Published:Updated:

ஏழே ஆண்டில் ஏக்கருக்கு 12.5 லட்சம் !

செலவுக்கு வாழை... வரவுக்கு மலைவேம்பு ! ஆர். குமரேசன். படங்கள்: வீ. சிவக்குமார்.

ஏழே ஆண்டில் ஏக்கருக்கு 12.5 லட்சம் !

செலவுக்கு வாழை... வரவுக்கு மலைவேம்பு ! ஆர். குமரேசன். படங்கள்: வீ. சிவக்குமார்.

Published:Updated:
##~##

'தனி மரம் தோப்பாகாது’ என்பது போல, ஒரே பயிர் செய்து கையைச் சுட்டுக் கொள்வதைவிட, கூட்டுப் பயிர் விவசாயம் செய்தால்தான் கரையேற முடியும் என்பது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. இதை உணர்ந்து கொண்ட பல விவசாயிகள், கூட்டுப்பயிர் விவசாயத்தில் சத்தமே இல்லாமல் சாதனை படைக்கிறார்கள். அப்படித்தான், திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள விராலிப்பட்டி ராமசாமி, வாழைக்கு இடையில் கலக்கலாக மலைவேம்பு சாகுபடி செய்து வருகிறார்!

ஓய்வுபெற்ற தோட்டக்கலைத்துறை அலுவலரான ராமசாமி, தற்போது முழுமையான விவசாயியாக அசத்திக் கொண்டிருக்கும் அந்தத் தோட்டத்துக்குள் நுழைந்தால்... பாதையின் இருபுறமும் தேக்கு, குமிழ் மரங்கள் பசுமை காட்டி வரவேற்கின்றன. வாழை மரங்களுக்கிடையில் ஓங்கி வளர்ந்திருந்த மலைவேம்பு மரத்தைத் தழுவியபடியே பேசத் தொடங்கினார் ராமசாமி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வேலையில இருந்ததால விவசாயத்தை முழுமையா கவனிக்க முடியாமப் போச்சு. ஓய்வுக்குப் பிறகு விவசாயம்தான்னு முடிவு செஞ்சேன். தோட்டத்திலேயே சின்னதா வீட்டைக் கட்டியிருக்கேன். நானும், என் மனைவியும்தான் விவசாயத்தை கவனிச்சுக்குறோம். எங்களுக்கு இருக்கற 8 ஏக்கர் நிலத்துல 2 ஏக்கர்ல நெல், 6 ஏக்கர்ல ஜி9 வாழை இருக்கு. வாழையில நாலு ஏக்கருக்கு மட்டும் ஊடுபயிரா மலைவேம்பை நடவு செஞ்சுருக்கேன். விவசாயத்துல கிடைக்குற திருப்தி, வேற எதுலயும் கிடைக்காதுங்கிறதை அனுபவப்பூர்வமா ஒவ்வொரு நாளும் ரசிச்சு வாழ்ந்துட்டிருக்கேன்'' என்று உருகி உருகிச் சொன்னவர், தான் ஊடுபயிராக மலைவேம்பு சாகுபடி செய்த கதையைச் சொல்லத் தொடங்கினார்.

ஏழே ஆண்டில் ஏக்கருக்கு 12.5 லட்சம் !

நல்வழி காட்டிய நண்பர்!

''வனத்துறையில இருந்து, ஓய்வுபெற்ற என்னோட நண்பர் ராஜசேகர், ஒரு நாள் எதேச்சையா தோட்டத்துக்கு வந்தாரு... தோட்டத்தை சுத்தி பாத்துட்டு, வாழையில ஊடுபயிரா மலைவேம்பு நடச் சொன்னார். அதோட, மலைவேம்பு சாகுபடி செஞ்சுட்டு இருக்கற நாலஞ்சு பண்ணைகளுக்கு அழைச்சுட்டுப் போய் காட்டினாரு. அதைப் பாத்ததும் எனக்கு ஆர்வம் வந்துடுச்சு. பல இடத்துல விசாரிச்சு, நல்ல தரமான மலைவேம்பு கன்னுகளை வாங்கிட்டு வந்து, வாழைக்கு இடையில நட்டேன். வாழைக்குக் கொடுத்த சத்துக்களை எடுத்துக்கிட்டு மளமளனு ஒண்ணரை வருஷத்துல நல்லா உசரமா வளர்ந்து நிக்குது. மலைவேம்போட வளர்ச்சியை நான் வேற எந்த மரத்துலயும் பாத்ததில்ல.

வாழையை ஒரு தடவை வெட்டிட்டேன். மறுதாம்பு மகசூல்ல இருக்கு. இதுவரைக்கும் நான் செஞ்ச செலவை வாழையில எடுத்துட்டேன். இனி... மலைவேம்புல வர்ற வருமானம் எல்லாமே லாபம்தான்'' என்ற ராமசாமி, வாழை மற்றும் ஊடுபயிராக மலைவேம்பு சாகுபடி செய்யும் முறை பற்றி பாடம் எடுக்கத் தொடங்கினார்.

900 வாழை! 300 மலைவேம்பு!

'ஏக்கருக்கு 10 டன் தொழுவுரத்தைக் கொட்டி நிலத்தை நன்றாக உழுது தயார் செய்து கொள்ள வேண்டும். 6 அடிக்கு

ஏழே ஆண்டில் ஏக்கருக்கு 12.5 லட்சம் !

6 அடி இடைவெளியில் குழியெடுக்க வேண்டும். அதிக ஆழம் தேவையில்லை. ஒவ்வொரு குழியிலும் 250 கிராம் மண்புழு உரத்தை இட்டு, திசு வாழைக் கன்றுகள் இருக்கும் பிளாஸ்டிக் பையை எடுத்துவிட்டு, நடவு செய்ய வேண்டும். திசு வாழை என்பதால், சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துக் கொள்வது நல்லது. ஏக்கருக்கு சராசரியாக 1,200 வாழை கன்றுகள் வரை நடலாம். மலைவேம்பை ஊடுபயிராக செய்தால், 900 வாழைக் கன்றுகள் மட்டுமே நடவு செய்ய முடியும். நான் 900 வாழைக் கன்று, ஊடுபயிராக 300 மலைவேம்புக் கன்றுகளையும் நடவு செய்துள்ளேன்.

15 நாளைக்கு ஒருமுறை பாசன நீரில் ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற அளவில் சொட்டுநீர்க் குழாயில் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்துவிட வேண்டும். இதை 9 மாதம் வரை தொடர்ந்து செய்ய வேண்டும். 40 நாட்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு வாழைக்கும் 500 கிராம் மண்புழு உரம் வைக்க வேண்டும். 6-ம் மாதத்துக்கு மேல் அவ்வப்போது 19:19:19 திரவ இயற்கை உரத்தைத் தேவைக்கேற்ப சொட்டுநீர்க் குழாய் மூலமாக கொடுக்க வேண்டும். 9ம் மாதத்துக்கு மேல் வளர்ச்சியைப் பொறுத்து, காய்களை அறுவடை செய்யலாம்.

வாழை நடவு செய்த ஒரு மாதம் கழித்து, வாழைகளுக்கு இடையில் 12 அடி இடைவெளியில் மலைவேம்புக் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு, 300 கன்றுகள் வரை நடவு செய்யலாம். ஒன்றரை கனஅடியில் குழியெடுத்து, குழியில் போதுமான அளவு குப்பை எருவைக் கொட்டி, கன்றை நடவு செய்து, மண்ணால் குழியை மூட வேண்டும். செடிகள் வளர்ந்த பிறகு, கிளைகளை மட்டும் கவாத்து செய்து கொண்டிருந்தால் போதும்... மலைவேம்பு தானாக வளர்ந்து விடும். வளர்ச்சியைப் பொருத்து 7-ம் ஆண்டுக்கு மேல் அறுவடை செய்யலாம்.’

சுக்கானிலும் சுகமாக வளரும்!

சாகுபடிப் பாடம் முடித்த ராமசாமி, ''வாழையை நட்டு ஒரு மாசம் கழிச்சு மலைவேம்பை நட்டப்ப... வாழையை விட சின்ன செடியாத்தான் இருந்துச்சு. ஆனா, ஆறே மாசத்துல 15 அடி உயரம் வளந்துடுச்சு மலைவேம்பு. வாழைக்குக் கொடுத்த உரத்தை எடுத்துகிட்டு போஷாக்கா வளந்துக்கிட்டு இருக்கு. இத்தனைக்கும் என்னோட நிலத்துல 3 அடிக்குக் கீழ சுக்கான் மண். அதிலயே மலைவேம்பு நல்லா வருது. எட்டு மாசத்துல 20 செ.மீ. சுற்றளவுக்கு பருத்து... ஒன்றரை வருஷத்துல 35 அடி உயரம் போயிடுச்சு. முறையா கவனிச்சு, கவாத்து செஞ்சதால மரம் நல்ல தடிப்பா இருக்கு. 35 அடிக்கு மேல கவாத்து செய்ய முடியல. '35 அடிக்கு மேல மலைவேம்பு வளராது. அதுக்கு மேல அடிமரம் பெருக்கும் அதனால கவாத்து தேவை யில்லை’னு விஞ்ஞானிக சொல்றாங்க. அதனால அப்படியே விட்டிருக்கேன்.

7 வருடத்தில் 50 லட்சம்!

தண்ணியும் உரமும் கிடைக்கறதால 3 வருஷத்துல என்னோட மரங்க 120 செ.மீ. சுற்றளவு வந்துடும்னு நினைக்கிறேன்.

7 வருஷத்துல ஒவ்வொரு மரமும் ஒரு டன் எடை வந்துடும். டன் 6,500 ரூபாய் விலை போகுது. இன்னும் 5 வருஷத்துல மரங்களை அறுவடை செஞ்சுடுவேன். வாழை, மலைவேம்பு சாகுபடி செய்ய ஏக்கருக்கு 50 ஆயிரம் கணக்குல, நாலு ஏக்கருக்கும் 2 லட்சம் செலவாச்சு. முதல் போக வாழையில சேதம் போக 800 தார் வெட்டினேன். ஒரு தார் சராசரியா 250 ரூபாய் விலைக்கு வித்ததுல... 2 லட்ச ரூபா கிடைச்சது. இது வரைக்கும் நான் செஞ்ச செலவை வாழையிலயே எடுத்துட்டேன். மலைவேம்பு சத்துக்களை அதிகமா எடுத்துக்கிறதால மறுதாம்பு வாழையில சீப்பு குறைச்சலா இருக்கு. எப்படி வெச்சாலும், தார் 150 ரூபாய்க்குக் குறையாம விலை போகும். அது மூலமா ஒரு லட்சத்து 20 ஆயிரம் கிடைக்கும். அதை... அடுத்த 5 வருஷத்த பராமரிப்புக் குனு வெச்சுக்கிட்டாலும், மலைவேம்பு மூலமா கிடைக்கப் போற வருமானம்... மொத்தமும் லாபக் கணக்குலதான்'’ என்றவர்,

''நாலு ஏக்கர்லயும் மொத்தமுள்ள 1,200 மலைவேம்பு மரங்கள்ல 200 மரங்கள் போனாலும், 1,000 மரங்களை அறுவடை செய்யலாம். குறைஞ்சபட்சம் டன், 5 ஆயிரம் ரூபாய்னு விலை போனாலே... 50 லட்சம் கிடைக்கும். ஏக்கருக்கு கணக்குப் பார்த்தா... 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். என்னோட இத்தனை வருஷ அரசாங்க வேலையில கிடைக்காத வருமானம்... மலைவேம்புல கிடைக்கும்னு தெரிஞ்சுருந்தா 5 வருஷத்துக்கு முன்னயே மலைவேம்பை நடவு செஞ்சுருப்பேன்'’ என்று சிலாகித்து சொன்னபடி விடைகொடுத்தார் ராமசாமி!

தொடர்புக்கு,
ராமசாமி, செல்போன்: 97865-47363
ராஜசேகரன், செல்போன்: 94424-05981

 நாற்றுத் தேர்வில் இருக்கிறது, வெற்றி!

ஏழே ஆண்டில் ஏக்கருக்கு 12.5 லட்சம் !

மலைவேம்பு சாகுபடியில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி பேசிய ஓய்வு பெற்ற உதவி வனப் பாதுகாவலர் ராஜசேகரன், ''மலைவேம்பைப் பொறுத்தவரை நாற்றுத் தேர்வில் கவனமாக இருக்க வேண்டும். சிறிய, தரமில்லாத நாற்றுகளைத் தவிர்த்து, தரமான ஒரே அளவிலுள்ள நாற்றுகளைத் தேர்வு செய்ய வேண்டும். சில நாற்றுப் பண்ணைகளில் மலைவேம்பு போன்றே தோற்றமளிக்கும் துலுக்க வேம்பைக் கொடுத்து விடுவார்கள். எனவே, தரமான பண்ணைகளில் நாற்றுகளை வாங்குவது நல்லது. மலைவேம்பு சாகுபடியின் வெற்றி, நாற்றுத் தேர்வில்தான் இருக்கிறது. மலைவேம்பை ஆழமாக நடவு செய்ய வேண்டும். நிலத்தின் மட்டத்திலிருந்து அரை அடிக்கு கீழே வேர் இருக்குமாறு நடவு செய்தால், மரம் நல்ல பிடிப்போடு வளரும்... எளிதில் சாயாது. அறுவடை செய்யும் மலைவேம்பு மரத்தை பிளைவுட் தயாரிக்கவும், கிளைகளை பேப்பர் மில்லுக்கும் விற்பனை செய்தால், கூடுதல் வருமானம் பார்க்கலாம்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism