ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விவசாய விஞ்ஞானி நரசிம்ம ரெட்டி பேசும்போது, "ஆண்டுக்கு 5,000 கோடி ரூபாய் அளவில் இந்தியாவில் விதை வர்த்தகம் நடக்கிறது. இதைக் குறிவைத்துதான் பன்னாட்டு நிறுவனங்களெல்லாம் இந்தியாவை நோக்கிப் படை எடுக்கின்றன. 2001-ம் ஆண்டில் இங்கு பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விதைகளை உற்பத்தி செய்து கொண்டிருந்தன. தற்போது மூன்று நிறுவனங்கள் மட்டும்தான் உள்ளன. பெரிய நிறுவனங்கள் எல்லாம் சின்னச்சின்ன நிறுவனங்களை வளைத்துப் போட்டு கபளீகரம் செய்து விட்டதால்தான் இந்த நிலை. கோடிக்கணக்கில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களையே இப்படி வளைக்கும்போது, விவசாயிகளெல்லாம் அவர்களுக்கு எம்மாத்திரம்?
தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் விதைச் சட்டத்தின்படி, மத்திய அரசிடம் பதிவு செய்தவர்கள் மட்டும்தான் உள்நாட்டில் விதை விற்பனையில் ஈடுபட முடியும். அதேசமயம், பன்னாட்டு நிறுவனங்கள், தங்களின் தாய்நாட்டில் பதிவு செய்திருந்தாலே போதுமாம். இதிலிருந்தே பன்னாட்டு நிறுவனங்களுக்கு வால் பிடிக்கும் மத்திய அரசின் குள்ளநரித்தனம் பட்டவர்த்தனமாகத் தெரியவில்லையா?
விதைச் சட்டத்தில்... விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்குமான வித்தியாசத்தைக் கோடிட்டுக் காட்டவேயில்லை. இதன்படி... இனி, எந்த விவசாயியும் தன்னிடம் இருக்கும் விதைகளை யாருக்கும் விற்க முடியாது. சில நூறு ரூபாய்களுக்கு விதைகளை விற்பனை செய்யும் விவசாயி, கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனத்துக்கு ஈடாகப் போட்டிப் போட்டுத்தான் விற்பனை அனுமதியைப் பெற முடியும். இதெல்லாம் நடக்கிற காரியமா?
|