Published:Updated:

நம்பிக்கை விதைக்கும் அப்துல் கலாமின் ரசிகர்கள்!

நம்பிக்கை விதைக்கும் அப்துல் கலாமின் ரசிகர்கள்!
நம்பிக்கை விதைக்கும் அப்துல் கலாமின் ரசிகர்கள்!
நம்பிக்கை விதைக்கும் அப்துல் கலாமின் ரசிகர்கள்!

யற்கையை நேசிக்கும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் சமூகத்துக்கு தங்களது பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்தில் செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக மரம் நடுவது, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவது என பணியாற்றுகிறார்கள். ஆனால், அப்துல் கலாம் பெயரில் அமைப்பாக செயல்பட்டு வரும் இளைஞர்கள் சிலர், விதைகளை ஆர்வமுடன் தேடி அலைந்து சேகரித்து வருகிறார்கள்.

நாம் வாழும் சமூகத்துக்கு எதையாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில், ‘டாக்டர் அப்துல்கலாம் எதிர்கால தொலைநோக்கு அறக்கட்டளை’ என்கிற அமைப்பை பிரபஞ்சன், லெனின் பிரபாகரன், அரவிந்த் ஆகிய மூன்று இளைஞர்கள் தொடங்கினார்கள். கடலூரைச் சேர்ந்தவரான பிரபஞ்சன் சென்னையில் பணியாற்றுகிறார். அதே ஊரைச் சேர்ந்த லெனின் பிரபாகரன், ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்கிற கனவுடன் அதற்கான தேர்வுக்கு தயாரகி வருகிறார். இவர்களுடன் இணைந்து வேலூரை சேர்ந்த அரவிந்தும் சேர்ந்து இந்த அமைப்பை தொடங்கி உள்ளனர்.

நம்பிக்கை விதைக்கும் அப்துல் கலாமின் ரசிகர்கள்!

அப்துல்கலாமின் கனவை நனவாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பினர் முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் மரம் வளர்ப்பதை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். இதற்காக பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் இணைந்து அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் மரங்களின் விதைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விதைகளை மழைக்காலத்தில் முளைக்க வைத்து மரங்களை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இது பற்றி இந்த அமைப்பை சேர்ந்த பிரபஞ்சன், லெனின் பிரபாகரன், அரவிந்த் ஆகியோரிடம் பேசியபோது, ‘’நாட்டின் தற்போதைய மிக முக்கியமான பிரச்னை சுற்றுச்சூழல் சீர்கேடு. மக்களின் குடியிருப்புக்காகவும் பிற தேவைகளுக்காகவும் வனங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதனால் மரம் வளர்ப்பில் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்கிற நோக்கத்தில் நாங்கள் விதைகளை சேகரிக்கத் தொடங்கினோம்.

நம்பிக்கை விதைக்கும் அப்துல் கலாமின் ரசிகர்கள்!

எங்களது முயற்சியை பார்த்து பல்வேறு பகுதிகளிலும் எங்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது. தற்போது சென்னையில் மட்டும் அல்லாமல் கடலூர், புதுச்சேரி, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், ஈரோடு, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளிலும் சிலர் ஆர்வத்துடன் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பொதுவாக, மரங்கள் அதிகம் வளர பறவைகள் உதவுகின்றன. அதேபோல நாமும் செயல்பட்டால் என்று எண்ணியதன் விளைவாகவே விதைகளை சேகரிக்கும் பணியை தொடங்கினோம்.

நமது வீட்டிலேயே சில பழங்களின் விதைகள் கிடைக்கின்றன. அவற்றை வீதியில் தூக்கி வீசுவதற்கு பதிலாக பராமரிப்பது பற்றி கற்றுக் கொடுக்கிறோம். அதன்படி, செம்மண்ணையும், மாட்டு சாணத்தையும் கலந்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ள வேண்டும். அதன் நடுவில் நம்மிடம் இருக்கும் விதையை வைத்து விட வேண்டும். அதனை நிழலில் நன்றாக உலர வைத்துவிட்டால் விதை ரெடி. இந்த விதையானது சில மாதத்துக்கு பிறகு மழைக்காலத்தில் முளைப்பதற்கு தயாராக இருக்கும். அதனால் இந்த விதையை நாம் வாகனத்தில் செல்லும்போது கூட சாலையோரங்களில் போட்டுவிட்டால் வெயிலையும் சமாளித்து தாக்குப்பிடித்து கிடக்கும்.

மழைத்துளிபட்டதும் அந்த விதைகள் முளைக்கத் தொடங்கிவிடும். அதற்கு தேவையான உரமும் கூடவே இருப்பதால் நன்றாக வளர்ந்துவிடும். நாங்கள் மே மாத இறுதிக்குள் 2 லட்சம் விதைகளை சேகரிக்க திட்டமிட்டு இருக்கிறோம்.

ஆங்காங்கே பள்ளி, கல்லூரி மாணவர்களும் கோடை விடுமுறையில் எங்களுடன் இணைந்து செயல்படுவார்கள். ஆலமரம், அரசமரம், புளி, நெல்லி, வேம்பு, காட்டுநெல்லி, ம்லைவேம்பு, கொடுக்காய்ப்புளி உள்ளிட்ட பல்வேறு மரங்களின் விதைகளை சேகரித்து வைத்துள்ளோம். அவரவர் வீடுகளிலேயே இந்த விதைகளை சேகரிக்குமாறு வலியுறுத்துகிறோம். அதில் சிரமம் இருப்பவர்கள் விதைகளை எங்களிடம் கொடுத்துவிட்டாலே நாங்கள் பராமரித்து உரிய நேரத்தில் விதைத்துவிடுவோம். மழைக்காலம் தொடங்கியதும் 2 லட்சம் விதைகளை நடவு செய்வோம். அதில் ஒன்றரை லட்சமாவது முளைத்து விடும் என்கிற நம்பிக்கை இருக்கிறது’’ என்கிறார்கள், உற்சாகமாக.

நிச்சயமாக பாராட்டப்பட வேண்டிய செயல் இது!

-ஆண்டனிராஜ்