பொதுவாக, ஒரு ஏக்கருக்கு 3 முதல் 4 டன்கள் விதைக் கரும்புகளை நடவு செய்து வருகிறோம். இதனால் விதைக் கரும்புக்காக அதிக பணம் செலவழிக்கும் சூழ்நிலை உள்ளது. ஆனால், ஜீரோ பட்ஜெட் முறையில் ஒரு ஏக்கருக்கு 250 கிலோ விதைக் கரும்புகளே போதுமானதாக இருக்கின்றன. இந்த முறையில் நடவு செய்தால், கிட்டத்தட்ட 15 மடங்கு பணத்தை மிச்சப்படுத்த முடியும்.
கரும்புக்கு இடையில், தட்டைப்பயறு, பீன்ஸ், மிளகாய், வெங்காயம்... உள்ளிட்ட காய்கறிகளை ஊடுபயிராக நடவு செய்யலாம். இவற்றை கரும்பு தவிர பப்பாளி, வாழைக்கு இடையிலும் ஊடுபயிராக செய்யலாம். ஊடுபயிர்கள் மூலமாக வரும் வருமானமே பண்ணை நிர்வாகத்துக்குப் போதுமானதாக இருக்கும். முதன்மைப்பயிர் மூலம் கிடைக்கும் முழுப்பணமுமே நமக்கு லாபம்தான்.
நான்கு வரிசை சாகுபடி!
நிலத்தில் இரண்டு அடி அகலத்தில் வரிசையாக பார் ஓட்ட வேண்டும். முதல் பாரின் இடது ஓரத்தில் கரும்பை நடவு செய்து, நடுவில் வெங்காயத்தையும் வலது ஓரத்தில் தட்டைப்பயறையும் நடவு செய்ய வேண்டும்.
இரண்டாவது பாரின் இடது ஓரத்தில் மிளகாயையும் வலது பக்கத்தில் நெல், மக்காச்சோளம், துவரை, கடலை, எள், பச்சைப்பயறு, உளுந்து, கம்பு, காய்கறிகள், கால்நடைத் தீவனப் பயிர்கள், பூண்டு, இஞ்சி, மஞ்சள், பருத்தி... என வீட்டுக்குத் தேவைப்படும் எந்தப் பயிரை வேண்டுமனாலும், நடவு செய்து கொள்ளலாம்.
மூன்றாவது பாரின் இடது பக்கத்தில் வீட்டுக்குத் தேவையான பயிர்களையும், வலது பக்கத்தில் மிளகாயையும் நடவு செய்ய வேண்டும்.
நான்காவது பாரின் இடது பக்கத்தில் தட்டைப்பயறையும் நடுவில் வெங்காயத்தையும் வலது ஓரத்தில் கரும்பையும் நடவு செய்ய வேண்டும். மீண்டும் அடுத்த பாரில் வெங்காயத்தில் இருந்து ஆரம்பித்து, இதேபோல நடவு செய்யும்போது... கரும்புக்குக் கரும்பு எட்டடி இடைவெளி வந்துவிடும். அதாவது கரும்பு, வெங்காயம், தட்டைபயறு, மிளகாய், வீட்டுப்பயிர்கள், மிளகாய், தட்டைப்பயறு, வெங்காயம்... என்ற வரிசையில் இருக்க வேண்டும் (பார்க்க படம்).
எல்லா விதைகளையும் பீஜாமிர்தக் கரைசலில் விதைநேர்த்தி செய்துதான் நடவு செய்ய வேண்டும். நடவுக்கு முன் ஒரு முறை ஜீவாமிர்தம் கலந்த நீரைப் பாசனம் செய்ய வேண்டும். நடவுக்குப்பின் மாதத்துக்கு மூன்று முறை பாசனநீருடன் ஜீவாமிர்தத்தைக் கலந்துவிட வேண்டும். நடவு செய்த 3 மற்றும் 7-ம் நாட்களில் நீர் பாய்ச்ச வேண்டும். அதன்பிறகு, மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து நீர்ப் பாய்ச்சினால் போதும்.
|