கம்மி விலைக்குப் பருத்திய வாங்கி, நூலாக மாத்தி, பாதிநூலை நல்ல விலைக்கு ஏற்றுமதி செஞ்சிட்டு, அப்புறம் 'இந்தப் பூனையும் பால் குடிக்குமா'ங்கிற மாதிரி, பஞ்சு ஏற்றுமதிதான், நூல் விலை ஏற்றத்துக்குக் காரணம்னு கூப்பாடு போடுறாங்க. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுற இந்த அக்கிரமத்தை ஆதரிக்கிறீங்களே... இதுதான் உங்க அரசியல் தர்மமா?
தெரியாமத்தான் கேக்குறேன். கார், பங்களானு சொகுசு வாழ்க்கை வாழற இவங்கள்லாம்... யாரைக் காப்பாத்தறதுக்காக கூப்பாடு போடுறாங்க? விவசாயிகள காப்பத்தவா... இல்லை ராவு, பகலா பனியன் கம்பெனிகள்ல வேலை செய்ற தொழிலாளிகளைக் காப்பாத்தவா... ரெண்டும் இல்லை. தொழிலாளிகளுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளைக்கூட கொடுக்காம, அடிமை மாதிரிதானே இன்னும் வெச்சிருக்காங்க. இதை நான் சொல்லல... உங்க கூட்டாளியா இருக்கற செங்கொடி தோழருங்கதான் ஓயாமா திருப்பூர்ல மைக், தட்டினு கூப்பாடு போட்டுக்கிட்டே இருக்காங்க.
பருத்திக் கொள்முதலுல தொடங்கி, அதை நூலா மாத்துறது, சாயம் கட்டுறது, ஏற்றுமதி செய்றதுனு எல்லாத்துலயும் ஏகப்பட்ட தில்லுமுல்லு. இதுல, 'அமெரிக்கப் பொருளாதாரம் படுத்து போச்சு... ஐரோப்பா வீழ்ந்து போச்சு'னு சொல்லி, கூடுதல் ஊக்கதொகை வேணும்'னு அரசாங்கத்துகிட்டயும் ஒரு தொகையை வாங்கிக்கிட்டு, கும்முனு இருக்கறவங்களுக்கு ஆதரவா அறிக்கை கொடுக்கறீங்களே. இதுதான் உழைக்கும் மக்களுக்காக நீங்க வக்காலத்து வாங்குற லட்சணமா?
ஒருவேளை 'பனியன் தொழில் பாதிக்கப்பட்டா, இதை நம்பி இருக்குற லட்சக்கணக்கானத் தொழிலாளர்கள் வேலை இல்லாம திண்டாடுவாங்களேனு முதலாளிங்க சொன்னதைக் கேட்டுக்கூட நீங்க ஆதரவு அறிக்கை கொடுத்திருக்கலாம். ஆனா, அது உண்மை இல்லை. 'ஆடு நனையுதேனு ஓநாய் அழுத கதை'தான். ஏற்கெனவே, இவங்க கொடுக்குற கூலி, தண்ணிக்கும், வாடகைக்குமே காணலைனு தெக்க இருந்து பொழைக்கறதுக்காக வந்த மக்க, மனுசங்களெல்லாம்... தெசை தெரியாம ஓடிக்கிட்டு இருக்காங்க.
செய்யற தப்பை எல்லாம் இவுங்க செஞ்சிட்டு, இப்ப பருத்தி விலை ஏறிப்போச்சு, நூல் விலை எகிறிப் போச்சுனு கோவணாண்டிகளோட கோவணத்த உருவப் பாக்கறாங்க. இவுங்களுக்குப் போய் பரிஞ்சு பேசுறீங்களே இது நியாயமா?
'நீங்க உற்பத்தி செய்ற துணிமணிகளை வெளிநாட்டுக்கு அனுப்புறதாலதான் இங்க துணிகளோட விலை ஏறிப்போச்சு. அதனால இனிமே வெளிநாட்டுக்குத் துணிகளை அனுப்பாதீங்க'னு நாங்க சொன்னா... இவங்க கேப்பாங்களா? முடியாதுல்ல! அப்ப, எங்க உற்பத்திப் பொருளான பஞ்சை மட்டும் ஏற்றுமதி செய்யக்கூடாதுனு, சொல்லறதுக்கு இவுங்க யாரு? இது ஏதோ மக்களோட அடிப்படைப் பிரச்னை மாதிரி, அறிக்கை கொடுக்கறீங்களே... அப்ப நீங்க யாரு?
இப்படியே கண்டதுக்கெல்லாம் அறிக்கை கொடுத்துக்கிட்டிருந்தா... அப்புறம், 'அறிக்கை அரசி'னு ஒங்களுக்கும் ஒரு பட்டத்தைக் கொடுத்து மூலையில உக்கார வெச்சுடுவாரு கருணாநிதி... ஜாக்கிரதை.
வெளிநாட்டுக்காரனுக்கு நாங்க பருத்தியை விக்கக் கூடாதுனா... அவனைவிட கூடுதலா 100 ரூபாய் அதிகம் கொடுத்து, எல்லா பருத்தியையும் இங்களே வாங்கிக்க வேண்டியதுதானே? அதை அந்த முதலாளிங்களுக்கு நீங்க எடுத்துச் சொல்ல வேண்டியதுதானே? அதைவிட்டுட்டு, எங்க தலையில மண் அள்ளிப் போட பார்க்கறீங்களே... அம்மா!
இப்படித்தான் ரெண்டு வருஷதுக்கு முன்ன கோழிப் பண்ணை முதலாளிங்க, மக்காச்சோள ஏற்றுமதியை நிறுத்தச் சொல்லிக் கூப்பாடு போட்டாங்க. உடனே மத்திய அரசும் தடைபோட்டுச்சு. முதலாளி வூட்டு அம்மணிங்க கழுத்துல தங்கமா, வைரமா ஜொலிப்பு கூடுச்சு. கடன ஒடன வாங்கி காட்டுல போட்டவனுக்கு கடன் கழுத்தை இறுக்கிச்சு. பருத்தி விவசாயிகளையும் அந்த நிலமைக்குதான் கொண்டு வந்து விடப் போறாங்க.
பாடுபட்டு பருத்தியை விளைய வெக்குறவன் பாடையில போகணும், அவங்க வீட்டு பொண்டு பிள்ளைக தெருவுல நிக்கணும். பருத்தியை வாங்கி பணம் பண்ற இவங்க பங்களாவுல இருப்பாங்க, பிள்ளைங்க அமெரிக்காவுல, ஆஸ்திரேலியாவுல படிக்கணும்... இதுக்கெல்லாம் உங்களோட பரிபூரண ஆசிகள் உரித்தாகணும். என்னதான் ஒங்க கொள்கை?
நீங்கதான் தெரியத்தனமா அறிக்கை விட்டீங்கனு வெச்சுக்கிட்டாலும், ஒங்க அன்புச் சகோதரர் வைகோவுமில்ல சேர்ந்துகிட்டு குரல் கொடுக்கறார். விவசாயிகள ஒழிச்சுக்கட்டுறதுலயும்கூட கூட்டணியா?
பனியன் கம்பெனி முதலாளிங்க கொடுக்கற நன்கொடைக்கு ஆசைப்பட்டு, அவங்களுக்கு ஆதரவா பேசிக்கிட்டே இருந்தா... விவசாயிங்ககிட்ட உங்களுக்கு ஓரளவு இருக்கற மரியாதையும் காணாமப்போயிடும். அதைக் காப்பாத்திக்கணும்னா... மறுப்பு அறிக்கை கொடுக்கப் பாருங்க. இல்லாட்டி, 'சொந்தக் காசுல சூனியம் வெச்சுக்கிட்ட கதை'யாகிப் போயிடும் ஜாக்கிரதை!
இப்படிக்கு
கோவணாண்டி
படம் ஆர்.வி. சுப்பு
|