Published:Updated:

கீழ்பவானி கால்வாய்... தொடரும் மல்லுக்கட்டு

மா.அ. மோகன்பிரபாகரன் படங்கள்: க. ரமேஷ்

கீழ்பவானி கால்வாய்... தொடரும் மல்லுக்கட்டு

மா.அ. மோகன்பிரபாகரன் படங்கள்: க. ரமேஷ்

Published:Updated:

பிரச்னை

##~##

கீழ்பவானி பாசனத் திட்ட (எல்.பி.பி.) கால்வாய்... பற்ய செய்திகள் அடிபடாத நாளே இல்லை என்கிற அளவுக்கு போர் முழக்கக் கூட்டம், போராட்டம், ஆர்ப்பாட்டம்... என ஏதாவது ஒன்று நடந்தபடியே இருக்கிறது! இந்தக் கால்வாய் மூலமாக செல்லும் தண்ணீர், வழியில் நிறையவே சேதாரம் அடைவதால், கடைமடைப் பகுதிகளுக்கு சரியாக சென்று சேரும் வகையில்... 1,200 கோடி ரூபாய் மதிப்பில், கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டம் தீட்டப்பட்டு, அதற்கான ஆயத்தப் பணிகளை அரசாங்கம் தொடங்கியிருப்பதுதான் பிரச்னையின் மையப்புள்ளி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதைப் பற்றி கடந்த 25.07.13 தேதியிட்ட பசுமை விகடன் இதழில் 'கான்கிரீட் கால்வாய்... கதிகலங்கும் கீழ்பவானி’ என்ற தலைப்பில் எழுதியிருந்தோம். இந்நிலையில், இப்பிரச்னையில் எதிர்ப்பு மற்றும் ஆதரவு என இருபிரிவாக நிற்பவர்கள், தங்களின் போராட்டங்களைத் தொடர்ந்து தீவிரப்படுத்தியபடியே இருக்கின்றனர்.

கான்கிரீட் போடுவதற்கு எதிர்ப்பு காட்டும் இயற்கை ஆர்வலர், கார்த்திகேயா சிவசேனாதிபதி, ''இது பக்காவான தண்ணீர் அரசியல். அதனால்தான் நாங்கள் எதிர்க்கிறோம். இத்திட்டம் செயல்படுத்தப்படும்போது, தண்ணீர் தனியார்மயமாக்கப்படும். இதற்காக, 1,200 கோடியை உலக வங்கி கொடுக்கப் போகிறது. உலக வங்கி கைகாட்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத்தான் கான்கிரீட் போடும் பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட உள்ளது. அவர்கள், ஒவ்வொரு வயலிலும் மீட்டர் பொருத்தி, பயன்படுத்தும் தண்ணீருக்கான கட்டணத்தை வசூலிக்கும் சூழ்நிலை ஏற்படும்.

கீழ்பவானி கால்வாய்... தொடரும் மல்லுக்கட்டு

இத்திட்டத்துக்காக 300 கோடி ரூபாய் மதிப்புள்ள லட்சக்கணக்கான மரங்களை அழிக்கப் போகிறார்கள். இது கடுமையான சூழல் பாதிப்பை ஏற்படுத்தும். கசிவுநீர்ப் பாசனம் பாதிக்கப்படுவதோடு, பாசனப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறு குளங்கள், குட்டைகள் ஆகியவற்றின் நீர்மட்டம் பாதிக்கப்படும். இது முழுக்க சில தனி நபர்களின் அரசியல் ஆதாயத்துக்காக கொண்டு வரப்பட்ட திட்டம்'' என்று சாடியவர்,

''இந்த கால்வாய் அமைப்பதற்கான செலவு முழுவதையும் கடந்த 20 வருடங்களில் ஆயத்தீர்வை, தண்டத்தீர்வை வரிகளின் மூலம் 2.07 லட்சம் ஏக்கர் பாசன விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டுவிட்டது. இதன் மூலம், இது அனைத்து விவசாயிகளின் உரிமைக்குண்டானது. இதில், கான்கிரீட் அமைப்பது பற்றி முடிவு செய்ய வேண்டியது, விவசாயிகள்தான். அரசாங்கம் தன்னிச்சையாக முடிவு எடுக்கக்கூடாது. இதனால், ஆயக்கட்டில் உள்ள விவசாயிகள், ஆயக்கட்டில் சேராத விவசாயிகள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள்'' என்று அழுத்தமாகச் சொன்னார்.

