கே குரு'க்களான எங்க ஊரு கருணாநிதி, ஜெயலிதாவையும்கூட மிஞ்சிடுவீங்க போலிருக்கு. 'டாலர் கொடுத்தா... இந்தியா இலவசம்'னு அமெரிக்காரன்கிட்ட வித்துடாம இருந்தா சரி!

கோவணாண்டி - விவசாயிகள பலி கொடுத்தா... ஆட்சியும் பலியாகிடும்...

'இது என்னோட வாழ்நாள் கனவுத் திட்டம். இதை நிறைவேத்த பணம் இருக்குதா... இல்லையானு பாக்கக்கூடாது. விவசாயிங்க இருக்காங்களா... செத்தாங்களானு பாக்கக்கூடாது. நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா... நாலு லட்சம் பேரு செத்தாலும் பரவாயில்ல’ங்கற மாதிரி... சும்மா பட்டைய கிளப்பியிருக்கீங்க.

'இது பசி ஒழிப்புத் திட்டம், பட்டினி ஒழிப்புத் திட்டம், மக்கள் அனைவருக்கும் ஊட்டச்சத்து ஏற்றுகிற திட்டம்... குறிப்பா பெண்கள், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு நீக்கி, புஷ்டியாக்குற திட்டம்...'னு சந்தையில தாயத்து விக்கிறவன் கணக்கா... உடுக்கையை நீங்க சுழட்டுற வேகத்தைப் பாத்து... உடுக்கைக்கு சொந்தக்காரங்களான பி.ஜே.பி-க்காரங்களே வாயடைச்சுப் போயிட்டாங்களாமே. நீங்க சகாய விலையில கொடுக்கப் போற 5 கிலோ ஐயிட்டத்துல... இத்தனை சமாச்சாரமா? ஒருவேளை நீங்க அளக்கப்போற தானியங்கள்ல, தங்க பஸ்பத்தைக்கூட கலக்கப் போறீங்களோ..! அதுக்காகத்தான், 'கோயில்கள்ல இருக்கற தங்கத்தையெல்லாம் அள்ளிக் கொடுங்க'னு நைஸா கேக்க ஆரம்பிச்சுருக்கீங்களோ!

இந்த உணவு பாதுகாப்புச் சட்டத்தை வெச்சுக்கிட்டு காமெடி, கீமெடி பண்ணலையே!

ஏன் கேக்குறேன்னா... இப்ப உள்நாட்டுல கொள்முதல் செய்யுற ஆறேழு கோடி டன் தானியங்களையே ஒழுங்கா பராமரிச்சு, பாதுகாத்து, ஏழை ஜனங்களுக்குக் கொடுக்கறதுக்கு வக்கில்ல. 'போதுமான குடோன்கள் இல்லை'னு உங்கள பிரதமர் நாற்காலியில உக்காரவிடாம செய்துட்டு, உங்கக் கூடவே ஒட்டிக்கிட்டு வேளாண் மந்திரி பதவியைப் பிடிச்சுட்ட சரத் பவார், உண்மைகள போட்டு உடைச்சுட்டு இருக்கார். அப்படியிருக்கறப்ப, உங்க கனவுத் திட்டத்துக்கு அறுபது, எழுபது கோடி டன் உணவு தானியம் தேவைப்படுமே... எங்கே இருந்து கொள்முதல் செய்வீங்க... எங்க கொண்டு போய் பாதுகாப்பீங்க. ஒருவேளை, நேரடியா ஹெலிகாப்டர் மூலமா வீடுதோறும் கூரையைப் பிச்சுக்கிட்டு கொட்டுவீங்களோ!  

ஏற்கெனவே உள்நாட்டு உற்பத்தி பொருளுங்கள வாங்குறதுல காட்டுற அக்கறையவிட, வெளிநாட்டுல இருந்து இறக்குமதி பண்றதுலதான் ஓயாம ஆர்வம் காட்டுறீங்க. அதுல கோடிகள்ல ஊழல்... கமிஷன்னு உலகமே நாறுது உங்க ஆட்சியோட லட்சணம். இதுல கனவுத் திட்டம் அமலுக்கு வந்துட்டா...  20 கோடி டன், 40 கோடி டன் இப்படி இறக்குமதி செய்ய ஆரம்பிச்சுடுவீங்க. கமிஷனும் பெருசு பெருசா வரும். இதுக்கு ஆசைப்பட்டு, உள்நாட்டு கோவணாண்டிகளோட உற்பத்திப் பொருளையெல்லாம் வீதியில கொட்ட வெச்சு, இந்த ஒரே சட்டத்தால திருவோடு ஏந்த வைக்கப் போறீங்க. உள்நாட்டு விவசாயிகளை ஒழிச்சுட்டு, உலக கார்ப்ரேட் விவசாயிகளுக்கு வாழ்வு கொடுக்க தீர்மானிச்சுட்டிங்க.

இந்த உணவுப் பாதுகாப்புச் சட்டம், முழுக்க முழுக்க விவசாயிகள் ஒழிப்புத் திட்டம்னு தெரிஞ்சுருந்தும்... சின்னக் கட்சி, பெரியக் கட்சி, எதிர்க் கட்சினு எந்தக் கட்சியுமே வாயைத் திறக்கலியே. எப்படி திறப்பாங்க? காங்கிரஸ் கட்சிக்கு இது ஓட்டுப் பொறுக்குறச் சட்டம். மத்த கட்சிகளுக்கு... ஓட்டுப் பாதுகாப்புச் சட்டம். எதையாவது பேசி, இருக்கற ஓட்டுக்கும் ஆபத்து வந்துடக்கூடாதுல்ல.

ஏழைகளுக்கு உணவை உறுதிப்படுத்துறதுல தப்பே இல்ல. இன்னிக்கு நாடு நாசமா போயிட்டிருக்கற சூழல்ல... ஒருவேளை சாப்பாட்டுக்கூட வழியில்லாம வாடுற ஏழைகளோட எண்ணிக்கை அதிகரிச்சுட்டேதான் இருக்கு. ஆக, ஏழைகளுக்கு 3 வேளை உணவைக் கூட உறுதிப்படுத்துங்க. அதுக்காக உள்ளூர் விவசாயிகள பலி கொடுத்துதான் ஆகணும்னு உடுக்கையை அடிச்சுட்டே இருந்தீங்கன்னா.... உங்க ஆட்சியையே பலிகொடுக்க வேண்டியிருக்கும் ஜாக்கிரதை!

இப்படிக்கு,
கோவணாண்டி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism