பிரீமியம் ஸ்டோரி
நாட்டு நடப்பு
நாட்டு நடப்பு
நாட்டு நடப்பு

பாரம்பர்ய நெல்லுக்காக நெடும் பயணம்....

பாரம்பர்ய நெல் ரகங்கள் எங்கிருந்தாலும் தேடிச்சென்று சேகரித்து, விருப்பமுள்ள விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்து வருகிறார் தஞ்சை மாவட்டம், மருதாநல்லூர் எட்வின் ரிச்சர்ட். கடந்த இதழில் வெளியான 'பட்டையைக் கிளப்பும் பாரம்பர்ய சொர்ண மசூரி’ என்ற தலைப்பிலான கட்டுரையில் இடம்பெற்ற கிருஷ்ணனுக்கு விதைநெல் கொடுத்தவரும் இவரே. ஆனால் அக்கட்டுரையில் டேனியல் என தவறாக இடம்பெற்றுவிட்டது.

''பசுமை விகடனின் தீவிர வாசகரான நான் இயற்கை விவசாயம் தொடர்பானக் கூட்டங்களையும் அடிக்கடி நடத்தி வருகிறேன். விவசாயிகள் தங்களுக்குத் தேவையான பாரம்பர்ய நெல் ரகங்களைப் பெற, எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம். ராஜமுடி, கண்டசாலா நெல் போன்ற பாரம்பர்ய நெல் ரகங்கள் உங்களிடம் இருந்தால் தகவல் தெரிவியுங்கள்’’ என்று வேண்டுகோள் வைக்கிறார் எட்வின் ரிச்சர்ட். தொடர்புக்கு 94432-75902.

கு. ராமகிருஷ்ணன்
படம் கே. குணசீலன்.

கோதுமை விதைக்க சரியான தருணம் !

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள சிறுதானியத் துறை கோதுமை பயிர் செய்வது தொடர்பாக ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், 'கோதுமை விதைப்பதற்கு இது சரியான தருணம். தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, சேலம், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கோதுமை லாபகரமான பயிராக பயிர் செய்யப்படுகிறது. கோ டபிள்யூ-1 மற்றும் கோ டபிள்யூ-2 ஆகிய ரகங்கள் தமிழகத்தில் விதைப்பதற்கு ஏற்ற ரகங்கள். இவற்றின் சிறப்பம்சம்... குறைந்த நீர் தேவையுடன் பூச்சி, நோய் தாக்காதவை என்பதுதான். இந்த ரகங்கள் 110 நாட்களில் அறுவடைக்கு வந்து விடும். ஹெக்டேருக்கு 4,000 முதல் 5,500 கிலோ வரை விளைச்சல் கிடைக்கும். அதிக விளைச்சலைப் பெற அக்டோபர் 15 முதல் நவம்பர் 4-ம் தேதிக்குள் விதைக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 40 கிலோ விதை தேவைப்படும். வேளாண் பல்கலைக்கழகத்தில் போதுமான விதைகள் விற்பனைக்குத் தயாராக உள்ளன' என்று கூறப்பட்டிருக்கிறது.

தொடர்புக்கு, தொலைபேசி 0422-2450507.

- ஆர். குமரேசன்

 

 

 

 

நாட்டு நடப்பு
நாட்டு நடப்பு
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு