- இதைச் சொன்னது... யாரோ ஒரு இயற்கை விவசாய ஆர்வலரல்ல. கோயம்புத்தூரிலிருக்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர். ப. முருகேசபூபதி.
'மண் வளம் மற்றும் பயிர் உற்பத்திக்கு உகந்த ஒருங்கிணைந்த சமச்சீர் உர மேலாண்மை' பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறது பல்கலைக்கழகம். அதில் கிடைத்திருக்கும் சில தகவல்களைப் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டபோதுதான், 'மண்ணின் வளம்' பற்றி, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் பேசினார் துணைவேந்தர்.
பல்கலைக்கழகத்தின் மக்காச்சோள வயலைச் சுற்றிக்காட்டியபடியே பேசியவர், "இந்த வயலை 18 பாத்திகளாகப் பிரித்துக் கொண்டு, ஒவ்வொரு பாத்திக்கும் ஒவ்வொருவிதமான உரங்களை அளித்தோம். அதாவது... தழைச்சத்து மட்டும்; தழை+மணி; தழை+சாம்பல்; தழை+மணி+சாம்பல்; சாம்பல் சத்து மட்டும்; மணிச்சத்து மட்டும்; தழை, மணி சாம்பல் சத்துகள்; தழை+மணி+சாம்பல்+சாண எரு, கோழி எரு, தொழு எரு என்று தனித்தனியாக கொடுத்து பரிசோதனை செய்தோம்.
தழைச்சத்துக்காக யூரியா, மணிச்சத்துக்காக சூப்பர்-பாஸ்பேட், சாம்பல் சத்துக்காக பொட்டாஷ்... இவற்றைப் பயன்\படுத்தினோம். பயிர்களுக்குத் தேவையான சத்துக்களை தனித்தோ, கூட்டாகவோ, எருக்களோடு ஒருங்கிணைத்தோ நிலத்தில் தொடர்ந்து இடும்போது... மண் மற்றும் பயிர் இரண்டிலும் ஏற்படும் மாற்றங்களை அறிவதற்காகத்தான் இந்த ஆராய்ச்சி.
தழைச்சத்தை மட்டும் சாண எருவோடு கலந்து கொடுத்தபோது கிடைத்த விளைச்சல், தழை+மணி+சாம்பல் சத்துக்களை மொத்தமாக அளித்த பாத்தியின் விளைச்சலுக்கு ஈடாக இருக்கிறது. தற்போது மக்காச்சோளத்தை ஆராய்ச்சி செய்து இதை உறுதி செய்திருக்கும் நாங்கள், ஏற்கெனவே 151 விதமான பயிர்களை இங்கே பயிரிட்டுத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம். இந்த ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
|