Published:Updated:

வினையாக மாறிய... விதை சேகரிப்பு..!

ஓவியம்: ஹரன்

நம்மாழ்வார்

வரலாறு

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மோட்ராகி மலைப்பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டதால், கனமழை காலத்தில் மேல்மண் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. மாடுகளின் சாணத்தை நிலத்தில் கொட்டியதால், மட்டுமே சோளம், கேழ்வரகு, துவரை போன்ற பயிர்கள் விளைந்தன. மழைக் காலத்தில் மட்டுமே சாகுபடி என்பதால், உழைப்புக்கான வாய்ப்பு குறைவே. மக்களுடைய வருவாயை உயர்த்துவதற்கு இளைஞர் மன்றத்தினருடன் பேசினோம். அப்போது, மல்பெரி சாகுபடி பற்றி பேச்சு வந்தது.

கோடையில் வெட்டாமல் விட்டுவிட்டால், மல்பெரி குச்சி காயாது. மழைக் காலம் வந்ததும் குச்சியை வெட்டிவிட்டால், இலைகள் துளிர்க்க ஆரம்பிக்கும். பட்டுப்புழு வளர்ப்பைத் தொடர முடியும். பட்டுக்கூடை விற்க, தமிழ்நாட்டில் நல்ல சந்தை இல்லை. கர்நாடகாதான் சந்தை. சந்தையெல்லாம் இருக்கட்டும்... பட்டுப்புழு வளர்க்க எங்கு பயிற்சி எடுப்பது என்று யோசித்தபோது, 23 கிலோ மீட்டர் தூரத்தில், அஞ்சட்டியில் பயிற்சி மையம் இருப்பது தெரிந்தது. ஆனால், பள்ளிப் படிப்பு முடித்தவர்களுக்கு மட்டுமே பயிற்சி கொடுப்பார்கள்.

மோட்ராகியில் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் இல்லை. 'என்ன செய்வது?’ என யோசித்தபடியே மைய அலுவலர்களிடம் பேசினேன். ஒரு வழியாக இரண்டு இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுக்க ஒப்புக் கொண்டார்கள். அதன்படி, முனியன், காவிரி இருவரும் பயிற்சி பெற்றனர்.

உடனடியாக, எங்கள் இடத்தில் மல்பெரி குச்சிகளை நட்டோம். இரண்டு மாதங்களுக்குப் பிறகு பட்டுப்புழு வளர்க்க ஆரம்பித்தோம். காவிரியும், முனியனும் அவரவர் வீட்டிலும் பட்டுப்புழு வளர்ப்பை தொடங்கியிருந்தார்கள். அது நிறைய இளைஞர்களையும் பெண்களையும் கவர்ந்தது. 'இது எளிதானது. நாமும் செய்யக் கூடியது’ என்ற நம்பிக்கை அவர்கள் மத்தியில் பிறந்தது.

வினையாக மாறிய... விதை சேகரிப்பு..!

முனியனும், காவிரியும் சுறு சுறுப்பாக 32 தோட்டங்களில் மல்பெரி குச்சியை நட்டு வைத்தார்கள். இது மெள்ள பரவி, 1981-ம் ஆண்டில், 200 விவசாயிகள் தோட்டத்தில் பட்டுப்புழுக்கள் வளர்ந்து கொண்டிருந்தன.

மலைகளில் இயல்பாகவே மரங்கள் வளர்ந்து நிற்பதுண்டு. மரங்களிலிருந்து பலவகையான வருவாயினைப் பெற முடியும். ஆனால், மக்கள் சாகுபடி செய்த பகுதிகளில் மரங்களே காணப்படவில்லை. நிழலுக்கு ஒதுங்குவதற்குகூட மரங்கள் இல்லாதிருந்தது. ''நாம் ஏன் மரம் வளர்க்கக் கூடாது..?'' என்ற கேள்வி எழுப்பினேன்.

''மாடுகள் தின்று விடும்'' என்றார்கள், அம்மக்கள்.

''மாடுகள் தின்னாத மரங்கள் இல்லையா..?''  
''மலைவேம்பு மரம் ஒன்றைத்தான் மாடுகள் தின்னாது.''
''மலைவேம்பு விதை எங்கே கிடைக்கும்..?''  
''உயரே மஞ்சுமலையில் கிடைக்கும்.''

மறுநாளே, கட்டுச்சோறு கட்டிக்கொண்டு நான்கு இளைஞர்களுடன் மஞ்சுமலைக்குப் பயணப்பட்டேன். ஊரை நெருங்கியதும் மரங்கள் அடர்த்தியாக இருந்தன. மலை வேம்பு மரங்களை அடையாளம் கண்டு, ஆங்கங்கே கொட்டிக் கிடந்த காய்களைப் பொறுக்கத் தொடங்கினோம். சிறிது நேரத்தில், துப்பாக்கி சகிதம் அந்த ஊர் மக்கள் எங்களைச் சுற்றி வளைத்து, ஊருக்கு மத்தியில் கொண்டு போய் நிறுத்தினார்கள். எல்லோரும் குடுமி வைத்திருந்தார்கள். கீழே இருப்பவர்கள் பார்வைக்கு, அவர்கள் மிகவும் பின்தங்கிய மக்கள். ஆனால், அவர்கள் ஊரில் அவர்களுக்குத்தானே பலம் அதிகம். அவர்கள் பார்வையில், 'நாங்கள் பிள்ளை பிடிக்க வந்தவர்கள்’.

'ஏன் ஊருக்குள் வரவில்லை... ஏன் சொல்லிவிட்டு வரவில்லை' என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டார்கள். எங்களுடைய பதில்கள் அவர்களை திருப்திப்படுத்தவில்லை.

வினையாக மாறிய... விதை சேகரிப்பு..!

சில தினங்களாக 'தர்மபுரி மாவட்டத்தில் பிள்ளை பிடித்துச் செல்கிறார்கள்’ என்ற செய்தி, அப்போதுதான் நினைவுக்கு வந்தது. யோசிக்காமல் வந்துவிட்டதை உணர்ந்து, தலையில் அடித்துக் கொண்டேன். தர்மபுரியிலிருந்து மஞ்சுமலையில் குடியேறி வாழ்ந்து கொண்டிருந்த ஒருவர் மட்டுமே தமிழ் பேசினார். ஊர் மக்களுக்கு மத்தியில் அவர் மொழி பெயர்ப்பாளராக செயல்பட்டார்.

'நீங்கள் செய்ததெல்லாம் சரி, குழந்தைகள் மீது அக்கறை இருப்பதுதான் புத்திசாலித்தனம். நாங்கள் சொல்லிவிட்டு வந்திருக்க வேண்டும். பிழையைப் பொறுத்துக் கொள்ளுங்கள்’ என்றேன். கொஞ்சம் வயதானவராகவும், தாடி மீசையுடன் இருந்ததாலும், 'பிள்ளை பிடிக்கும் குழுவுக்கு நான் தான் தலைவன்’ என்று திடமாக நம்பினார் கள்.

என்னோடு வந்த இளைஞர்களிடம் ஒரு பெண்ணைக் காட்டி, 'நீங்கள் மோட்ராகி என்கிறீர்களே. இந்தப் பெண்ணுக்கு உங்களை அடையாளம் தெரியுமா?’ என்றனர். 'இந்தப் பெண்ணின் ஊர் பஞ்சல்துணை. இவரை நன்றாகத் தெரியும்’ என்று இளைஞர்கள் சொன்னதும், அவள் பயந்து பின்வாங்கி, 'இவர்களைத் தெரியாது’ என்று சொல்லி விட்டாள். இன்னொரு இளைஞனைக் காட்டி, 'இவன் எங்கள் ஊரில் வந்து எங்களோடு தங்கியிருக்கிறான். எங்களோடு பாயில் படுத்து உறங்கியிருக்கிறான்’ என்று மோட்ராகி இளைஞர்கள் சொல்ல, அவனும், 'இவர்களை எனக்குத் தெரியாது’ என்று சொல்லி விட்டான்.

நாங்கள் தப்பிக்க ஒரேயரு மார்க்கம்தான் இருந்தது. திருநெல்வேலிக்காரர் ஒருவர், அந்த ஊர் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறார். ஆனால், அவர் வெளியூர் போயிருந்தார். மாலைதான் திரும்புவார், என்றனர். 'நாங்கள் சாயங்காலம் வரை இருக்கிறோம். உங்கள் மேல் எந்தக் குறையுமில்லை’ என்று ஊர்க்காரர்களிடம் சொன்னேன். ஆனால், மறுபடியும் நம்பிக்கை தளர்ந்து போவது போல் ஒரு காரியம் நடந்தது.

-இன்னும் பேசுவேன்...