Published:Updated:

விவசாயிகளின் கண்ணீரில் கப்பல் விடும் வியாபாரிகள் !

விவசாயிகளின் கண்ணீரில் கப்பல் விடும் வியாபாரிகள் !

விவசாயிகளின் கண்ணீரில் கப்பல் விடும் வியாபாரிகள் !

விவசாயிகளின் கண்ணீரில் கப்பல் விடும் வியாபாரிகள் !

Published:Updated:
விவசாயிகளின் கண்ணீரில் கப்பல் விடும் வியாபாரிகள் !
ஆதங்கம்
ம.செந்தமிழன்
விவசாயிகளின் கண்ணீரில் கப்பல் விடும் வியாபாரிகள்!
விவசாயிகளின் கண்ணீரில் கப்பல் விடும் வியாபாரிகள் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விவசாயிகளின் கண்ணீரில் கப்பல் விடும் வியாபாரிகள் !

இந்திய நாட்டின் மூலைமுடுக்குகள் வரை அதிதீவிரமாக பரவி இருக்கிறது 'ஊழல்'என்ற புற்றுநோய். இதில் சிக்கிக் கொண்டு பல்வேறு துறைகளும் படாதபாடு படுகின்றன. குறிப்பாக, 'நாட்டின் முதுகெலும்பு'என்று வர்ணிக்கப்படும் விவசாயம், இந்த ஊழலில் சிக்கிக்கொண்டு கிட்டத்தட்ட சாகும் நிலையில் கிடக்கிறது.

விவசாயம் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு அரசியல்வாதிகளும், அதிகாரவர்க்கத்தினரும் முறைகேடான வழியில் அரசாங்கப் பணத்தைக் கொள்ளை அடிக்கும் ஊழல் ஒருபுறமென்றால்... வியாபாரிகள் என்ற பெயரில் இடைத்தரகர்கள் நடத்தி வரும் ஊழல் ராஜாங்கம் இன்னொரு புறம் விவசாயிகளின் கழுத்தை நெறிக்கிறது. சொல்லப்போனால், 'அரசியல்வாதிகளே தேவலாம்'எனும் அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறது இடைத்தரகர்களின் அராஜகம்.

வரைமுறையே இல்லாமல் வாரிச்சுருட்டும் இந்தத் திமிங்கலங்களிடம் இருந்து நாம் தப்பித்தால் மட்டுமே, இனி விவசாயம் வாழும். இனியாவது நாம் விழித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, ஒரு விவசாயியான நான், சக விவசாயத் தோழர்களிடம் சில கருத்துக்களை முன்வைக்கிறேன்.

கஷ்டப்பட்டாலும் கால் பங்கு காசுதான்!

கடந்த ஆகஸ்டு மாதம், விவசாயிகளிடம் கிலோ 5 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்ட கத்திரிக்காய், நகரங்களில் கிலோ 20 ரூபாய்க்கும், மாநகரங்களில் 24 ரூபாய்க்கும் கிராமங்களில் 16 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. ஆக, உற்பத்தி செய்தவனுக்கு சில்லரைக் கடைகளில் விற்கப்படும் விலையில் நான்கில் ஒரு பங்கு மட்டும் கிடைத்தது. இந்தக் கால் பங்கு காசும், முழுமையாக விவசாயிகள் கைக்குக் கிடைப்பதில்லை.

அறுவடையானக் காயைத் தோட்டத்திலிருந்து சந்தைக்குக் கொண்டு போவதற்குள் ஒரு விவசாயி ஏகப்பட்ட செலவுகள் செய்ய வேண்டியுள்ளது. அதாவது, ஒரு பை (20 கிலோ) டிஸ்கோ கத்திரிக்காய்க்கு பறிப்புக் கூலி ரூ.22, வண்டி வாடகை ரூ.7, கமிஷன் ரூ.12, சுங்க வரி ரூ.1, இறக்குக் கூலி ரூ.2, தோராயமாக மொத்தம் ரூ.44 செலவு ஆகிறது. ஒரு பை கத்திரி அதிகபட்சமாக 120 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதில் மேலே சொன்ன செலவுகள் போக, விவசாயிகளின் கையில் கிடைப்பது 76 ரூபாய் மட்டும்தான். இந்தக் கணக்கின்படி, ஒரு கிலோ கத்திரி விற்பனை மூலம் விவசாயிக்குக் கிடைப்பது... வெறும் 3 ரூபாய் 80 பைசா மட்டுமே! ஒரு விவசாயி மற்றும் அவருடைய குடும்பம் மூன்று, நான்கு மாதங்களுக்கும் மேலாக வயலில் உழைத்ததற்கு சம்பளத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால்... மேலே சொன்ன 3.80 பைசா என்பது எந்த மூலைக்கு? அதுமட்டுமல்ல, கணக்கில் வண்டி வாடகை, சந்தையிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தோட்டங்களுக்குத்தான் கணக்கிடப்பட்டுள்ளது. அதைக் காட்டிலும் அதிகமான தொலைவிலிருந்து வரும் காய்களுக்குக் கணக்கிட்டுப் பாருங்கள்...?

50 கிராம் விதை 250 ரூபாய்...1 கிலோ காய் 3.80 ரூபாய்!

'டிஸ்கோ'எனப்படும் வீரிய ஒட்டுரகம்தான் தமிழகம் முழுவதும் பரவலாகப் பயிரிடப்படுகிறது. இந்த டிஸ்கோ கத்திரிக்காயின் விதை 50 கிராம் 250 ரூபாய்! இந்தக் காய்களிலிருந்து விதை எடுத்து நாற்று விட்டால், காய்ப்புத் திறன் குறையும் என்பதால், ஒவ்வொரு முறையும் விதையை விலைக்கு வாங்கி நடவேண்டும். 50 கிராம் விதையை 250 ரூபாய்க்கு வாங்கி, நாற்றுவிட்டு பராமரித்து, பூச்சிகளுடனும், நோய்களுடனும் போராடி விளைவிக்கும் விவசாயிக்குக் கிடைப்பது கிலோவுக்கு 3 ரூபாய் 80 பைசா என்பது எவ்வளவு பெரியக் கொடுமை? இல்லையில்லை... கொள்ளை!

கொள்ளையோ கொள்ளை!

ஒரு தொழில் செய்பவர், வரி, வேலையாட்கள் சம்பளம், நடைமுறைச் செலவுகள் என அனைத்துச் செலவுகளையும் தனது லாபத்திலிருந்துதான் செலுத்துவார். ஆனால், விவசாயத்தில் மட்டும் இந்த நடைமுறை தலைகீழாக இருக்கிறது. வியாபாரிகள் தாங்கள் செலுத்த வேண்டிய சுங்கவரி, அவர்கள் கடையில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கான சம்பளத்தில் ஒரு பகுதியைக்கூட விவசாயியிடமிருந்தே வசூலித்துக் கொள்கிறார்கள். இதைவிடக் கொடுமை, சாக்கு எடை என 2 கிலோவை கழித்துக் கொள்வது. உண்மையில், காய்கள் கட்டப்படும் சணல் சாக்குகளின் எடை 900 கிராம் முதல் 1,100 கிராம்கள் மட்டும்தான். ஆனால், இரண்டு கிலோ என்று கணக்குக் காட்டி கழிப்பதால், மூட்டைக்கு 1 கிலோ தனியாக கொள்ளை அடிக்கப்படுகிறது.

காலிஃபிளவர் ஒட்டு ரகம், ஒரு சாக்கு ரூ.80 முதல்

ரூ.120 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு சாக்கில் 15 பூக்கள் இருக்கும். ஆக, ஒரு பூவுக்கு ரூ.5.33 முதல் ரூ.8 வரை விலை கிடைக்கிறது. இதில், ஏற்கெனவே உள்ளபடி கமிஷன், வாடகை, சுங்கம், பறிப்புக் கூலி உள்ளிட்டச் செலவுகளைக் கழித்துவிட்டால், கையில் கிடைப்பது ஒரு பூவுக்கு ரூ.3 முதல் ரூ 5.50 மட்டும்தான். இதே காலிஃபிளவர், சில்லரை விற்பனைக் கடைகளில் ஒரு பூ 12 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

கொத்துமல்லித் தழை ஒரு கிலோ 40 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்படுகிறது. சில்லரைக் கடைகளில் கிலோ ரூ 120 வரை விற்கப்படுகிறது.

ஆடி மாதத்தில் வெண்டைக்காய் சராசரியாக ரூ.5 முதல் ரூ.7 வரை கொள்முதல் செய்யப்பட்டது. கடைகளில் விற்கப்பட்ட விலை கிலோவுக்கு ரூ.18 முதல் ரூ.22 வரை. மிகப் பெரியக் காய்கறிச் சந்தையான ஒட்டன்சத்திரத்திலேயே சில்லரை விலையில் வெண்டைக்காய் கிலோ 12 ரூபாய் வரை விற்கப்பட்டது! அதாவது, ஒரே ஊருக்குள்ளேயே வாங்கி விற்கும் வியாபாரிக்கு ஒரு கிலோவுக்கு

7 ரூபாய் லாபம் கிடைக்கிறது. அந்தக் காயை படாத பாடுபட்டு உற்பத்தி செய்து சந்தைக்கு கொண்டு வரும் விவசாயிக்கு எல்லாச் செலவுகளும்போக கையில் கிடைப்பது... கிலோவுக்கு 3 ரூபாய் 50 காசு. இப்படியரு கொடுமை, எந்தத் தொழிலிலும் இல்லை.

காய்கறிகளின் விலை ஏற்றத்தைக் கண்டித்து வாய் கிழிய பேசி, போராட்டங்களை நடத்தும் கட்சிகளும், அதைப் பற்றியே பிரஸ்தாபித்துக் கொண்டிருக்கும் பொதுஜனங்களும், இந்த நிலைக்குக் காரணமான வியாபாரிகளைப் பற்றி வாய் திறப்பதே இல்லை. உண்மையில் விலை ஏற்றத்தின் பலன், யாரைச் சென்று அடைய வேண்டுமோ அவர்களைச் சென்று அடைவதே இல்லை. இடைத்தரகர்களின் அரசாட்சிதான் விவசாயத்தில் நடக்கிறது.

காய்கறிகளின் விலை திடீரென்று சரிந்துவிடும்போது பாதிக்கப்படும் விவசாயிகளின் நிலையை வார்த்தைகளால் விளக்க முடியாது. ஆவணி மாதத் தொடக்கத்தில் விலை சரியத் தொடங்கிய கத்திரிக்காய் சில்லரை விலையில் சென்னையில் கிலோ ரூ.7 வரை விற்கப்பட்டது. ஆந்திராவிலிருந்து அதிகளவு கத்திரி வந்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது. அந்தச் சூழலில், தமிழகத்தில் கிலோ 2 ரூபாய்க்கும் குறைவாகவே கொடுத்து கத்திரி கொள்முதல் செய்யப்பட்டது. பறிப்புக் கூலிகூட கிடைக்காத நிலையில், பல விவசாயிகள் காய்களைப் பறிக்காமல், ஆடு, மாடுகளைவிட்டு மேய்த்த கொடுமை நடந்தது. ஆனால், எந்த விலைக்கு விற்றாலும் வியாபாரிகள் தங்களுக்கான கமிஷனைக் குறைப்பதும் இல்லை, சுங்கவரிச் செலவை விவசாயிகளிடமிருந்து பிடுங்காமல் விடுவதும் இல்லை.

அலட்சிய அரசியல்வாதிகள்!

வேளாண் விளைபொருட்களின் விலை ஏற்றத்தைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் பறையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு இந்த விவரங்கள் தெரியாதா? ஒருபுறம் வேளாண் விளைபொருட்கள் விலையேற்றம், மறுபுறம் விவசாயத்தில் தொடர் நட்டம். இந்த நிலைக்குக் காரணம் யார் என்பதை சிந்திக்க மறுக்கிறார்கள். விதைகளின் விலையைப் பன்மடங்கு உயர்த்திக் கொண்டே போகும் பன்னாட்டு நிறுவனங்கள், உரம், பூச்சிவிஷம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை உயர்வு, அரசின் வேளாண் விரோத நடவடிக்கைகள், இடைத்தரகர்களின் பகல்கொள்ளை இவைதான் விலை உயர்வுக்குக் காரணம். இந்த எல்லாக் காரணங்களாலும் பாதிக்கப்படுவது விவசாயிகள் மட்டும்தான்.

இதிலிருந்து காப்பாற்றுவார்கள் என்று இதுவரை பலரையும் நம்பி, நட்ட ஆற்றில் பயணம் போனது போதும். இனி நம் பாதையை நாம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வேண்டும் கிராமச் சந்தை!

அதற்கு முதல்படியாக, நமது விளைபொருட்களை நாமே நேரடியாக விற்பனை செய்யும் கிராமச் சந்தைகளை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். எல்லா விளைபொருட்களையும் நகரங்களுக்கு எடுத்து வந்து, குறைந்துவிலைக்கு கொடுத்துவிட்டு ஏமாந்து போகின்றனர் விவசாயிகள். அதேசமயம், கிராமங்களுக்கான காய்கறிகள், அருகே உள்ள நகரச் சந்தைகளில் இருந்து போகின்றன. இது எவ்வளவு விபரீதமான சூழல் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

இந்த நிலையை மாற்ற, விவசாயிகள் ஒன்று சேர வேண்டும். மறைந்து போன உள்ளூர்ச் சந்தைகளுக்கு உயிர் தர வேண்டும். சந்தை விலையைவிட கிலோவுக்கு 2 ரூபாய் குறைவாக விற்றாலும், விவசாயிகளுக்கு லாபம்தான்.

இயற்கை வழி வேளாண் முறைக்கு மாற வேண்டும். மரபு ரகப் பயிர்களைப் பயிரிட வேண்டும். விதைகளை மட்டுமல்ல, எந்த இடுபொருளையும் பணம் கொடுத்து வாங்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக, இடைத்தரகர்களைப் புறக்கணிக்க வேண்டும்.

சிந்திப்போம்... செயல்படுவோம்!

விவசாயிகளின் கண்ணீரில் கப்பல் விடும் வியாபாரிகள் !
விவசாயிகளின் கண்ணீரில் கப்பல் விடும் வியாபாரிகள் !
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism