Published:Updated:

கோடிகளை நோக்கி நகரும் மானாவாரி மர சாகுபடி !

கோடிகளை நோக்கி நகரும் மானாவாரி மர சாகுபடி !

கோடிகளை நோக்கி நகரும் மானாவாரி மர சாகுபடி !

கோடிகளை நோக்கி நகரும் மானாவாரி மர சாகுபடி !

Published:Updated:
கோடிகளை நோக்கி நகரும் மானாவாரி மர சாகுபடி !
மகசூல்
ஜி.பழனிச்சாமி
"மனுஷன் கை விட்டாலும்....
மரங்கள் கை விடாது..."
கோடிகளை நோக்கி நகரும் மானாவாரி மர சாகுபடி !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோடிகளை நோக்கி நகரும் மானாவாரி மர சாகுபடி !

கோடிகளை நோக்கி நகரும் மானாவாரி மர சாகுபடி !

வற்றாதத் தண்ணீர்... நல்ல மண்கண்டம்... என எல்லாம் இருந்தும் வேலையாள், விலையின்மை என ஏகப்பட்ட காரணங்களால் குறுகியப் பயிர் வேளாண்மையை மூட்டைக் கட்டி வைத்து விட்டு, மரப்பயிருக்கு மாறும் விவசாயிகள்தான் அதிகம். அதிலும் வழக்கமான தென்னை, பழ மரங்கள் என சாகுபடி செய்வதை விட்டுவிட்டு, கொஞ்சம் மாற்றி யோசித்து... கட்டுமானத்துக்கும் தட்டுமுட்டுச் சாமான்கள் செய்வதற்கும் உபயோகப்படும் மரங்களை வளர்த்து அதிக லாபம் ஈட்டுபவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான், பொள்ளாச்சிக்கு அருகே இருக்கும் கொண்டே கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த எஸ். நந்தகுமார்.

அது ஒரு குட்டிக்காடு!

அவரின் தோட்டத்தை எட்டிப் பார்த்தால்... தோட்டம் என்று சொல்ல முடியாது, 'குட்டிக்காடு' என்றுதான் சொல்ல வேண்டும். கருப்பட்டி நிறத்தில் பரந்து கிடக்கும் 25 ஏக்கர் கரிசல்மண் பரப்பில்... திரும்பிய திக்கெல்லாம், கண்ணுக்கெட்டும் தூரம் வரை பெரிதும் சிறிதுமான மரங்கள்தான். காட்டின் மேற்பகுதியில் உயிர்மூடாக்காக கொழுக்கட்டைப் புற்கள் என விரிந்து நம்மை ஈர்க்கிறது அந்தத் தோட்டம். தோட்டத்துக்குள் கூட்டிச் சென்று சுற்றிக் காட்டியபடியே பேசத் தொடங்கினார் நந்தகுமார்.

கோடிகளை நோக்கி நகரும் மானாவாரி மர சாகுபடி !

"நிலம்தான் என்னோட பேங்க். அதுல நான் போட்டுருக்குற ஃபிக்ஸட் டெபாசிட்தான் நான் வெச்சுருக்குற மரங்கள். என்னைச் சுத்தி இருக்குற மனிதர்கள் என்னைக் கை விட்டாலும், இந்த மரங்கள் என்னிக்கும் என்னைக் கை விடாது" என உணர்ச்சிவசப்பட்டவர், தொடர்ந்தார்.

"1968-ம் வருஷம் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் முடிச்சேன். அப்போ எங்க பகுதியில பருத்தி விவசாயம்தான் நல்லா போய்க்கிட்டு இருந்துச்சு. நானும் பருத்தி விவசாயத்துல தீவிரமா இறங்கினேன். விவசாயத்து மேல இருந்த ஆர்வத்துல கோவை மாவட்ட உழவர் விவாதக் குழுவுலயும் உறுப்பினரா இருந்தேன். கொஞ்சநாள்லயே... நோய்த் தாக்குதல், ஆள் பத்தாக்குறைனு விவசாயத்துல பிரச்னைகள் பெருகவும், எல்லாரும் கொஞ்சம் கொஞ்சமாப் பருத்தி விவசாயத்தைக் குறைச்சுக்கிட்டு... தென்னைக்கு மாறினாங்க. நானும் 20 ஏக்கர்ல தென்னையை நடவு செஞ்சுட்டு மீதி நிலத்துல மானாவாரியா கோதுமை போட்டேன். அதைப் பார்த்துட்டு, பலரும் மானாவாரி நிலத்துல கோதுமையை விதைக்க ஆரம்பிச்சாங்க. இதெல்லாம் பத்து வருஷத்துக்கு முந்தின கதை.

கோதுமைக்கு பதில் மரம்!

'இப்படியே... கோதுமை, கொண்டைக் கடலைனு போட்டுக்கிட்டு இருக்கிறதுக்கு பதிலா... வேற என்ன செய்யலாம்?'னு யோசிச்சேன். அப்பதான் தரிசா இருந்த 25 ஏக்கர் நிலத்துல மர சாகுபடியை ஆரம்பிச்சேன். சவுக்கு, வேம்பு, கருவேல், பென்சில் மரம், தைலமரம், புங்கன், மூங்கில், குமிழ், தேக்கு, கொடுக்காபுளினு கிட்டத்தட்ட 30,000 மரங்கள் இருக்கு. தொடர்ந்து நடவு செஞ்சுக்கிட்டே இருக்கறதால இப்போ நடவு செஞ்ச செடியில ஆரம்பிச்சு... எட்டு வயசு மரம் வரைக்கும் வயசு வாரியா மரங்கள் இருக்கு.

ஆரம்பத்துல நட்டிருந்த சவுக்கு மரங்களை அறுவடை பண்ணி, ஒரு மரம் 50 ரூபாய்னு விற்பனை செஞ்சுட்டேன். இப்போ சவுக்கு மறுதழைவு வந்துகிட்டிருக்கு" என்றவர், ஒரு சில முக்கியமான மரங்களைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

மரங்கள் பலவிதம்... வருமானம் ஒருவிதம்!

வாகை

''மர வேலைகளுக்கு இந்த மரம் அதிகமா உபயோகப்படுறதால நல்ல தேவை இருக்கு. லாரி, பஸ் பாடி கட்டறதுக்கு இந்த மரம் அதிகமா உபயோகப்படுது. இதை 15 அடி இடைவெளியில் நடவு செய்யணும். மானாவாரினா...

கோடிகளை நோக்கி நகரும் மானாவாரி மர சாகுபடி !

12 வருஷத்துலயும், பாசன வசதி இருந்தா 8 வருஷத்துலயும் பலன் கொடுக்கும். மழைக் காலத்துல நடவு செஞ்சு, 3 வருஷத்துக்கு ஒரு தடவை கவாத்து பண்ணனும். இப்போதைய நிலவரத்துக்கு நல்லா விளைஞ்ச ஒரு மரம் 5,000 ரூபாய் வரை விலை போயிக்கிட்டுருக்கு.

கருவேல்

இது கிராமத்துல குளம் குட்டைகளில் வளந்து கிடக்கும். இதுக்கும் நல்ல விலை கிடைக்குது. 10 அடி இடைவெளியில் இதை நடவு செய்யணும். இதுக்கு கவாத்து பண்ண வேண்டிய அவசியமில்லை. 10 வருஷத்துல பலன் கிடைக்கும். ஒரு மரம் 3,000 ரூபாய் வரை விலை போகுது.

வேம்பு

இதுக்கு 15 அடி இடைவெளி தேவை. 15 வருஷத்துல பலனுக்கு வரும். இதன் தழைகள், கொட்டைகளைப் பூச்சிவிரட்டியாகப் பயன்படுத்தலாம்.

புங்கன்

இதுக்கு 20 அடி இடைவெளி தேவை. 7 ஆண்டுகளில் காய்கள் பிடிக்கும். வேம்பு, புங்கன் இரண்டு மர விதைகளும் எண்ணெய் எடுக்குறதுக்குப் பயன்படும். அதனால இதை வெட்டி விக்காம நிரந்தரமா வருமானம் பாக்க முடியும். புங்கன் எண்ணெய் மூலமா பயோ&டீசல் தயாரிக்க முடியும்.

ஆஸ்திரேலியன் பென்சில் மரம்

இதுக்கு 6 அடி இடைவெளி தேவை. இது, தேக்கு மரத்துக்கு ஈடானது. 10 வருஷம் கழிச்சு பலனுக்கு வரும். ஒரு மரம் 3,000 ரூபாய் வரை விலை போகுது.

முள்ளில்லா மூங்கில்

இதுக்கு 20 அடி இடைவெளி தேவை. ஒரு ஏக்கரில் 110 மரம் வைக்கலாம். ஆறு வருஷத்துல பலன் கொடுக்கும். ஒரு ஏக்கரில் 15,000 ரூபாய்க்கு மேல வருமானம் கிடைக்கும்.

சவுக்கு

இதுக்கு 4 அடி இடைவெளி தேவை. ஒரு ஏக்கரில் 6,000 மரங்கள் வைக்கலாம். அஞ்சு வருஷத்துல பலன் கிடைக்கும். ஒரு மரம் 50 ரூபாய் வரை விலை போகுது.’

கிடை மட்டும் போதும்!

கோடிகளை நோக்கி நகரும் மானாவாரி மர சாகுபடி !

மரங்களைப் பற்றி சொன்ன நந்தகுமார், தொடர்ந்து, "தோட்டத்தைச் சுத்தி கற்றாழை, பனை மரங்களை உயிர்வேலியா வெச்சுருக்கேன். இதனால ஆடு, மாடுக உள்ள நுழைய முடியாது. மண் அரிப்பையும் இந்த மரங்கள் தடுத்துடும். அதில்லாம மழைநீரால் நிலம் அரிக்காம இருக்கறதுக்காக வெட்டிவேரை நட்டு வெச்சுருக்கேன். தோட்டத்துக்குள்ள வருகிற மழைநீரைத் தடுத்து சேமிச்சு வைக்கறதுக்காக 50 அடி நீளம், 15 அடி அகலம், 10 அடி ஆழத்துல ஒரு குளத்தையும் ஏற்படுத்தியிருக்கேன்.

