Published:Updated:

இது கொங்குநாட்டு ஸ்பெஷல்!

இது கொங்குநாட்டு ஸ்பெஷல்!

இது கொங்குநாட்டு ஸ்பெஷல்!

மண்ணுக்கும், தன்மைக்கும் ஏற்ப, ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒவ்வொரு உணவுப் பண்பாடு உண்டு. அவற்றில், கொங்கு நாட்டு மக்களின் விருந்தும், விருந்தோம்பலும் இணையற்றவை. கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கரூர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியதே கொங்குநாடு. நான்கு புறங்களிலும் ஓங்கியுயர்ந்த மலைத்தொடர்களைக் கொண்ட இம்மண்டலத்தில் பசுமைக்குப் பஞ்சமில்லை. காவிரி, பவானி, நொய்யல், அமராவதி, தென்பெண்ணை சுவேதநதி என மண்ணை பொன்னாக்கும் நதிகளுக்கும் குறைவில்லை. "கொங்கு" என்றால் தேன். இந்நாட்டின் அடர்ந்த மலைத்தொடர்களில் தேன் மிகுந்திருந்ததால் இப்பெயர். மலைத்தொடர் நெடுக தேனெடுத்தலை முதன்மைத் தொழிலாகக் கொண்ட பழங்குடிகள் நிறைந்திருந்தார்கள்.  

ஒரு காலத்தில் விவசாயத்தையும், வனத்தொழில்களையும் பிரதானமாகக் கொண்டிருந்த கொங்குநாடு, இப்போது முதன்மையான தொழிற்சாலைகளை உள்ளடக்கிய பகுதியாக வளர்ந்திருக்கிறது. பல்லாயிரம் கோடி ரூபாய் பரிவர்த்தனை நடக்கும் பகுதியாக மாறியிருக்கிறது. கொங்கு மக்களின் ஈடு இணையற்ற உழைப்பின் விளைவு. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, லட்சக்கணக்கான மக்கள் கொங்கு நாட்டில் குவிந்து வாழ்கிறார்கள். 

கொங்கு நாட்டு மக்கள் பண்டிகையும், கொண்டாட்டமுமாக வாழ்பவர்கள். குழந்தை பிறப்பு முதல், மொட்டையடிப்பது, காது குத்துவது, திருமணம் என எல்லா நிகழ்வையும் உறவுகளோடு கூடி, கொண்டாடுவார்கள். மகிழ்ச்சியான தருணங்களில் மட்டுமின்றி, துக்ககரமான சம்பவங்களின் போதும் உறவுகள் கூடி தோள் கொடுப்பார்கள். எல்லா நிகழ்வுகளிலுமே விருந்து பிரதானமாக இருக்கும். 

கொங்குமக்கள் வீட்டுக்கு வரும் விருந்தாளிக்கு பானகம் கொடுத்து தாகம் தீர்க்கிறார்கள். சுக்கும், ஏலமும் மணக்க, இன்னொரு டம்ளர் கிடைக்காதா என ஏங்க வைக்கிறது பானகம். அதுவே, குளிர்காலமாக இருந்தால் கருப்பட்டிக் காபி. 

ஆதிகாலத்தில் விவசாயத்தையே தம் முதன்மைத் தொழிலாக கொண்டிருந்ததாலும், பழங்குடித்தன்மை மிகுந்திருப்பதாலும் கொங்கின் பிரதான உணவுகள் தானிய உணவுகளாகவே இருக்கின்றன. கம்பு, கொள்ளு, தட்டப்பயறு, உளுந்து, குதிரைவாலி, வரகு, அவரை, சாமை, சிவப்புச்சோளம், கேழ்வரகு என தமிழகத்தில் வழக்கொழிந்த பல தானியங்கள் இன்னும் கொங்குநாட்டில் முதன்மை உணவுப்பொருட்களாக உள்ளன. 

சம்பந்தி முறை உறவுக்காரர்கள் வீட்டுக்கு வரும்போது, தேன்-தினைமாவு கொடுத்து வரவேற்பது வழக்கம். இரண்டையும், தனித்தனியாக கிண்ணங்களில் வைத்திருப்பார்கள். விருந்தினர்கள் கலந்து சாப்பிடுவார்கள். கோவையில இருக்கிற சில உணவகங்களில் தேன் தினைமாவு கிடைக்கிறது. பொதுவாக, சத்து மிகுந்த உணவுகளில் ருசி குறைவாக  இருக்கும் என்று ஒரு கருத்து உண்டு. கொங்குநாட்டு உணவுகள் அதை பொய்யாக்குகின்றன. கருப்பட்டி அல்லது நாட்டுச்சர்க்கரை போட்டுச் செய்யும் கச்சாயம் (அதிரசம்), தட்டை முறுக்கு, சுத்து முறுக்கு, எள்ளுருண்டை என கொங்கு நாட்டுக்குரிய பலகாரங்கள் விஷேசமானவை. கரகச்சாயம், பண்ணுக்கச்சாயம், பாவாழை, தொகையல் மாவு இப்படி சுவையும், ரசனையும் நிரம்பிய பதார்த்தங்கள் நிறைய உண்டு. 

ஒப்பட்டு, கொங்கின் தனித்தன்மை மிகுந்த பதார்த்தம். பிற பகுதிகளில் கிடைக்கும் போளியைப் போலிருந்தாலும் கொங்குநாட்டு ஒப்பட்டுக்கு தனிச்சுவை. தேங்காய், பருப்பு, காரம் என நான்கைந்து சுவைகளில் கிடைக்கிறது. கோவை நகரெங்கும் தள்ளுவண்டியில் வைத்து விற்கிறார்கள். "சந்தகை" இன்னொரு கொங்கு ஸ்பெஷல். இடியாப்பத்திற்குத் தான் அப்படியொரு புனைப்பெயர். விருந்துக்கு வரும் புதுமணத் தம்பதிகளுக்கு சந்தகை-தேங்காய்ப்பால் செய்து தருவது கொங்கு மரபு. 

கொங்குமக்கள் பசியென்று வந்தாருக்கு அளந்து உணவிடுவதில்லை. பெரும்பாலும், பாரம்பரியமான எந்த உணவகத்திலும் அளவு சாப்பாடே கிடையாது. கல்யாண போஜனம் தான். போதும், போதுமென்கிற அளவுக்கு சாதத்தையும், பதார்த்தங்களையும் வைக்கிறார்கள். 

கொங்கு விருந்து மிகவும் நிறைவானது. இலைநிறைய சாதம் வைத்து நெய்யூற்றுகிறார்கள். அதோடு சேர்த்து பருப்புச்சாறு. அடுத்து மணக்க, மணக்க கெட்டிச்சாம்பார். தொடர்ந்து புளிக்குழம்பு, மோர்க்குழம்பு, வற்றல் குழம்பு.. ரசத்திலும் ஏகப்பட்ட வகை உண்டு. கொள்ளுரசம், மிளகுத்தண்ணி, தழைரசம், செலவுரசம், தாளிக்காத பொறித்துக் கொட்டிய பச்சைரசம் என தனித்த சுவையுடைய ஏகப்பட்ட ரசவகைகள்.. 

கொங்கு உணவில் காய்ந்தமிளகாய், பூண்டு, மிளகு, சின்ன வெங்காயம் ஆகியவற்றின் ஆளுமை அதிகம். வாசனைப் பொருட்களும் அதிகம் பயன்படுத்துகிறார்கள். புளிக்குப் பதிலாக எழுமிச்சம்பழம். பச்சை மிளகாய், தக்காளி பயன்பாடு குறைவு. கீரை இல்லாத விருந்தே இல்லை. பலவகையான கீரைகள், பசுமை மாறாமல் கிடைக்கின்றன. கறிவேப்பிலை, புதினா, கொத்துமல்லியும் நிறைவாக உபயோகிக்கிறார்கள்.    

சைவம் மட்டுமின்றி, கொங்கு நாட்டு அசைவ உணவுகளும் இணையற்றவை. கடலுணவுகளின் பயன்பாடு குறைவு. நாட்டுக்கோழி, பறவையினங்கள், ஆடு ஆகியவை பிரதானமான புலால் உணவுகள்.  பள்ளிப்பாளையம் சிக்கன், கொங்குநாட்டு முட்டைக் குழம்பு போன்ற புகழ்பெற்ற அசைவ உணவுகள் இங்குண்டு. 

கொங்குநாட்டின் விருந்தோம்பலின் ஆதாரமே பசுமைமாறாத விவசாயம் தான். பறித்த வேகத்தில் வந்து சேர்கின்றன காய்கறிகள். மலைகளில் திரண்டு கனிந்திருக்கும் பழங்கள் தெருவோரங்களில் குவிந்து கருத்தை கவர்கின்றன. 

-வெ.நீலகண்டன் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு