Published:Updated:

'இலவச இம்சைக்கு, அழையுங்கள் 1551...'

'இலவச இம்சைக்கு, அழையுங்கள் 1551...'

பிரீமியம் ஸ்டோரி

25102010
'இலவச இம்சைக்கு, அழையுங்கள் 1551...'
பிரச்னை
கு.ராமகிருஷ்ணன்
'இலவச இம்சைக்கு, அழையுங்கள் 1551...'
'இலவச இம்சைக்கு, அழையுங்கள் 1551...'

கிசான் கால் சென்டரும்... கிறுகிறுக்கும் விவசாயிகளும்...

அழகான வயல்வெளி... ஒரு விவசாயி நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருப்பார். சாப்பாடு கொண்டு வந்த மனைவி சந்தேகமடைந்து, "யாருகிட்ட இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருக்கீங்க" என கோபத்தோடு கேட்க,

'இலவச இம்சைக்கு, அழையுங்கள் 1551...'

"விவசாய நிபுணர்கிட்ட சந்தேகம் கேட்டுக் கிட்டு இருந்தேன். விவசாயம் தொடர்பா யார் வேணும்னாலும் கேட்கலாம். போனுக்குக் கட்டணம் கிடையாது. காலையில 6 மணியிலயிருந்து ராத்திரி 10 மணி வரைக்கும். வருஷம் 365 நாளும் கேட்கலாம். இது கிசான் கால் சென்டர்" என விவசாயி உற்சாகமாக சொல்வார்.

'பசு சினை பிடிக்கவில்லையா... எருமை பால் கறக்கவில்லையா... பயிருக்கு நோய்த் தாக்குதலா..? விவசாயம் தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் 1551 மற்றும் 18001801551 என்ற எண்களில் கிசான் கால் சென்டரைத் தொடர்பு கொள்ளுங்கள்' என பொதிகை உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யப்படுகிறது.

ஆனால், 'அத்தனையும் புரூடா... அது ஒரு இலவச இம்சை. அங்க பேசுனா... நாங்க கிறுகிறுத்துப் போயிடுவோம்' என்று விவசாயிகளின் தரப்பிலிருந்து அடுக்கடுக்காக புகார்கள் நமக்கு!

என்னதான் நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள... விவசாயிகள் சிலரை மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ள வைத்தோம்.

தஞ்சாவூர் மாவட்டம், கோவிந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன், 'தேனீ வளர்ப்பு தொடர்பாக விளக்கம்பெறப் போகிறேன்' என்றபடி தனது அலைபேசியில் '18001801551' என்ற எண்களை அழுத்தினார். பலமுறை முயற்சித்தும் இணைப்பு கிடைக்கவில்லை. பிறகு, தொலைபேசி வாயிலாக முயற்சித்தபோது, 'தற்போது தொடர்பு கொள்ள முடியாது’ என்ற கணினி குரல் ஒலித்தது. அன்று முழுவதும் முயற்சி செய்தும் இணைப்பு கிடைக்கவே இல்லை. ஒரு வழியாக அடுத்த நாள் மதியம் இணைப்பு கிடைத்தே விட்டது...

'இலவச இம்சைக்கு, அழையுங்கள் 1551...'

"நான் தேனீ வளர்க்கலாம்"னு இருக்கேன்" என பாலசுப்ரமணியன் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே, ''கோவை வேளாண் பல்கலைக்கழகத்துக்குப் பேசுங்க..." என்று சொல்லி, அதன் தொலைபேசி எண்களைத் தெரிவித்துவிட்டு, இணைப்பைத் துண்டித்துக் கொண்டது கிசான் கால் சென்டர்.

அணைக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அய்யாரப்பன், ''கரும்புல செவ்வழுகல் நோய் வருது. அதை எப்படி தடுக்கலாம்னு ஆலோசனை கேட்கப்போறேன்" என்றபடியே 1551 என்ற எண்ணை அழுத்தினார். பலமுறை முயன்றும் இணைப்பு கிடைக்கவே இல்லை.

நடுப்படுகை கிராமத்தைச் பாஸ்கரன், 'திசு வாழைக் கன்று தொடர்பான சந்தேகம்' என அழைக்க... உடனே இணைப்பு கிடைத்தது... ஆனால், மறுமுனையில் யாரும் பதில் பேசவேவில்லை. நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு எதிர் முனையில் இருந்து வந்த பதில்-

''வாழை ஆராய்ச்சி நிலையத்துல கேளுங்க."

திருவையாறு சம்பந்தம், புனவாசல் மணி என்று அடுத்தடுத்து பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளைத் தொடர்பு கொள்ள வைத்தோம். சிலருக்கு மட்டுமே அதிர்ஷடம் அடித்தது. ஆனால், அவர்களுக்கெல்லாம்... பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களின் எண்களைக் கொடுத்துவிட்டு தொடர்பைத் துண்டித்துக் கொண்டது கிஷான் கால் சென்டர்.

'இலவச இம்சைக்கு, அழையுங்கள் 1551...'

காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க திருவையாறு வட்டாரத் தலைவர் திருப்பந்துருத்தி சுகுமாறன், "மத்திய வேளாண் துறை அமைச்சகம் ஒவ்வொரு வருஷமும் இதுக்காக பல கோடி ரூபாய் செலவு செய்யுது. விவசாயிகளின் அழைப்புக்குக் கட்டணம் இலவசம்னு சொன்னாலும்கூட, அதுக்கான கட்டணத்தை மத்திய வேளாண் அமைச்சகம் தொலைதொடர்புத் துறை, தனியார் செல்போன் நிறுவனங்கள், முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு செலுத்துது. அதுவும் சிறப்பு சேவைங்கறதால வழக்கமானக் கட்டணத்தை விட, மூணு மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்தப்படுது.

ஆரம்பத்துல உடனே இணைப்பு கிடைச்சுது. நேரடியாவே நிபுணர்கள் பதில் கொடுத்தாங்க. இப்ப காலம் மலையேறிப்போச்சு. குறிப்பா, தமிழ்நாட்டுல கிசான் கால் சென்டரோட செயல்பாடு மிக மோசமா இருக்கு. 'விவசாயிகளின் அனைத்து சந்தேகங்களுக்கும் நேரடியா நிபுணர்கள் பதில் அளிப்பார்கள்’னு விளம்பரத்துல சொல்றாங்க. உண்மையில அப்படி யாரும் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கறது இல்லை.

'இலவச இம்சைக்கு, அழையுங்கள் 1551...'

தப்பித் தவறி கிஷான் சென்டர்ல உள்ளவங்க பதில் கொடுத்தாலும், அவங்க பேசுறது எங்களுக்குப் புரியுறதில்ல. காரணம்... அவங்கள்லாம் வேற மாநிலத்துக்காரங்களா இருக்கறதுதான். அதிகாரிங்க உண்மையான அக்கறையோட மனசு வெச்சா... இந்த கால் சென்டர்கள் ஆக்கப்பூர்வமா செயல்படும்" என்றார் ஆதங்கத்துடன்.

இதுதொடர்பாக கோவை வேளாண்மைப் பலகலைக்கழகத்தில் செயல்படும் விரிவாக்கக் கல்வி மையத்தின் முனைவர் ராமநாதனிடம் கேட்டபோது, "18001801551 என்ற எண்ணில் தரைவழி மற்றும் அனைத்து அலைபேசி மூலமாகவும் தங்களது சந்தேகங்களை விவசாயிகள் கேட்டுத் தெளிவு பெறலாம். தமிழ்நாட்டுக்கான கால்சென்டர், கோவையில் இயங்கி வருகிறது. அங்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் பணியில் இருக்கிறார்கள். பதில் தெரியாத கேள்விகள் வரும்போதுதான் சம்பந்தப்பட்ட நிபுணர்களுக்கு இணைப்பு கொடுக்கிறார்கள். பல விவசாயிகள் ஒரே நேரத்தில் தொடர்பு கொள்வதால் இணைப்பு கிடைப்பதில் சிக்கல் இருக்கலாம்" என்று சொன்னவர்,

''கிசான் கால் சென்டர் தொடர்பான சந்தேகங்களுக்கு இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்றபடியே 0422-6611523 என்ற எண்களைச் சொன்னார்.

அந்த எண்களைச் சுழற்றினோம் அக்டோபர் எட்டாம் தேதி, வெள்ளிக்கிழமை பகல் 12.30 மணிக்கு. சட்டென்று இணைப்புக் கிடைத்தது. எதிர்முனையில் பேசியவர், ''இன்னிக்கு லீவுங்க... நான் அட்டெண்டர் மட்டும்தான் இருக்கிறேன். திங்க கிழமை பேசுங்க..." என்றபடி இணைப்பைத் துண்டித்தார்.

ஹலோ... வேளாண் பல்கலைக்கழகம்தானே... இதுக்குப் பிறகு யாரு கிட்டங்க போய் புகார் சொல்றது? அதுக்கு ஏதாச்சும் நம்பர் இருக்குதுங்களா?

'இலவச இம்சைக்கு, அழையுங்கள் 1551...'
'இலவச இம்சைக்கு, அழையுங்கள் 1551...'
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு