"விவசாயிகளை, விவசாயத்திலிருந்து வெளியேற்றினால்தான் நாட்டில் வறுமை ஒழிந்து, தொழில்வளம் கூடும். பொருளாதாரப் புள்ளி உயரும்''
-சமீபத்தில் டெல்லியில் பத்திரிகை ஆசிரியர்கள் சிலரை சந்தித்தபோது, இப்படி தத்துவ முத்துக்களை உதிர்த்திருக்கிறார் பொருளாதாரப் புலி, பாரத பிரதமர் மன்மோகன் சிங்.
‘விவசாயத்திலிருந்து விவசாயிகளை வெளியேற்றி, நிலங்களைக் கையகப்படுத்தி தொழிற்சாலைகள் அமைக்கலாம். அந்தந்தப் பகுதிகளில் உள்ள விவசாயிகளையே தொழிற்சாலைகளில் அடிமட்ட வேலைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அப்போது விவசாயிகளுக்கு மாதம்தோறும் ஒரு நிரந்தர வருவாய் வரும். எனவே வறுமை ஒழிந்து விடும்' என்கிற ரீதியில் கணக்குப் போட்டு பேசிக் கொண்டிருக்கிறார் மன்மோகன் சிங்.
ஏற்கெனவே, 'பொருளாதார வளர்ச்சி', 'தொழில் வளர்ச்சி' என கடிவாளம் கட்டிக் கொண்டு, தொடர் பாய்ச்சலில் இருந்த அமெரிக்கக் குதிரை, தற்போது குழிக்குள் குப்புறடித்து விழுந்து, எழுந்திருக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.
இந்த விஷயம் நம் எல்லாரையும் விட, மன்மோகன் சிங்குக்கு மிகமிக நன்றாகவே தெரியும். காரணம்... அவர்தான் அமெரிக்காவின் கெழுதகை நண்பராயிற்றே! அப்படியிருந்தும், தொழில் வளர்ச்சியை மட்டுமே பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதுதான் புரியாதப் புதிர்!
‘உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்பதுதான் நம் பண்பாடு. உழவைவிட்டு தொழிலை மட்டும் முன்னெடுத்துச் செல்லும் போது, பொருளாதாரம் பெருகும், ஆனால், வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து போகும். இதுவரை எந்தத் தொழிற்சாலையிலும் உணவு தானியங்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப் படவில்லை. இவர் சொல்வது போல், பொருளாதாரம் வேண்டுமானால் வளரும். ஆனால், வறுமை ஒழியாது. இப்போது இருப்பதைவிட அதிகமாக பஞ்சமும், பட்டினியும் தலைவிரித்தாடும். ஒரு கட்டத்தில் பொருளாதாரமும் குப்புற விழும்.
இதற்கு, நிகழ்கால உதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்கா... உணவுக்காக இன்றைக்கு உலக நாடுகளை எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறது. அங்கே, நாள்தோறும் ஒரு வங்கி திவாலாகி, மூடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தியாவுக்கும் இந்நிலை வராது என்பது நிச்சயமல்ல...! எடைக்கு எடை மானியம் கொடுப்பதால், செழிப்பாக வளர்கிறது தொழில் துறை. ஆனால், சலுகைகள் சரியாக கிடைக்காமல், சவளைப் பிள்ளையாட்டம் வளர்கிறது விவசாயம். ஊக்க பானம் குடிக்கிற குழந்தைக்கும், கஞ்சி குடிக்கிற குழந்தைக்கும் வளர்ச்சி விகிதம் வித்தியாசம் இருக்கத்தானே செய்யும்.
|