சவுக்கு, தைலம், பென்சில், மூங்கில்... மாதிரியான மரங்களெல்லாம் ஒரு தடவை அழிச்சா... திரும்பவும் மறுதழைவு வந்துடும். இங்க இருக்குற மரங்களுக்கு உரம் போடுறதே கிடையாது, உழவும் செய்றதில்லை. வருஷத்துக்கு ஒரு தடவை 500 ஆடுகளை வெச்சு கிடை போடுவேன். அதில்லாம முயல், மயில்னு காட்டுப் பிராணிகளும் வந்து போகுதுங்க. இதுங்களோட கழிவு, ஆட்டுக்கழிவு, மரத்துல இருந்து உதிருற இலைகள் எல்லாம் சேந்து மட்கி, மண் நல்லா இளகி, ஏகப்பட்ட மண்புழுக்கள் பெருகியிருக்கு. பார்த்தீனியம் மாதிரியான விஷச் செடிகள் தென்பட்டா மட்டும் பிடுங்கி எறிஞ்சுடுவோம். ஒரு மழை வந்தாக்கூட மாசக்கணக்குல மண்ணுல ஈரம் தேங்கி நிக்கும். இன்னும் பத்து வருஷத்துக்குள்ள பெரிய வனாந்திரமா மாறிடும். இத்தனைக்கும் இதுக்கு துளிகூட பாசனம் கிடையாது. அதை மட்டும் செய்துட்டா... இது பெருங்காடாவே மாறிடும்.

கோடிகளில் வருமானம்!

மரங்களை வளக்குறதைப் பாத்து எங்க வீட்டுலகூட என்னை ஒரு மாதிரிதான் பேசுனாங்க. இப்போ புவி வெப்பமயமாதல் மாதிரியான விஷயங்களைத் தெரிஞ்சிக்கிட்டதும் ரொம்ப சந்தோஷமாயிட்டாங்க. அமெரிக்காவுல இருக்குற என் பசங்க, மரங்களை வெட்டாதீங்க, வெட்டி விக்கிறப்போ கிடைக்கிற லாபத்தைவிட கார்பன்&டிரேடிங் மூலமா அதிக லாபம் சம்பாதிக்க முடியும். நாங்க அதுக்கு ஏற்பாடு பண்றோம்னு சொல்றாங்க. அதனால மறுதழைவு மரங்களை வெட்டிட்டு மத்த மரங்களை அப்படியே விட்டுடலாமானுகூட யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.

எப்படிப் பாத்தாலும், இன்னும் பத்து வருஷத்துக்குள்ள நான் வெச்சுருக்குற மரங்களோட மதிப்பு கோடிக் கணக்குல போகும்கறது மட்டும் உறுதி" என்றார் மகிழ்ச்சியாக.

"விற்பனைக்குக் கவலையே இல்லை!"

நெகமம் பகுதியில் மரக்கடை வைத்து நடத்தி வரும் செந்திலிடம் மரங்களின் விற்பனை வாய்ப்புப் பற்றிப் பேசியபோது, "தேக்கு, குமிழ், வாகை, நரிவிழி, வேம்பு, பூவரசன், மா, கருவேல், நாவல், ஆலமரம் உள்ளிட்ட மரங்களுக்கு இப்போதைக்கு நல்ல விலை கிடைச்சுக்கிட்டிருக்கு. தேக்கு மாதிரியான மரங்களை கன அடி கணக்குலயும், வேம்பு, குமிழ் மாதிரியான மரங்களை டன் கணக்குலயும், சவுக்கு, மூங்கில்.. மாதிரியான மரங்களை எண்ணிக்கையிலயும் விலை பேசுவாங்க.

பொதுவா எல்லா மரங்களுக்குமே தேவை இருக்கறதால... நல்ல விலை கிடைச்சுக்கிட்டுதான் இருக்கு. இப்போதைக்கு முள் மரம்கூட ஒரு டன் 2,000 ரூபாய் வரை விக்குது. அதேமாதிரி ஒவ்வொரு ஊருலயும் ஒரு மரத்துக்கு எப்பவும் டிமாண்ட் இருக்கும். உதாரணமா கோவையில தேக்கு, வேம்பு... மாதிரியான மரங்களுக்கும்; சேலம், ஈரோடு பகுதிகள்ல பூவரச மரத்துக்கும்; திண்டுக்கல்லுல ஆயமரத்துக்கும்; திருப்பூர்ல நாவல் மரத்துக்கும் எப்பவும் தேவை இருந்துக்கிட்டே இருக்கும்" என்று சொன்னார்.

படங்கள் வி. பாலாஜி
தொடர்புக்கு, எஸ்.நந்தகுமார்,
அலைபேசி 98422-34320

கோடிகளை நோக்கி நகரும் மானாவாரி மர சாகுபடி !
கோடிகளை நோக்கி நகரும் மானாவாரி மர சாகுபடி !
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism