விபூதின்னாலே... பெரும்பாலும் நெல் கருக்கா, காகிதம் மாதிரியானப் பொருட்களை எரிச்சுதான் தயாரிச்சு, விற்பனை பண்றாங்க. சில இடங்களில் சில வேதிப்பொருட்களைக் கலந்துகூட தயாரிச்சு விக்கிறாங்க. இதையெல்லாம் உபயோகிச்சா... தோல் நோய்கள் வர்றதுக்கான வாய்ப்பு இருக்கு. நாட்டு மாட்டுச்சாணத்தை எரிச்சுதான் விபூதி தயார் பண்ணணும். இதுல, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், கந்தகம், செம்பு, துத்தநாகம் எல்லாம் அடங்கியிருக்கறதால உடம்புக்கு நல்லது. நாங்க ஆன்மிகப்பணியில் இருக்கறதால முறைப்படி சுத்தமான விபூதியைத் தயார் பண்ணிட்டிருக்கோம். தமிழ்நாட்டுல ஏறத்தாழ ஒரு கோடி குடும்பங்கள் தினமும் விபூதியைப் பயன்படுத்துறாங்க. அதனால சுத்தமான விபூதிக்கு பெரிய அளவில் சந்தை வாய்ப்பு இருக்கு.
ஒரு மாட்டிலிருந்து ஆண்டுக்கு ஒரு லட்சம்!
ஒரு மாட்டில் இருந்து தினமும் சராசரியா 10 கிலோ அளவுக்கு சாணம் கிடைக்கும். அதுல 2 கிலோ விபூதி தயாரிக்க முடியும். ஒரு கிலோ விபூதி 200 ரூபாய் வரை விலை வெச்சு வெளியில கொடுக்கிறோம்.
மேலும், எங்க பகுதியில விவசாயிகள்கிட்ட இருக்குற வயதான நாட்டு மாடுகளை நாங்க வாங்கிக்கிட்டு, அதுக்குப் பதிலா வேற இளவயது மாடுகளை கடன் அடிப்படையில கொடுத்துக்கிட்டிருக்கோம். விவசாயிகள் அந்த மாடுகள் மூலமா உற்பத்தி பண்ற விபூதி உள்ளிட்ட பொருட்களை நாங்களே வாங்கிக்கிட்டு கடன் தொகையைக் கழிச்சுடுவோம். விவசாயிகளிடம், வயதான நாட்டு மாடுகள வளர்க்கச் சொல்லியும் அறிவுறுத்திக்கிட்டு இருக்கோம்.
விவசாயிகள் உற்பத்தி செய்ற விபூதியை நாங்களே ஒரு கிலோ 125 ரூபாய்னு வாங்கிக்கிறோம். ஒரு மாட்டு மூலமா கிடைக்கிற சாணத்துல விபூதி தயாரிச்சு, வருசத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் சம்பாதிக்க முடியும்.
எங்க கோசாலை மூலமா மாதம் 700 கிலோ வரை விபூதி கிடைக்குது. எங்க மடங்கள், மற்ற கோயில்களுக்குக் கொடுத்தது போக, மீதம் உள்ள விபூதியை விற்பனை செஞ்சுடுவோம்" என்றார்.
உபதொழில் தரும் உயர் வருமானம்!
கணபதி சுப்ரமணியத்தின் ஆலோசனைப்படி விபூதி தயாரித்து வரும் முப்பைத்தன்குடியைச் சேர்ந்த கண்ணகி\குமார் தம்பதியரை சந்தித்தோம். முதலில் பேசிய கண்ணகி, "என் வீட்டுக்காரர் 15 வருஷமா சவுதியில் வேலை பார்த்துட்டு வந்திருக்கார். ஆரம்பத்துல இருந்தே விவசாயம்தான் எங்க தொழில். உபத்தொழில் ஏதாவது செய்யலாம்ங்கற யோசனையில, காரைக்கால் கே.வி.கே. கொடுக்குற பயிற்சிகள்ல கலந்துக்குவேன். அங்க பயிற்சி எடுத்த நிறைய விஷயங்களை செயல்படுத்திப் பாத்தப்போ, எதுவுமே பெருசா எனக்கு சரிப்பட்டு வரல.
|