Published:Updated:

பயறு விவசாயிகளைத் தாங்கிப் பிடிக்கும் மத்திய அரசு !

பயறு விவசாயிகளைத் தாங்கிப் பிடிக்கும் மத்திய அரசு !

பயறு விவசாயிகளைத் தாங்கிப் பிடிக்கும் மத்திய அரசு !

பயறு விவசாயிகளைத் தாங்கிப் பிடிக்கும் மத்திய அரசு !

Published:Updated:
பயறு விவசாயிகளைத் தாங்கிப் பிடிக்கும் மத்திய அரசு !
மரத்தடி மாநாடு
பயிறு விவசாயிகளைத் தாங்கிப் பிடிக்கும் மத்திய அரசு !
பயறு விவசாயிகளைத் தாங்கிப் பிடிக்கும் மத்திய அரசு !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பயறு விவசாயிகளைத் தாங்கிப் பிடிக்கும் மத்திய அரசு !

விடிகாலையிலேயே வயலுக்கு வந்துவிட்ட 'ஏரோட்டி' ஏகாம்பரம்... மும்முரமாக வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். சாவகாசமாக காலை உணவை முடித்து விட்டுக் கிளம்பிய 'வாத்தியார்' வெள்ளைச்சாமி... வயலுக்கு வந்து சேர, சொல்லி வைத்தது போல 'காய்கறி' கண்ணம்மாவும் ஆஜராகி...

"எண்ணெய் விலையெல்லாம் என்னமா ஏறிப் போய்க் கிடக்கு... சந்தைக்குப் போய் சாமான், செட்டு வாங்கினாத்தான் நிலவரம் புரியுது'' என்ற அங்கலாய்ப்போடு அன்றைய மாநாட்டை ஆரம்பித்து வைத்தார்.

அதை ஆமோதித்த வாத்தியார், "நிலக்கடலை, எள்... எல்லாம் வரத்து குறைஞ்சு போயிடுச்சு. அதனாலதான் எண்ணெய் விலை ஏறுது. அதில்லாம... ஆயுத பூஜை, தீபாவளினு வரிசையா பண்டிகையெல்லாம் வேற வருதுல்ல, இன்னமும் விலை ஏறும்னுதான் சொல்றாங்க. எல்லா பருப்பு வகைகளும்கூட ரெண்டு ரூபாயில இருந்து, பத்து ரூபா வரைக்கும் விலை கூடும்னு சொல்றாங்க. ஏற்கெனவே இங்க பருப்புகளுக்குத் தட்டுப்பாடா இருக்கறதாலதான் கனடா, ஆஸ்திரேலியா, மியான்மர் நாடுகளில் இருந்தெல்லாம் இறக்குமதி பண்ணிக்கிட்டு இருக்காங்க. அப்படியும் விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியல'' என்றவர், சிறிது இடைவெளிவிட்டு தொடர்ந்தார்.

"இப்படியே விலையெல்லாம் ஏறிக்கிட்டே போறதால.. மத்திய சர்க்கார் புதுசு புதுசா திட்டமெல்லாம் போட்டுக்கிட்டிருக்கு. சமீபத்துல உலக வங்கி, டாடா நிறுவனம் ரெண்டோடயும் சேர்ந்து ஒரு திட்டம் போட்டிருக்காங்க. தமிழ்நாட்டுலயும் பஞ்சாப்லயும் பயறு உற்பத்தியைப் பெருக்கத்தான் இந்தத் திட்டமாம். புதுக்கோட்டை மாவட்டத்துல 3,200 ஏக்கர் நிலத்தை இதுக்காகத் தேர்ந்தெடுத்திருக்காங்க. அந்த விவசாயிகளுக்கு பயறு சாகுபடி பண்றதுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் அரசாங்கமே செய்யப் போகுதாம். ஒரு ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை கண்டிப்பான லாபம் கிடைக்குற வகையில இந்த உதவிகள் இருக்குமாம். கமிஷனெல்லாம் இல்லாம, நேரடி விற்பனைக்கும் ஏற்பாடு பண்ணியிருக்காங்களாம்'' என்று சொன்னார்.

"ம்... எல்லாம் கண்கெட்ட பின்னாடி சூரிய நமஸ்காரம் பண்ற கதையாத்தான் இருக்கு. ஏற்கெனவே, உணவு உற்பத்தி பற்றாக்குறைனு ஆளாளுக்கு கூப்பாடு போட்டப்ப, கண்டுக்காம விட்டுட்டு, இப்ப திடீர் ஞானோதயம் வந்தது கணக்கா, பருப்பை ஊக்குவிக்கிறாங்களாக்கும்." என்று நக்கலடித்தார் காய்கறி.

"அதுதானே கண்ணம்மா நம்முடைய அரசியல்வாதிகளின் அசுரபலம்" என்று 'இம்சை அரசன்Õ வசனத்தை இடையில் செருகிய ஏரோட்டி,

"ஏதோ இப்பவாச்சும் புத்தி வந்துதேனு சந்தோஷப்படு. எண்ணெய், பருப்பு மட்டுமா விலை ஏறியிருக்கு... காளான்கூட இப்ப என்ன விலை விக்குது தெரியுமா? புரட்டாசி மாசம் பிறந்துட்டதால நிறைய பேர் அசைவம் சாப்பிடாம விரதம் இருக்க ஆரம்பிச்சுருக்காங்க. அதனால கறி மாதிரி சுவை இருக்குற பால் காளானுக்கு மவுசு கூடியிருக்கு. அதிகமா விற்பனை ஆகறதால அதுக்குத் தட்டுப்பாடு வந்து கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை கூடியிருக்காம். இன்னும் விலை கூடும்னு எதிர்பார்க்குறதால காளான் உற்பத்தியாளர்கள் எல்லாம் சந்தோஷமா இருக்காங்களாம்'' என்றார்.

"காளான் பத்தி நம்மகிட்டயும் ஒரு சேதி இருக்கு. அதையும் சொல்லிடறேன்" என்ற வாத்தியார்,

"மேட்டூருக்குப் பக்கத்துல இருக்குற வீரக்கல் கிராமத்துல, வருஷா வருஷம் மழைக் காலம் வந்த உடனேயே தென்னந்தோப்புல பெரிய பெரிய சைஸுல காளான் வளருதாம். ஒரு காளான் மூணு கிலோ வரை இருக்குமாம். சுத்துப்பட்டுல இருக்கறவங்கெல்லாம் ஆச்சர்யமா வந்து பாத்துட்டுப் போயிருக்காங்க. இந்த வருஷம் வளர்ந்த காளானைத் தோட்டத்துக்காரங்களே அறுத்து சாப்பிட்டுட்டாங்களாம்'' என்றார்.

இடைமறித்த காய்கறி, "இப்படி மழையில முளைக்கிற காளானையெல்லாம் சாப்பிடக்கூடாது... விஷம்னுல்ல சொல்வாங்க'' என்று திகீர் சந்தேகம் கிளப்பினார்.

"எல்லாக் காளானும் விஷம் கிடையாது கண்ணம்மா... மட்கிப்போன இலை, தழைகள் கிடந்தா அதுல காளான் முளைக்கும். அதுல வெள்ளை நிறத்துல இருக்குற காளான்களை மட்டும் சாப்பிடலாம். இது விஷம் கிடையாது. மஞ்சள், சிவப்பு நிறத்துல இருக்கற காளான்கள் விஷமா இருக்கும். அதைச் சாப்பிடக்கூடாது. வெள்ளைக்காளான் மேல பூஞ்சணம் பிடிச்சுருந்தாலும் சாப்பிடக்கூடாது'' என்று பொறுமையாக விளக்கிய வாத்தியார், அப்படியே சந்தை பற்றிய செய்திகளுக்குத் தாவினார்.

"வெளிச்சந்தையில இன்னமும் கொப்பரைக்கு கிராக்கி இருந்துக்கிட்டே இருக்கறதால... தொடர்ந்து விலை ஏறிக்கிட்டே இருக்கு. தேங்காய், கொப்பரை வரத்தும் குறைஞ்சு போயிடுச்சு. காங்கேயம் மார்க்கெட்டுல கிலோ கொப்பரைக்கு 49 ரூபாய் வரை விலை போயிருக்கு. ஒரு டின் (15 கிலோ) தேங்காய் எண்ணெய் 1,025 ரூபாய், கிலோ தேங்காய் பவுடர் 80 ரூபாய், மட்டை உரித்த பச்சைத் தேங்காய் 1 டன் 14,750 ரூபாய், மட்டை உரித்த காய்ந்த தேங்காய் 1 டன் 15,500 ரூபாய்னு விலை போயிருக்கு. ஒரு தேங்காய்

8 ரூபாய் 50 காசு வரை விற்பனையாகிட்டிருக்கு. இரண்டு வாரத்துக்குள்ள தேங்காய் டன்னுக்கு 3,000 ரூபாய் வரை விலை ஏறி இருக்குதாம். அதனால் தென்னை விவசாயிகளுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷமாம். இன்னமும் விலை உயருமாம்"என்று முழுமையான விளக்கம் கொடுத்த வாத்தியார்,

"தசரா, தீபாவளி பண்டிகைகளெல்லாம் வரப் போறதால முந்திரியும் கிலோவுக்கு 40 ரூபாய் வரை விலை ஏறி இருக்காம். போன வருஷத்தை விட இந்த வருஷம் முந்திரி விளைச்சல் குறைஞ்சுடுச்சாம். அதனால வியாபாரிகள் கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் பண்ணி வைக்கறதாலதான் முந்திரி விலை ஏறியிருக்காம். அதேநேரத்துல ஏலக்காய் விலை திடீர்னு இறங்கிடுச்சாம். கம்பம் பகுதியிலெல்லாம் போன மாசம் வரைக்கும் ஒரு கிலோ 1,400 ரூபாய்க்கு வித்துக்கிட்டுருந்த ஏலக்காய், இப்ப 950 ரூபாய்க்குதான் விக்குதாம். என்ன காரணம்னே சரியா கண்டுபிடிக்க முடியலையாம்.

'கவுதமாலா' நாட்டுல இருந்து லட்சக்கணக்கான டன் ஏலக்காய் நம்ம நாட்டுக்கு இறக்குமதி ஆகியிருக்குனு யாரோ இன்டர்நெட்ல வதந்தியைக் கிளப்பிட்டாங்களாம். அதனாலகூட விலை சரிஞ்சிருக்கும்னும் சொல்றாங்களாம். அதனால ஏலக்காய் விவசாயிகள் மார்கெட்டுக்குக் கொண்டு வராம, தோட்டத்துலேயே இருப்பு வெக்க ஆரம்பிச்சுட்டாங்களாம்'' வானிலை அறிக்கை 'ரமணன்' கணக்காக கடகடவெனச் சொல்லி முடித்தார், வாத்தியார்.

அவரைத் தொடர்ந்த ஏரோட்டி, ''ஊடுபயிர் வெள்ளாமை பண்ணதுக்காக ஒருத்தரைப் பிடிச்சு, போலீஸ் உள்ள தள்ளியிருக்குது தெரியுமா' என்று பீடிகை போட்டார்.

''விஷயத்தை முழுசாச் சொல்லுய்யா. சொன்னாதானே தெரியும்?!' கொஞ்சம் அவசரம் காட்டினார், காய்கறி.

"ஈரோடு மாவட்டம், அந்தியூர் பக்கத்துல 'பர்கூர்'னு ஒரு ஊர் இருக்கு. அந்த ஊர்ல இருக்குற 'ஜவராயன்'ற விவசாயி, ஆறு ஏக்கருல வாழை, மரவள்ளி வெள்ளாமை வெச்சுருருக்கார். வாழைக்கு நடுவுல ஊடுபயிரா அரை ஏக்கருல கஞ்சாச் செடியையும் நட்டு வெச்சுருக்கார். இந்தத் தகவல் எப்படியோ போலீஸுக்குத் தெரிஞ்சு போச்சு. உடனே வந்து அந்த செடிகளை அழிச்சுட்டு, ஜவராயனையும் பிடிச்சு உள்ள தள்ளிட்டாங்க'' என்றார்.

"அடப்பாவிகளா... கலி முத்திப் போச்சுய்யா. அதான் மனுஷ ஜென்மங்களுக்கு புத்தி இப்படிப் போகுது'' என்று புலம்பிக்கொண்டே எழுந்த காய்கறி நடையைக் கட்ட முடிவுக்கு வந்தது மாநாடு.

பயறு விவசாயிகளைத் தாங்கிப் பிடிக்கும் மத்திய அரசு !
பயறு விவசாயிகளைத் தாங்கிப் பிடிக்கும் மத்திய அரசு !
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism