"அசோலாவை பல வகைகளில் வளர்த்துப் பார்த்து, சரியான முறை ஒன்றை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். மரங்களுக்கு இடையில் இருக்கும் நிழற்பாங்கான பகுதியைச் சமப்படுத்தி, 2 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலத்துக்கு செங்கற்களை வரிசையாக அடுக்கி தொட்டி போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும். அதன் உள் பகுதியில் பழைய பிளாஸ்டிக் சாக்குகளை விரித்து அதன் மீது பாலித்தீன் ஷீட்டை விரித்து தண்ணீர் ஊற்றினால், நிரம்பி நிற்கும்படி செய்ய வேண்டும். ஏறத்தாழ இது ஒரு உயரம் குறைவானத் தொட்டி போன்று இருக்கும்.
வளமான மண் 15 கிலோ அளவில் எடுத்துக் கொண்டு அதில் பரப்பி, 10 லிட்டர் நீரை விட்டு, 1 கிலோ பசுஞ்சாணி, இருபது கிராம் ராக்பாஸ்பேட் ஆகியவற்றைக் கரைத்து விடவேண்டும். பிறகு, அரைக்கிலோ அசோலாவை விதையாகத் தூவிவிட வேண்டும்.
இங்கே குறிப்பிடப்படும் 'ராக்பாஸ்பேட்' என்பதைத்தான் ரசாயனம் என்று கூறியிருப்பார்கள் என நினைக்கிறேன். இது, இயற்கையாகக் கிடைக்கும் பொருள்தான். கிடைக்காதபட்சத்தில், ஆழ்துளைக்கிணறு அமைக்கும்போது வெளிவரும் கல்தூள் அல்லது பாறைகளை உடைக்கும் தொழிற்சாலைகளில் கிடைக்கும் கிரஷர் பவுடர் எனப்படும் கல்தூளைப் பயன்படுத்தலாம். ஆரம்ப காலங்களில் ரசாயன பாஸ்பேட் உரங்களைத்தான் பயன்படுத்தி வந்தோம். ஆனால், அதைக்காட்டிலும் ராக்பாஸ்பேட் போடும்போது அசோலாவின் வளர்ச்சி நன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொட்டியில் பத்து சென்டி மீட்டர் அளவுக்கு நீர் நின்று கொண்டே இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். பத்து நாட்கள் கழித்து தினமும் ஒரு கிலோ அசோலாவை இதில் இருந்து அறுவடை செய்யலாம். தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு ஒரு முறை இருபது கிராம் ராக்பாஸ்பேட், அரைக் கிலோ சாணம் ஆகியவற்றை தொட்டியில் கரைத்து விட வேண்டும். தினமும் அசோலாவை அறுவடை செய்யாவிட்டால், தொட்டிக்குள் இடநெருக்கடி ஏற்பட்டு அசோலாவின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
இதில் புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இதை நெல் வயலில் இடும்போது, காற்றில் உள்ள தழைச்சத்துக்களைக் கிரகித்து விளைச்சலை அதிகப்படுத்துவதோடு, களைகளையும் கட்டுப்படுத்துகிறது. ஆடு, மாடு, கோழி, மீன், பன்றி... என அனைத்துக் கால்நடைகளுக்கும் தீவனத்தோடு கலந்து கொடுக்கலாம். கறவை மாடுகளுக்குத் தினமும் இரண்டு கிலோ அளவில் கொடுத்து வந்தால், பாலின் தரம் கூடுவதோடு, பாலின் அளவும் கூடும். தவிர அசோலோவைக் கொடுக்க ஆரம்பித்தால், பிண்ணாக்கின் அளவையும் பாதியாகக் குறைத்துக் கொள்ளலாம். அசோலாவைப் பயன்படுத்தி வடை செய்து மனிதர்கள் சாப்பிடலாம்.''
தொடர்புக்கு, தொலைபேசி 04652246296.
|