Published:Updated:

மரப் பயிர்களிலும் பூச்சிகள்... விரட்டியடிக்கும் மருந்துகள்...

மத்திய அரசு நிறுவனத்தின் பலே கண்டுபிடிப்புகள்! ஞா. சுதாகர் படங்கள்: வி. ராஜேஷ்

மரப் பயிர்களிலும் பூச்சிகள்... விரட்டியடிக்கும் மருந்துகள்...

மத்திய அரசு நிறுவனத்தின் பலே கண்டுபிடிப்புகள்! ஞா. சுதாகர் படங்கள்: வி. ராஜேஷ்

Published:Updated:

பாதுகாப்பு

##~##

மரப் பயிர்களின் மகத்துவம் வேகமாகப் பரவி வரும் காலமிது. அதனால், மர சாகுபடியை ஏக்கர் கணக்கில் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. வேலை ஆட்கள் பிரச்னைக்கு அரிய தீர்வு என்பதோடு... உரம், பூச்சிக் கொல்லி என்று செலவுகளுக்கும் பெரிதாகத் தேவையிருக்காது என்றுதான் பலரும் இப்படி மரப் பயிர்களுக்கு மாறி வருகின்றனர். ஆனால், சமீபகாலமாக மரப் பயிர்களிலும் பூச்சி, நோய் தாக்குதல் ஏற்படுவதால்... என்ன செய்வதெனத் தெரியாமல் தவிக்கின்றனர் விவசாயிகள். அவர்களுக்கெல்லாம் உதவிக்கரம் நீட்டத் தயாராக இருக்கிறது... கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் 'வன மரபியல் மற்றும் மரப் பெருக்கு நிறுவனம்’.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மூன்று ஆண்டு கால ஆராய்ச்சிக்குப் பிறகு, இயற்கையானப் பொருட்களை அடிப்படையாக வைத்து, மூன்று இடுபொருட்களை அறிமுகம் செய்துள்ளனர், இந்நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள். 'ட்ரீ பால்’, 'ஹை-ஆக்ட்’, 'ட்ரீ ரிச் பயோ-பூஸ்டர்’ என்கிற பெயரில் அவற்றை சந்தைப்படுத்தி வருகிறார்கள்.

இதுபற்றிப் பேசிய ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் முனைவர். முருகேசன், ''எங்கள் நிறுவனத்தின் இயக்குநர் கிருஷ்ணகுமாரின் ஆலோசனையில் உயிர்ம வள மேம்பாட்டுத்துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவர்கள் அடங்கியக் குழு, மூன்று வருடங்களாக ஆராய்ச்சியில் இறங்கியது. பல்வேறு கட்ட சோதனை முயற்சிகளைக் கடந்து இரண்டு மாதங்களுக்கு முன்புதான், மரப் பயிர்களுக்கென மூன்று மருந்துகளைக் கண்டுபிடித்தோம். தற்போது, இதை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். இவை முழுக்க முழுக்க இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டவை என்பதுதான் இதன் சிறப்பம்சம்'' என்று பெருமிதத்தோடு சொன்னவர், ஒவ்வொரு மருந்தைப் பற்றியும் விவரித்தார்.

மரப் பயிர்களிலும் பூச்சிகள்... விரட்டியடிக்கும் மருந்துகள்...

ட்ரீ பால்!

''புங்கன், வேம்பு மற்றும் மரவெட்டி எண்ணெய் (காட்டுப் பாதாம் மரத்தின் கொட்டைகளுக்கு மருத்துவக் குணம் உண்டு. அதன் கொட்டையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்) ஆகிய இயற்கைப் பொருட்களை தகுந்த விகிதத்தில் கலந்து தயாரிக்கப்பட்டது இது. பூச்சிகள் அதிகம் தாக்கும் மரங்களான தீக்குச்சி மரம், தேக்கு, சவுக்கு, குமிழ் ஆகிய மரங்கள் உள்ளிட்ட ஆறு வகையான மரங்களில் இலைகளைத் தாக்கும் பூச்சிகளின் மீது உபயோகிக்கப்படுத்தியதில் நல்ல பலன் கிடைத்தது. 100 மில்லி 80 ரூபாய் என விற்பனை செய்கிறோம். மொத்தமாகக் கொள்முதல் செய்யும்பட்சத்தில் குறைந்த விலைக்குத் தரவும் தயாராக உள்ளோம். இதை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து, சுமார் 1,00,000 நாற்றுகளுக்குத் தெளிக்கலாம்.

ஹை-ஆக்ட்!

மரப் பயிர்களிலும் பூச்சிகள்... விரட்டியடிக்கும் மருந்துகள்...

இதை மரங்கள் மற்றும் பயிர்களுக்குப் பயன்படுத்தலாம். ட்ரீ பால் போன்றே உபயோகிக்க வேண்டும். இதையும் தீக்குச்சி மரம், புங்கன், வேம்பு... போன்ற மரங்களில் பரிசோதித்தபோது நல்ல பலன் கிடைத்தது. அடுத்தக் கட்டமாக, எலுமிச்சை, கறிவேப்பிலை மரங்களிலும்... மஞ்சள், வெள்ளைப் பூண்டு போன்ற பயிர்களிலும்கூட பரிசோதித்தோம். இதன் மூலம் உடனடி பலன் கிடைத்தது. இதுவும் 100 மில்லி 80 ரூபாய்தான்.

ட்ரீ ரிச் பயோ-பூஸ்டர்!

இது வளர்ச்சி ஊக்க ஊடகம். இயற்கைக் கழிவுகள் மற்றும் நுண்ணுயிர்கள் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அமைப்பும் வித்தியாசமானது. காட்டுப் பாதாம் மரத்தின் மரவெட்டி எண்ணெய், புங்கன், வேம்பு ஆகிய இயற்கைப் பொருட்களைத் தகுந்த விகிதத்தில் கலந்து, உயர் அழுத்தக் கருவிகள் கொண்டு வட்ட வடிவ மாத்திரைகளாக மாற்றப்படுகிறது. இந்த மாத்திரை இரண்டரை சென்டி மீட்டர் தடிமனும், ஆறு சென்டி மீட்டர் விட்டமும், 60 கிராம் எடையும் கொண்டது. இதன் மீது 350 மில்லி தண்ணீரை ஊற்றினால்... 12 சென்டி மீட்டர் அளவுக்கு விரிவடையும். இதை பாலித்தீன் பைகளில் வைத்து, அதில் விதையைப் போட்டு நாற்றுகளை வளர்க்கலாம்.

மரப் பயிர்களிலும் பூச்சிகள்... விரட்டியடிக்கும் மருந்துகள்...

மண் கலவையில் செடிகளை வளர்ப்பதைவிட, இது விலை குறைவானது. 5 வில்லைகள் உள்ள ஒரு பாக்கெட் 30 ரூபாய் என விற்பனை செய்கிறோம். இதில் பல நுண்ணூட்டச் சத்துக்கள் இருப்பதால், தனியாக உரமிடத் தேவையில்லை. வீட்டுத் தோட்டங்களுக்கு மிகவும் சிறந்தது. இந்த மாத்திரையை மண்ணுடன் கரைத்துக் கலந்தால்... மண்ணே உரமாகும். தென்னை, எலுமிச்சை, கறிவேப்பிலை, சவுக்கு, குமிழ், மலைவேம்பு, தேக்கு போன்ற மரங்களிலும்... சில கீரை வகைகளிலும்  பரிசோதித்ததில் மிக நல்ல பலனைக் கொடுத்துள்ளது'' என்ற முருகேசன் நிறைவாக,

''இவை அனைத்தும் விவசாயிகளின் தேவை அறிந்து தயாரிக்கப்பட்டுள்ளன. முழுமையாக விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது, இந்த இடுபொருட்கள், எங்கள் நிறுவனத்தைத் தவிர வேறு எங்கும் கிடைக்காது'' என்றும் சொன்னார்.

இது எந்த அளவுக்குப் பயன் தருகிறது என்பது பற்றி, இதைப் பயன்படுத்தும் திருப்பூரைச் சேர்ந்த சத்யவதி நம்மிடம் பேசினார். ''வீட்டுத் தோட்டத்துல கீரை வளர்க்குறேன். கீரைகள்ல அசுவிணி, அந்துப்பூச்சித் தொந்தரவு அதிகமா இருந்தது. அதுக்கு 'ஹை ஆக்ட்' மருந்து வாங்கி தெளிச்சேன். கைமேல பலன் கிடைச்சுது. பூச்சியெல்லாம் காணாமப் போயிடுச்சு. அடுத்தப்படியா, மாதுளை மரத்துக்கும் பயன்படுத்தினதுல நல்ல பலன். நாத்தா இருக்கும்போதே இந்த மருந்தைப் பயன்படுத்தினா... பூச்சிகளே வர்றதில்ல. மாசம் ஒரு முறை இதைப் பயன்படுத்துறேன்'' என்று சொன்னார்.

தொடர்புக்கு,
முனைவர். முருகேசன்,
செல்போன்: 94868-01110

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism