''காய்கறிகள், பழங்கள், பன்றி இறைச்சி, கோழி இறைச்சி, வாசனைப்பொருட்கள்... போன்றவற்றை கதிர்வீச்சுக்கு உள்ளாக்குவதன் மூலம், அதில் உள்ள பாக்டீரியா மற்றும் பூச்சிகள் அழிந்து விடும். மேலும், மனித உடலில் ஒட்டுண்ணியாகப் பரவும் சில பூச்சிகளையும் இந்த கதிர் வீச்சு அழித்து விடும்.
கதிர்வீச்சுக்கு உள்ளாக்கப்படும் விதைகளின் மூலம் இன்னும் பல்வேறு மாறுதல்களையும் செய்ய முடியும். இதுகுறித்து தொடர்ந்து ஆய்வுகள் செய்துகொண்டே இருக்கிறோம்" என்று சொல்லும் அந்நாட்டின் வேளாண்துறை அதிகாரியான ஜூ,
''மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் மூலம் கிடைக்கும் உணவுப் பொருட்களின் தன்மை மாறும். ஆனால், கதிர்வீச்சுக்கு உள்ளாக்கப்பட்ட விதைகளின் மூலம் உருவாகும் பொருட்களால் எவ்வித மாற்றமும் இருக்காது" என்று சான்று கொடுக்கிறார்.
ம்... 'மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம் விளையும் உணவுப் பொருட்களின் தன்மை மாறும்' என்கிறார் இவர்.
ஆனால், 'அப்படி எந்தப் பிரச்னையும் வராது' என்று சொல்லும் அமெரிக்க விஞ்ஞானிகளை வழிமொழிந்து கொண்டுள்ளனர் நம்மூர் விஞ்ஞானிகள் பலர்!
ஏற்கெனவே, ரசாயன உரம் மற்றும் பூச்சிமருந்துகளால் எந்த ஆபத்தும் இல்லை என்று சொல்லி நம் தலையில் கட்டியவர்கள்தானே...!
அதேசமயம், இன்றைக்கு அணுக்கதிர் தொழில்நுட்பத்துக்கு வால் பிடிக்கும் சீன அதிகாரிகள், 'இதனால் எந்தப் பிரச்னையும் வராது' என்று சொல்வதையும் நூற்றுக்கு நூறு சதவிகிதம் நம்ப முடியாது.
அதில் விளைந்த உணவுப் பொருட்களை வாங்கித் தின்றவர்கள் எப்படி நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது போகப்போகத்தானே தெரியும்! அதன் பிறகுதானே ஒரு முடிவுக்கு வரமுடியும்!
இதையெல்லாம் பார்க்கும்போது, 'இருக்கறத விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைப்படாதே' என்று நம்மூரில் சொல்லி வைத்திருக்கும் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. ஆராய்ச்சி, வளர்ச்சி என்று நம்மைச் சுற்றி விஷ வளையங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கும் இந்த ஆராய்ச்சிப் புள்ளிகளுக்கு இதெல்லாம் எந்தக் காலத்திலும் புரியப் போவதே இல்லை.
பின்னே... ஏற்கெனவே நடத்தப்பட்ட விஞ்ஞான வளர்ச்சி கொண்டாட்டங்களின் எதிர்விளைவாக 'குளோபல் வாமிங்' எனும் கண்ணி வெடி நம்முடைய கால் பாதங்களுக்கு கீழே தயாராக இருக்கிறது. அதன் மீது நின்று கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்தும்கூட... அவர்கள் எல்லாம் அயர்வதாகத் தெரியவில்லையே?!
|