கீழ்பவானி கால்வாய்... தொடரும் மல்லுக்கட்டு

இத்திட்டத்தை ஆதரிப்பவர்களின் வரிசையில் நிற்கிறார்... முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் (தி.மு.க.). அவர் இதைப் பற்றி நம்மிடம் பேசும்போது, ''கீழ்பவானி பாசனத் திட்டத்திலுள்ள எல்லா விவசாயிகளுக்கும் அனுமதிக்கப்பட்ட தண்ணீர், அனுமதிக்கப்பட்ட அளவில், அனுமதிக்கப்பட்ட காலங்களில் பெற முழு உரிமையுடையவர்கள். ஆனால், நடைமுறையில் இது நடப்பதில்லை என்பதே உண்மை.

பிரதான வாய்க்கால், கிளை வாய்க்கால், மதகு வாய்க்கால் ஆகியவற்றில் முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளாததால், தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக நான் இருந்தபோது, இப்படி தண்ணீர் வீணாவதை சரிசெய்யும் நோக்கில், அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தேன்.

அதைத் தொடர்ந்து, 99-ம் ஆண்டில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டது. அக்குழு மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாசனத் திட்டங்களையும் ஆய்வு செய்து... அவற்றில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, அரசுக்குப் பரிந்துரை செய்தது. அதில், முக்கியமாக, 'கீழ் பவானி பிரதான பாசனக் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைத்தால், தண்ணீர் தடையின்றி உரிய காலத்தில் கடைமடைப் பகுதிகளுக்குச் செல்லும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது பவானி நதி, காவிரிப் பிரச்னைக்குள் இருந்த காரணத்தினால், பரிந்துரைகள் நடைமுறை படுத்தப்படாமல் இருந்தன.

கீழ்பவானித் திட்டம், முழுக்க முழுக்க பாசனத்துக்காக உருவாக்கப்பட்டதால், மொத்த நீரும் விவசாயிகளுக்குத்தான் வழங்கப்பட வேண்டும். இந்நிலையில், காவிரி நதி நீர் ஆணையத் தீர்ப்பின்படி

36 டி.எம்.சி. என்ற அளவில், வழங்கப்பட்டு வந்த தண்ணீர், தற்சமயம் 27.8 டி.எம்.சி. என்ற அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. பாசன வசதிகளை மேம்படுத்தி, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தினால்தான்... இந்த இழப்பீட்டைச் சரி செய்து, பாசன உரிமையுள்ள 2.07 லட்சம் ஏக்கர் நிலத்துக்கு வழங்க முடியும். அதற்கு, கான்கிரீட் தளம் அவசியம்'' என்று சொன்ன சுப்புலட்சுமி ஜெகதீசன்,

''இத்திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம், வழக்கமாக விரயமாகும் 52% தண்ணீர் சேமிக்கப்படும். இப்படி சேமிக்கப்படும் தண்ணீரையே, 10 மாதங்களுக்கு பாசனத்துக்குப் பயன்படுத்த முடியும். பாசனதாரர்கள் கூடுதலாக ஒரு போகம் சாகுபடி செய்ய முடியும். அதில்லாமல், தண்ணீர் திறக்கும்போதே, கடைமடையிலும் உழவுப் பணிகளை மேற்கொள்ள முடியும். கூடுதலான நிலங்களையும் ஆயக்கட்டில் சேர்க்க முடியும். அதனால், அரசு தாமதிக்காமல் இதற்கான பணிகளைத் துவங்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism