Published:Updated:

நீலநாக்கு நோய் அபாயம்...ஆடுகளைக் காப்பது எப்படி?

நீலநாக்கு நோய் அபாயம்...ஆடுகளைக் காப்பது எப்படி?

பிரீமியம் ஸ்டோரி
நீலநாக்கு நோய் அபாயம்...ஆடுகளைக் காப்பது எப்படி?
எச்சரிக்கை
ஆர்.குமரேசன்
நீலநாக்கு நோய் அபாயம்...ஆடுகளைக் காப்பது எப்படி?
நீலநாக்கு நோய் அபாயம்...ஆடுகளைக் காப்பது எப்படி?

நிபுணர் தரும் ஆலோசனைகள்!

பளிச்... பளிச்...

மழைக்காலத்தில்தான் அதிகம் தாக்கும்.
'கூலிகாய்டஸ்' என்ற பூச்சியால் பரவுகிறது.
தடுப்பூசி போட்டு தடுக்கலாம்.

நீலநாக்கு நோய் அபாயம்...ஆடுகளைக் காப்பது எப்படி?

மழைக்காலம் தொடங்கி விட்டது. விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் அதே நேரம், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களின் பாடுதான் கொஞ்சம் திண்டாட்டம். அதனால்தான் 'ஆடு, மாடு இல்லாதவன் அடைமழைக்கு ராஜா' என்ற சொலவடை சொல்லி வைத்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் மழைக்காலத்தில் நோய்கள் தாக்கி கால்நடைகளில் இறப்பு சதவிகிதம் அதிகரிப்பதுதான். குறிப்பாக செம்மறி ஆடுகளைத் தாக்கும் நீலநாக்கு நோய், இந்தக் காலகட்டத்தில்தான் முழுவீச்சில் வீரியம் கொண்டு பரவுகிறது.

இந்நோய் தாக்குதலின் அறிகுறிகள், தடுக்கும் முறைகள் குறித்து, குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தைச் சேர்ந்த முனைவர் ரா. தங்கதுரையிடம் கேட்டபோது, "ஆங்கிலத்துல 'ப்ளூ டங்க்' னு சொல்லப்படுற நீலநாக்கு நோய் மத்த நோய்களை மாதிரி, தீவனத்தாலோ தண்ணியினாலோ, ஆடுக, ஒண்ணுக்கொண்ணு உரசிக்கிறதாலோ பரவுறது இல்ல. 'கூலிகாய்டஸ்'ங்கிற ஒருவகைப் பூச்சிகளால பரவுது. இந்தப் பூச்சிகள் நோய் கண்ட ஆட்டைக் கடிச்சுட்டு அடுத்தடுத்து நோயில்லாத ஆடுகளைக் கடிக்கிறப்போ நோய் எல்லா ஆட்டுக்கும் பரவுது.

நோய்க்கான அறிகுறிகள் தொடர்ந்து நாலஞ்சு நாளைக்குக் கடுமையான (105 டிகிரிக்கு மேல) காய்ச்சல் இருக்கும். மூக்குல சளி ஒழுகும். பிறகு சளி கெட்டியாகி மூச்சு விட சிரமப்படும். வாயோட உள்பகுதி, ஈறுகள், நாக்கு, மூக்கோட உள்பக்கங்கள்ல புண்கள் இருக்கும். கால்குளம்புகளின் மேல்பக்கம் சிவந்து போயி புண்ணாகிடும். இதனால, ஆடுக நொண்டி... நொண்டி நடக்கும். தசைப் பிடிப்பு ஏற்பட்டு கழுத்தை ஒருபக்கமா வளைச்சுகிட்டு இழுத்து இழுத்து நடக்கும். சில ஆடுகளுக்கு முடி கொத்துக்கொத்தா கொட்டிடும். அதிகமா வயித்துப் போக்கு இருக்கும். இதெல்லாம் நீல நாக்கு நோய்க்கான அறிகுறிகள்.

நீலநாக்கு நோய் அபாயம்...ஆடுகளைக் காப்பது எப்படி?

மேலே சொன்ன அறிகுறிகள் தென்படுற ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பாம தனியா அடைச்சு வெச்சுப் பராமரிக்கணும். வாயில புண்ணு இருக்குறதால ஆடுகளால சாப்பிட முடியாது. அதனால அரிசி, கம்பு, கேழ்வரகு மாதிரியான தானியங்களைக் கஞ்சியாக்கிக் குடிக்க கொடுக்கணும். பொட்டாசியம் பர்மாங்கனேட் அல்லது சாதாரண உப்பை தண்ணியில கரைச்சு, ஒரு நாளைக்கு மூணு முறை வாயை கழுவி விடணும். 100 மில்லி கிளிசரின்ல 10 கிராம் போரிக் ஆசிட் பவுடரைக் கலக்கி வாயில இருக்கற புண்ணுக மேல தடவணும். கால்ல இருக்கற புண்ணுக்கு போரிக் ஆசிட் பவுடர் அல்லது மஞ்சள் தூளை வேப்பெண்ணெயில் கலந்து தடவணும். பட்டியைச் சுத்தி தண்ணி தேங்காத மாதிரி பாத்துக்கணும். அப்பதான் கூலிகாய்டஸ் பூச்சிகள்ட்ட இருந்து ஆடுகளைக் காப்பாத்த முடியும்.

ஆடுகள் பட்டியிலிருந்து வெளியேறின பிறகு 5 மில்லி டெல்டாமெத்ரின் மருந்தை ஒரு லிட்டர் தண்ணியில கலந்து பட்டியோட தரை, உள்பக்கச் சுவர், மூலைமுடுக்கெல்லாம் தெளிக்கணும். பண்ணையைச் சுத்தி இருக்கற எருக்குழி, புதர்கள், தண்ணி நிக்கிற பகுதிகள் எல்லாத்துலயும் தெளிக்குறது நல்லது. பட்டிகள்ல கொசுவர்த்தி, விளக்குப்பொறி வெக்கணும். சாயங்காலம் 6 மணியிலிருந்து 8 வரைக்கும் பட்டியில் புகைமூட்டம் போடணும். இதையெல்லாம் செஞ்சா பூச்சிகளைக் கட்டுப்படுத்திடலாம்.

நீலநாக்கு நோய் அபாயம்...ஆடுகளைக் காப்பது எப்படி?

அறிகுறிகள் தெரிஞ்ச பிறகும் கண்டுக்காம விட்டா, கொஞ்ச நாள்ல ஆடுகளோட நாக்கு வீங்கிடும். அதனால நாக்குக்கு போற ரத்த ஓட்டம் தடைபட்டு, நாக்கு நீல நிறமா மாறி வெளிய தொங்கிட்டு இருக்கும். இந்த நோய் கண்ட ஆடுகளோட தசைகள் பாதிக்கப்பட்டு எடை குறையும். இந்த நோய் முற்றிய நிலையில அதிகபட்சம் 70 சதவீதம் வரை உயிரிழப்பு ஏற்படும்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நீல நாக்கு நோய்க்காக ஒரு தடுப்பூசியை உருவாக்கி இருக்கு. இந்த தடுப்பு ஊசியை வருஷத்துக்கு ஒரு தடவை மழைக்காலம் ஆரம்பிக்குற நேரத்துல கட்டாயம் போடணும்.

இந்தத் தடுப்பூசி தேவைப்படுறவங்க பக்கத்துல இருக்கற பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையங்களை அணுகலாம். அதுனால இதுதான் சரியான நேரம். நோய் இருக்கோ, இல்லையோ அதைப் பத்தி கவலைப்படாம உடனடியா தடுப்பூசி போட்டா, நீலநாக்கு நோயிலிருந்து தப்பிச்சுடலாம். வந்த பிறகு வருத்தப்படுறதை விட வருமுன் காப்பதுதானே புத்திசாலித்தனம்'' என்றார்.

தொடர்புக்கு, முனைவர்.ரா. தங்கதுரை
அலைபேசி 94445-46027.
படம் சாய் தர்மராஜ்

நீலநாக்கு நோய் அபாயம்...ஆடுகளைக் காப்பது எப்படி?
நீலநாக்கு நோய் அபாயம்...ஆடுகளைக் காப்பது எப்படி?
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு