Published:Updated:

கூட்டணி போடும் கனகாம்பரம், வெங்காயம்...

கூட்டணி போடும் கனகாம்பரம், வெங்காயம்...

பிரீமியம் ஸ்டோரி
கூட்டணி போடும் கனகாம்பரம், வெங்காயம்...
மகசூல்
ஜி.பழனிச்சாமி
கூட்டணி போடும் கனகாம்பரம், வெங்காயம்...
கூட்டணி போடும் கனகாம்பரம், வெங்காயம்...

75 சென்ட் நிலம்... ' 1,20,000 வருமானம்!

பளிச்... பளிச்...

ஆடிப்பட்டம் ஏற்றது
சாணமும் மாட்டுச் சிறுநீரும் போதும்.
நேரடியாக விற்றால்கூடுதல் லாபம்.

கூட்டணி போடும் கனகாம்பரம், வெங்காயம்...

ஊடுபயிர், கலப்புப்பயிர் என்று கலந்துகட்டி சாகுபடி செய்தால் மட்டும்தான், நீடித்த நிலைத்த வேளாண்மையைச் செய்ய முடியும்’ என்பதுதான் இயற்கை வேளாண் ஆராய்ச்சியாளர்கள் பலரது கருத்து. அதனால், இயற்கை முறை வேளாண்மையில் ஈடுபடுபவர்கள் பலரும் ஊடுபயிர் சாகுபடி செய்யத் தவறுவதில்லை. அந்த வகையில் கனகாம்பரப் பூவுக்கு இடையே காய்கறிகளை ஊடுபயிராக சாகுபடி செய்து இரட்டை லாபம் பார்த்து வருகிறார், கோவை மாவட்டம் அரசூர் கிராமத்தைச் சேர்ந்த பூங்கோதை.

வெங்காய அறுவடையில் மும்முரமாக ஈடுபட்டிருந்த பூங்கோதையை சந்தித்தோம். "நாங்க ரொம்ப வருஷமா கனகாம்பர சாகுபடியைப் பண்ணிக்கிட்டு இருக்கோம். நல்ல செம்மண் பூமி... போர்ல தண்ணியும் பரவாயில்லை. அதனால பூவுக்கிடையில ஊடுபயிரா வெண்டை, கத்திரி, மிளகாய், சின்ன வெங்காயம்னு மாத்தி மாத்தி பயிர் பண்ணுவோம். ஆரம்பத்துல தொழுவுரத்தோட ரசாயனத்தையும் சேத்துதான் பண்ணிக்கிட்டுருந்தோம்.

நம்மாழ்வார் இயற்கை வேளாண்மைக் களப்பயிற்சியில் கலந்துக்கிட்ட பிறகு முழுசா இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டோம். எங்கக்கிட்ட நாலு கறவை மாடுக இருக்கு. அதுபோக, கன்னுக்குட்டி கிடாரினு பத்து உருப்படிக தொழுவத்துல நிக்குதுங்க. அதுகளோட சாணம், மாட்டுச் சிறுநீர் எல்லாத்தையும் பாசனக் குட்டையில சேத்துடுவோம். அதுபோக, பஞ்சகவ்யாவையும் தயார் பண்ணி செடிகளுக்குக் கொடுத்துடுவோம். பக்கத்துலயே ஒரு பொதுக் குளம் இருக்கு. வருஷா வருஷம் குளம் வத்துனதும் அதுலிருந்து வண்டலை அள்ளிட்டு வந்து தோட்டத்துல பரப்பிடுவோம். அதனால விளைச்சலுக்குக் குறைவே இல்லை. நான் வெள்ளாமையைப் பாத்துக்குவேன், விளையுறதை விக்குற வேலையை என் வீட்டுக்காரர் பாத்துக்குவாரு.

இப்ப ஆடிப்பட்டத்துல 75 சென்ட் நிலத்துல கனகாம்பரத்தையும், வெங்காயத்தையும் போட்டதுல வெங்காயம் அறுவடைக்கு வந்துடுச்சு. இன்னும் ஒன்றரை மாசத்துல பூ அறுவடைக்கு வந்துடும்" என்றவர்

75 சென்ட் நிலத்துக்கான கனகாம்பரம் மற்றும் வெங்காயம் சாகுபடி முறைகளைச் சொல்லத் தொடங்கினார். அதை அப்படியே தொகுத்திருக்கிறோம்.

அரையடி வெங்காயம்...ஒன்றரை அடி கனகாம்பரம்...

கூட்டணி போடும் கனகாம்பரம், வெங்காயம்...

கனகாம்பரம், வெங்காயம் இரண்டுக்குமே ஆடிப்பட்டம் ஏற்றது. நிலத்தில் ஆறு டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி இறைத்து, மண்கட்டிகள் இருந்தால், அவற்றை உடைத்துத் தூளாக்கிய பிறகு, இரண்டு உழவு ஓட்ட வேண்டும். பின்பு இரண்டரையடிக் கலப்பை மூலமாகப் பார் ஓட்டி 11 அடி நீளம், 8 அடி அகலத்துக்கு பாத்தி கட்டிக் கொள்ள வேண்டும். நிலத்தின் வாகு, தண்ணீர் பாயும் வேகத்தைப் பொறுத்து, பாத்தியின் அளவைக் கூட்டியோ குறைத்தோ கொள்ளலாம்.

ஒரு முறை தண்ணீர் கட்டி நிலத்தில் தண்ணீர் சுண்டிய பிறகு, பாரின் ஒரு புறத்தில் முக்கால் அடி இடைவெளியில் வரிசையாக ஒரு விதைவெங்காயம், ஒரு கனகாம்பர நாற்று... என மாற்றி மாற்றி நடவு செய்ய வேண்டும். இப்போது கனகாம்பரத்துக்கு செடிக்குச் செடி ஒன்றரை அடி இடைவெளி இருக்கும். பாரின் மறுபுறத்தில் அரையடி இடைவெளியில் வெங்காயத்தை நடவு செய்ய வேண்டும்.

' 1,20,000 லாபம்!

75 சென்டுக்கு 120 கிலோ விதைவெங்காயமும், 20,000 கனகாம்பர நாற்றுகளும் தேவைப்படும். நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். பதினைந்து நாட்களுக்கொரு முறை பாசன நீருடன் மாட்டுச்சிறுநீரையும், சாணத்தையும் நிலம் முழுவதும் பரவுமாறு கலந்து விட வேண்டும். நடவு செய்த 15-வது நாளிலும் மற்றும் 40-வது நாளிலும் களை எடுக்க வேண்டும். பயிர்கள் வாட்டமாக இருந்தால் மட்டும், பத்து லிட்டர் நீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம். அதேபோல பூச்சித்தாக்குதல் இருந்தால் மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிக்கலாம்.

நடவு செய்து 60 நாளுக்குப் பிறகு வெங்காயம் அறுவடைக்குத் தயாராகி விடும். அறுவடைக்கு முன்பாக ஒரு தண்ணீர் கட்டி இரண்டு நாட்கள் கழித்து வெங்காயத்தைப் பறிக்க வேண்டும்.

75 சென்டில் 1,500 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

கூட்டணி போடும் கனகாம்பரம், வெங்காயம்...

வெங்காய அறுவடை முடிந்த பிறகு கனகாம்பரச் செடிகளுக்கு மண் அணைத்து விட வேண்டும். நடவிலிருந்து 100 நாட்களுக்குப் பிறகு பூ பறிப்புக்குத் தயாராகி விடும். நான்கு நாட்களுக்கு ஒரு பறிப்பு என தொடர்ந்து ஏழு மாதங்கள் 50 பறிப்புகள் வரை பறிக்கலாம். ஆரம்பத்தில் ஒரு பறிப்புக்கு 15 கிலோ வரை கிடைக்கும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மகசூல் கூடி தை, மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் ஒரு பறிப்புக்கு 40 கிலோ வரை கிடைக்கும். மொத்தமாக ஏழு மாதங்களில் 1,700 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

பூங்கோதையின் சாகுபடிப் பாடம் முடித்த பிறகு வருமானம் பற்றி சொல்ல ஆரம்பித்தார் கணவர் ராமசாமி.

"அறுவடை செஞ்ச வெங்காயத்தை உலர வெச்சு புடைச்சு, மொத்த வியாபாரிககிட்ட கொடுக்காம மளிகைக் கடை, ஹோட்டல்னு நானே நேரடியா வித்துக்கிட்டுருக்கேன். அது போக இயற்கை வெங்காயம்கிறதால சில பேர் தேடி வந்து வாங்கிட்டுப் போறாங்க. தினமும் விற்பனை பண்றதால மொத்தமா அறுவடை பண்ணாம நிலத்தை மூணு பங்காப் பிரிச்சு ஒவ்வொரு பகுதியா அறுவடை பண்றோம். கிலோ 18 ரூபாய்னு வித்துக்கிட்டுருக்கேன். மொத்தமா 27,000 ரூபாய் கிடைக்கும்.

ஒரு கிலோ கனகாம்பரம் சாதாரணமா 80 ரூபாய்க்கு விற்பனையாகும். கல்யாணத் தேதி மாதிரியான விசேஷ காலங்கள்ல 300 ரூபாய்க்கும் அதிகமாகூட விலை கிடைக்கும். 80 ரூபாய் கணக்குக்கே 1,36,000 ரூபாய் கிடைக்கும். வெங்காயம், பூ மூலமா 1,60,000 ரூபாய்க்கு குறையாம வருமானம் கிடைக்கும். செலவெல்லாம் போக 1,20,000 ரூபாய் கையில நிக்கும்" என்றார்.

மூலிகைப் பூச்சிவிரட்டி எப்படி தயாரிக்கலாம்?

வேப்பம் பிண்ணாக்கு - 10 கிலோ
ஊமத்தம் இலை - 2 செடியளவு
காய்ந்தப் புகையிலை - 1 கிலோ
வெள்ளைப் பூண்டு - அரை கிலோ
மாட்டுச் சிறுநீர் - 30 லிட்டர்

அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நசுக்கி மாட்டுச் சிறுநீரில் ஊறவைத்து, துணியால் வேடு கட்ட வேண்டும். 8 நாட்கள் கழிந்தால், பூச்சிவிரட்டி தயார். 300 மில்லிக் கரைசலை பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

தொடர்புக்கு, ராமசாமி,
அலைபேசி 93629-50286
படங்கள் தி. விஜய்

கூட்டணி போடும் கனகாம்பரம், வெங்காயம்...
கூட்டணி போடும் கனகாம்பரம், வெங்காயம்...
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு