ஒரு ஏக்கருக்கு... இரண்டு டிராக்டர் தொழுவுரத்தை இறைக்க வேண்டும். உடனே இரண்டு சால் உழவடித்து, களைகள் காய்ந்த உடன் இரண்டு மூட்டை வேப்பம்பிண்ணாக்குடன், இரண்டு பாக்கெட் சூடோமோனஸ்,
10 பாக்கெட் அசோஸ்பைரில்லம், 10 பாக்கெட் பாஸ்போ- பாக்டீரியா ஆகிய உயிர் உரங்களைக் கலந்து நிலத்தில் தூவிவிட்டு, மீண்டும் ஒரு சால் உழவு செய்ய வேண்டும். பிறகு, மண்வெட்டி மூலமாக குவியலாக பார் அமைத்துக் கொள்ள வேண்டும். பாருக்கு பார் அரை அடி இடைவெளி இருக்க வேண்டும். பாரின் அகலம் அரை அடியும், நீளம் 10 முதல் 15 அடிக்குள் இருந்தால் போதும்.
வெள்ளைப் பூச்சிக்கு வேப்பெண்ணெய்!
ஒரு ஏக்கருக்கு சுமார் 2 கிலோ விதை தேவைப்படும். பாரின் இரண்டு பக்கங்கள் மற்றும் உச்சி என மூன்று இடங்களில் வரிசையாக விதைகளை ஊன்ற வேண்டும். இதேபோல 10 முதல் 15 செ.மீட்டர் இடைவெளியில், வரிசை வரிசையாக ஊன்ற வேண்டும். உடனே தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு, மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை ஈரம் காயாதபடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நான்காவது நாள் முளைப்பு வரும்.
முதல் களையெடுப்பதற்கு முன் அதாவது 12 அல்லது 13-ம் நாள் சாறு உறிஞ்சும் பேன், வெள்ளைப்பூச்சிகளை அழிப்பதற்காக, ஒரு டேங்குக்கு 100 மில்லி வேப்பெண்ணெயுடன், ஒட்டும் திரவமாக 100 மில்லி காதி சோப்புக் கரைசலைக் கலந்து தெளிக்க வேண்டும் (இரண்டு பார் காதி சோப்பை ஒரு லிட்டர் தண்ணீரில் முதல் இரவே ஊற வைத்து ஒட்டும் திரவத்தைத் தயாரித்துக் கொள்ளவேண்டும்). இந்தக் கரைசலை ஏக்கருக்கு 10 டேங்க் வீதம் தெளிக்க வேண்டும். 15 அல்லது 16-ம் நாள் கொத்து மூலம் களை எடுக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டச் செடிகள் ஒரே இடத்தில் இருந்தால், அதைக் களைத்துவிட வேண்டும். களையெடுத்த பிறகு, நான்கு நாட்கள் தண்ணீர் பாய்ச்சக் கூடாது. அப்போதுதான் களைகள் சுத்தமாக சாகும்.
28-ம் நாளில் சுண்டுவிரல் அளவில் கிழங்குவிட ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் பச்சைப்புழு தாக்குதல் இருந்தால், ஏற்கெனவே தெளித்த வேப்பெண்ணைய், காதி கரைசலை மறுபடியும் அடிக்க வேண்டும். மற்றபடி மருந்து, உரம் என எதுவுமே தேவையில்லை. இடையில் களைகள் முளைத்தால் கையால் களைத்து விடவேண்டும். 37-ம் நாள் அறுவடையை ஆரம்பித்து,
45 நாட்களுக்குள் அறுவடையை முடிக்க வேண்டும். 45 நாட்களுக்கு மேல் தாமதித்தால், முள்ளங்கி முற்றிவிடும். நிறமும் மாறி விடும். இதற்கு நல்ல விலை கிடைக்காது.
சாகுபடி பாடத்தை முடித்த சின்னக்காளி, ''எனக்கு ஏக்கருக்கு 12 டன் வரை மகசூல் கிடைக்குது. மழைக்காலத்துல மத்த பகுதிகள்ல முள்ளங்கி விளைச்சல் ரொம்ப குறைவா இருக்கும். ஆனா, எங்க ஊர் மேட்டுப் பகுதிகள்ல கஷ்டப்பட்டு முள்ளங்கியை விளைவிக்கறதால, எங்க முள்ளங்கிக்கு நல்ல விலை கிடைக்கும். சராசரியா கிலோவுக்கு ரெண்டு ரூபாய்ல இருந்து 13 ரூபாய் வரை சீசனுக்கு ஏத்தமாதிரி கிடைக்கும். சராசரியா கிலோவுக்கு 5 ரூபாய்னு விலைபோகும்" என்று சொன்னார்.
ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம்... இது ரசாயனக் கணக்கு!
|
|