Published:Updated:

விவசாயியே... வியாபாரியாக...

சாதிக்கும் உழவன் உற்பத்தியாளர் கம்பெனி! மா.அ. மோகன்பிரபாகரன் படங்கள்: மு. லலித்குமார்

விவசாயியே... வியாபாரியாக...

சாதிக்கும் உழவன் உற்பத்தியாளர் கம்பெனி! மா.அ. மோகன்பிரபாகரன் படங்கள்: மு. லலித்குமார்

Published:Updated:
##~##

'நொங்கு வெட்றவன் ஒருத்தன்... நோண்டி திங்குறவன் இன்னொருத்தன்’

- என்ற சொலவடைக்கு ஏற்ப, உற்பத்தி செய்யும் விவசாயிகளைவிட, அதிக லாபம் பார்ப்பது இடைத்தரகர்கள்தான். விவசாயிகள் உற்பத்தி செய்பவர்களாக மட்டும் இல்லாமல், வியாபாரிகளாகவும் மாறினால்தான் இதிலிருந்து மீள முடியும். இது, விவசாயிகளுக்கு நன்கு தெரிந்திருந்தாலும், நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் தெரியாமல்தான் ஆங்காங்கே திணறிக் கொண்டுள்ளனர். இந்நிலையில், உழவர்களையே உரிமையாளர்களாகக் கொண்டு, 'உழவன் உற்பத்தியாளர் கம்பெனி’ என்ற பெயரில், உற்பத்திப் பொருளை சந்தைப்படுத்தத் தொடங்கி, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக ஜொலிக்கிறார்கள் ஈரோடு மாவட்ட மஞ்சள் விவசாயிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விவசாயிகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்நிறுவனத்தின் சிறப்பம்சங்கள் பற்றி பேசிய அதன் தலைவர் நல்லசாமி, ''எவ்வித லாப நோக்கமும் இன்றி, பெறப்படும் லாபத்தை விவசாயிகளுக்கே பகிர்ந்தளிக்கவும், உற்பத்தியாளர்கள் நேர்மையான விலை பெறுவதற்காகவும் தொடங்கப்பட்டுள்ளது. கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக, கடந்த பிப்ரவரி முதல் இது செயல்பட்டு வருகிறது. இதில் உறுப்பினராக உள்ள விவசாயிகள் கொண்டு வரும் மஞ்சளை, அவர்களின் முன்னிலையிலேயே நவீன இயந்திரங்களால் தரம் பிரித்து, ரகம் வாரியாக கம்பெனி சாக்குகளில் எடை போட்டு ரசீது கொடுத்து விடுகிறோம்.

இருப்பு வைக்க குடோன் வசதியும்,  வைக்கும் இருப்பின் மீது, வங்கி மூலம் 10.75% என்கிற வட்டி விகிதத்தில், இரண்டு நாட்களுக்குள் கடன் வசதியும் செய்து தருகிறோம். வாரத்தின் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஏல முறையில் விற்பனை நடக்கிறது. விரைவில் இணையம் மூலம் இந்திய அளவில் இந்த ஏலம் நடைபெற உள்ளது. விற்பனைத்தொகை, வங்கியின் மூலம் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கப்படுகிறது.

விவசாயியே... வியாபாரியாக...

மஞ்சள் சாகுபடி, அறுவடை, விற்பனை, அன்றாட சந்தை நிலவரம், ஏல விலை... போன்ற விவரங்களை தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி மூலமாக விவசாயிகளுக்குத் தெரிவிக்கிறோம். ஈரோட்டைச் சுற்றியுள்ள மஞ்சள் உற்பத்தியாளர்களிடையே இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது'' என்று சொன்னார்.

''வழக்கமாக, தனியார் கமிஷன் மண்டிகள், வெளிச் சந்தைகள், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் போன்றவை மூலமாகத்தான் மஞ்சள் விற்பனை நடந்து வருகிறது. வெளிமாநில வியாபாரிகள், பெரும்பாலும் 'ஆன்லைன்’ மூலமாகத்தான் விலையை நிர்ணயம் செய்கிறார்கள். 'வியாபாரிகள் நிர்ணயம் செய்வதுதான் விலை’ என்ற கட்டாயத்தால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. ஆனால், தற்போது உழவர்களே உருவாக்கியிருக்கும் கம்பெனி மூலமாக மஞ்சள் விற்கப்படும்போது விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கிறது'' என்றார், நிறுவனத்தின் துணைத் தலைவர் வெங்கடேசன்.

விவசாயியே... வியாபாரியாக...

குடோன் மற்றும் இருப்பு வைக்கப்படும் மஞ்சளின் பாதுகாப்பு பற்றிப் பேசிய மையத்தின் பொறுப்பாளர் சோமசுந்தரம், ''விவசாயிகள் கொண்டு வரும் மஞ்சள், கிழங்கு, விரலி என வகைப்படுத்தப்பட்டு 50 கிலோ மூட்டையாக கம்பெனி சாக்குகளில் கட்டப்படும். ஓர் ஆண்டு வரை இருப்பு வைக்கலாம். அப்படி வைக்கப்படும் மஞ்சளுக்கு 45 நாட்களுக்கு ஒரு முறை பூச்சிக்கொல்லி தெளிக்கிறோம். நல்ல விலை கிடைக்கும்போது விவசாயியே வந்து விற்பனை செய்யலாம். பராமரிப்புச் செலவுக்காக ஒரு மூட்டைக்கு மாதம் 7 ரூபாய்; தரம் பிரிப்பதற்காக ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் என கட்டணம் வசூலிக்கிறோம். எங்கள் குடோனில், 25 மெட்ரிக் டன் அளவுக்கு சேமித்து வைக்க முடியும். தினமும் 100 குவிண்டால் வரை மஞ்சள் கொள்முதல் செய்யப்படுகிறது'’ என்று சொன்னார்.

இதன் மூலம் பலன் பெற்ற விவசாயிகளின் சார்பில், பேசிய கம்புளியம்பட்டி விவசாயி ஆனந்து, ''விவசாயிங்க கண்ணு முன்னாலயே, எடை போட்டு தரம் பிரிக்கிறாங்க. வெளிமார்க்கெட்ல கழிவுனு சொல்லி மொத்த எடையில 40% வரைக்கும்கூட சமயங்கள்ல கழிச்சுடுவாங்க. இங்க அப்படியெல்லாம் குறைக்கறதில்ல. மொத்தத்துல இந்த மார்க்கெட் மூலமா, விவசாயிகளோட உழைப்புக்கேத்த பலன் கிடைக்குது'' என்றார் மகிழ்ச்சியாக!

விவசாயியே... வியாபாரியாக...

இதேபோல, அனைத்து விளைபொருட்களுக்கும் விடிவு ஏற்படுவது எந்நாளோ?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism