Published:Updated:

ஓநாயைப் பட்டியில விட்டுட்டு, ஓலமிட்டு என்ன பிரயோஜனம் !

ஓநாயைப் பட்டியில விட்டுட்டு, ஓலமிட்டு என்ன பிரயோஜனம் !

பிரீமியம் ஸ்டோரி
ஓநாயைப் பட்டியில விட்டுட்டு, ஓலமிட்டு என்ன பிரயோஜனம் !
முறையீடு
கோவணாண்டி
'ஓநாயைப் பட்டியில விட்டுட்டு, ஓலமிட்டு என்ன பிரயோஜனம்!'
ஓநாயைப் பட்டியில விட்டுட்டு, ஓலமிட்டு என்ன பிரயோஜனம் !

பருத்தி ஏற்றுமதி... பாயும் கோவணாண்டி!

ஓநாயைப் பட்டியில விட்டுட்டு, ஓலமிட்டு என்ன பிரயோஜனம் !

வாசகக் கோவணாண்டிகளுக்கு, வணக்கமுங்க... கடுதாசி எழுதறதையே பொழப்பா வெச்சிருக்கற எனக்கும் அப்பப்ப ஏகப்பட்ட கடுதாசிக வரத்தான் செய்யும். பெரும்பாலும் ஆதரவுக் கடிதமாத்தான் இருக்கும். ஆனா, இந்தத் தடவை வந்திருக்கற ஒரு கடுதாசி... கொஞ்சம் கோபக் கடுதாசி. 'பருத்தி விவசாயிக பாவத்தை சுமக்க வேணாம்'னு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நான் எழுதின கடுதாசியை கண்டிச்சு, காட்டமா எசப்பாட்டு பாடியிருக்காரு ஈரோட்டுல இருந்து தென்னரசு. அவருக்கு பதில் சொல்றது என் கடமைனு நினைக்கிறேன்.

அந்தக் கடுதாசியிலிருந்து கொஞ்சத்தை முதல்ல படிச்சுக்கோங்க...

'அன்புக் கோவாண்டியாருக்கு, இத்தனைக் காலம் தடுமாற்றமின்றி எழுதிய உங்கள் கைகள் ஏன் இப்போது நிலை தடுமாறி விட்டன? விவசாயத்துக்கு அடுத்து முக்கியமானத் தொழில் ஜவுளித்துறைதானே? ஏன் உங்களுக்கு பனியன் கம்பெனிக்காரர்கள் மீது மட்டும் கோபம்? தடுமாறக்கூடாது கோவணாண்டியாரே! பருத்தி ஏற்றுமதியின் லாபம், யூக வணிகத்துக்கும்... யாரோ இடைத் தரகர்களுக்கும், பன்னாட்டுக் கம்பெனியார்களுக்கும்தானே தாரை வார்க்கப்படுகிறது? கச்சாப்பொருட்களை (பருத்தி)... பாகிஸ்தான், சீனா போன்ற போட்டியாளர்களுக்குக் கொடுத்துவிட்டு... உள்நாட்டு வேலை வாய்ப்புகளைச் சீரழிப்பது, காலனி ஆதிக்கத்தை நினைவுபடுத்தவில்லையா?

பனியன் கம்பெனிக்காரர்களைத் தாக்குவதை நிறுத்துங்கள். அவர்களுக்கும் உங்களைப் போலக் கஷ்ட, நஷ்டங்கள் உண்டு. அவர்களை நம்பி பல லட்சம் தொழிலாளர்களும் உண்டு.

‘உலக தாராளமயமாக்கல்’ கொள்கை என்று கூறி அரசியல்வாதிகள் நம்மை கூறுபோட்டு விற்பதை மறந்து போனீரா?'

சரி, சங்கதிக்கு வருவோம். முதல்ல ஒண்ணு ரெண்டு விஷயத்தைத் தெளிவு படுத்திக்க விரும்பறேன். நானும் முழுக்க முழுக்க பசுமைக் கட்சிதான். அதுல எதுவும் உள்குத்து இல்ல. அதனால, விவசாயிகளுக்கு எதிரா எது நடந்தாலும் தட்டிக் கேக்கற முழுத்தகுதியோடதான் நான் எழுதறேன். அப்புறம், ஒரு நாளும் தொழில்துறைக்கு நாம எதிரி இல்ல.

தொழில் நல்லாயிருந்தா... குறிப்பா, ஜவுளித் தொழில் நல்லாயிருந்தா... உழவனுக்குக் கூடுதலா நாலு காசு கிடைக்கும்கறதுல மாறுபட்ட கருத்து இல்ல. ஆனாலும், சில உண்மைகளைச் சொல்லித்தானே ஆகணும். திருடினது ‘அப்பா’ங்கறதுக்காக... அடுக்குப் பானையில போட்டு மூடிவெக்க முடியுமா?

உலகமயத்துக்கு ஆரம்பத்திலிருந்தே நாம எதிரிதான். வளர்ந்த நாடுகளோட... நாம போட்டி போட முடியாது. நம்மள அரிசி கொண்டு வரச் சொல்லிட்டு, அவுங்க உமி கொண்டு வந்து ஒண்ணா உட்கார்ந்து ஊதி ஊதி சாப்பிடலாம்னு கூப்பிடறாங்க. இது சரிபட்டு வராதுனு நாக்கு தெறிக்கக் கத்தினோமே... யாரு கேட்டா? உலகம் பூரா ஓடி ஓடி சம்பாதிக்கலாம்னு முதலாளிங்களும் ஜால்ரா தட்டினதாலதானே உலகமயம் உள்ள வந்துச்சு. ஓநாய, பட்டியில விட்டுட்டு... 'இப்ப ஆட்டக் கடிக்குது... மாட்டக் கடிக்குது'னு ஒப்பாரி வெச்சு என்ன பிரயோசனம்?

உலகளவுல பருத்தி உற்பத்திச் செலவு கடந்த மூணு வருஷத்துல 17 சதவிகிதம் அதிகமாயிருக்குனு சொல்றாங்க விவரம் தெரிஞ்சவங்க. அதனால பருத்தி சாகுபடி பரப்பு குறையுதுனும் கணக்கெடுத்திருக்காங்க. அமெரிக்காவுல ஒரு கிலோ பஞ்சு உற்பத்திக்கே ஓகோனு மானியம் கொடுக்கறாங்களாம். இங்க சல்லிக்காசுகூட கிடையாது. நம்மாளுக கஷ்டப்பட்டு விளைய வெச்சு, கொண்டு போனா... கிலோவுக்குக் கூடுதலா 10 ரூபாய் வரி போடணும்னு சொல்றது எந்த வகையில நியாயம்?

முதலாளிகளுக்கு கச்சா பொருள் கிடைக்கறதுல பிரச்னை இருந்தா, ‘எங்களுக்கு கச்சாப் பொருள் கிடைக்க ஏற்பாடு செய்ங்க'னு அரசாங்கத்துகிட்ட கேக்க வேண்டியதுதானே? அதை விட்டுட்டு பஞ்சை ஏற்றுமதி செய்யக்கூடாது, கூடுதல் வரி போடணும்னு... கோவணாண்டிக பொழப்புல ஏன் குறுக்குசால் ஓட்டணும்.

போன தடவை அம்மா மட்டும்தான் இதைப்பத்தி அறிக்கை விட்டாங்க. இந்தத் தடவை ஐயா கலைஞரும்கூட இந்தக் கச்சேரியில சேர்ந்துகிட்டு, விவசாயிகளுக்கு வேட்டு வைக்கப் பார்க்கறாரு.

55 லட்சம் பொதி பருத்தி அதிகமா விளைஞ்சிடுச்சு... வெச்சுக்கிட்டு என்ன செய்யறது..? வரியே இல்லாம விவசாய விளைபொருட்கள, வெளிநாடுகள்ல இருந்து இறக்குமதி செஞ்சு, விவசாயிகள இந்த அரசாங்கம் கொன்னுக்கிட்டு இருக்குது. ஏன், கூடுதல் விலைக்கு இங்க இருக்கற பருத்தியைக் கொள்முதல் பண்ணி, சலுகை விலையில மில்லு முதலாளிங்களுக்குக் கொடுக்கலாமே. முதலாளிக, தொழிலாளிக, விவசாயிகனு யாருக்கும் பிரச்னை இருக்காதே! இதை ஏன் முதலாளிக கேக்கறதில்ல. அவங்களுக்காக கண்ணீர் விடற அம்மாவும், ஐயாவும் கேக்கறதில்ல?

‘ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி’ங்கற கதையா... யாருக்கு என்ன பிரச்னை வந்தாலும்... விவசாயிக தலையில மொளகா அரைக்கறதே வேலையா போச்சு.

'உள்நாட்டுல பருப்பு விலை ஏறிப்போச்சா... உடனே இறக்குமதி பண்ணு! கோதுமை விலை ஏறிப்போச்சா... இறக்குமதி பண்ணு! எண்ணெய் விலை ஏறிப்போச்சா... பாமாயில இறக்குமதி பண்ணு'னு ஒரு பக்கம் கிளம்பிடறாங்க.

இன்னொரு பக்கம்... 'ஏற்றுமதி பண்ணாதே'னு இப்படி ஜவுளி முதலாளிங்க மாதிரி நாலு பேரு கோஷம் போட ஆரம்பிச்சுடறாங்க.

தாராளமயம்கிற பேருல, உலகம் பூரா, இவங்களோட உற்பத்திப் பொருளை வித்து, இவங்க மட்டும் சம்பாதிக்கலாம். விவசாயிக்குக் கூடுதலா நாலு காசு கிடைச்சா மட்டும் குத்தம்.

தாராளமய பொருளாதாரக் கொள்கையாலதான், 2 லட்சம் விவசாயிக தற்கொலை செஞ்சுகிட்டாங்க. இதுல பெரும்பாலானவங்க பருத்தி விவசாயிக. இந்தியாவுல இருக்குற பருத்தி ஆலைகள்ல பாதி தமிழ்நாட்டுல இருக்குதுனு பெருமை பேசுறாங்க. ஆனா, செத்துபோன பருத்தி விவசாயிக குடும்பத்தை காப்பாத்த யாரும் வரலையே. விவசாயிகளோட வியர்வை, ரத்தம், உசுருதானே பஞ்சு, நூல், துணி, பனியன், பணம், கார்னு மாறிச்சு. ஆனா, வந்த லாபத்துல ஒரு 10 சதவிகிதத்தை ஒதுக்கி, தற்கொலை செஞ்சுக்கிட்ட விவசாயிகளோட குடும்பங்களுக்கு கொடுத்து இருக்கலாமே. யாரும் செய்யலியே..!

அன்னிக்கு சின்ன விவசாயிங்க தலையில, இந்த முதலாளிமாருங்க மிளகாய் அரைச்சாங்க. இப்ப பெரிய பெரிய பண முதலைங்க... பன்னாட்டு வர்த்தக கம்பெனிங்க... பன்னாட்டு நிதி நிறுவனங்க... கருப்புப் பண முதலைங்க.. பஞ்ச வாங்கறாங்க, பதுக்கறாங்க, பணம் பண்ணுறாங்க. இப்ப இந்த முதலாளிங்க தலையிலயும் மிளகாய் அரைபடுது. இதெல்லாம் தாராளமய உலகத்துல சகஜமய்யா!

பணக்காரங்களுக்கு நடுவுல நடக்குற போட்டியில விவசாயிக்கு கொஞ்சம் கூடுதலா வருமானம் கிடைக்குது. இது இப்படியே இருக்காது... நாளைக்கு உல்டா ஆகும்ங்கறது எங்களுக்கும் தெரியும். அதுவரைக்குமாவது நாலு காசை கண்ணுல பாத்துக்கறோம்.

திருப்பூர் பனியன் கம்பெனி முதலாளிங்க பேருல எந்த கோபமும் இல்லீங்க. அதேசமயம், சில விஷயத்தைக் கேக்காமவும் இருக்க முடியலீங்க. தொழில் பேரைச் சொல்லி... அந்தக் கடன், இந்தக் கடன்னு ஏகப்பட்ட கடன்கள அரசாங்க மானியத்தோட வாங்கினவங்க, முழுக்க பனியன் தொழில்ல போடாம, ரியல் எஸ்டேட் தொழில்ல முடக்கியிருக்காங்களே... அது எந்த ஊரு நியாயம்?

வெறுமனே லைசென்ஸ வெச்சுக்கிட்டு, அப்பாவிகளையெல்லாம் சின்னச்சின்ன கம்பெனிகள ஆரம்பிக்க வெச்சு, அவனுக்கு ஆர்டர் கொடுக்கிறேன்னு ஆசை காட்டி, பொண்டாட்டி தாலி வரைக்கும் வித்துட்டு, துணிகளை தயாரிச்சுக் கொண்டு வந்தா... அது நொட்ட... இது நொள்ளனு சொல்லி, பல பேரை ரோட்டுக்குக் கொண்டு வந்தாங்களே... அது பாவமில்லியா?

ஐயா, தென்னரசு, 'ரெண்டு பேரும் பங்காளி'னு முதலாளிக நினைக்குறது உண்மையா இருந்தா, அந்தத் தொழிலுக்கு ஆதாரமா இருக்கற கோவணாண்டிகளுக்கு ஆதரவா அவங்களும் வந்து நிக்கட்டும். நாலாயிரம் சம்பாதிச்சா, ஒரு நாப்பது ரூபாயாவது நமக்குக் கிடைக்க வழிவகை செய்யட்டும். அவங்க மட்டும் மனசு வெச்சா... இனி, இந்த மண்ணுல எந்தப் பருத்தி விவசாயியும் கடனுக்காக தற்கொலை செஞ்சுக்க மாட்டான்.

முதலாளிங்க மாதிரியே எல்லா உணர்ச்சிகளும் அடங்கிய மனுஷன்தான் கோவணாண்டியும். அவனோட கஷ்டங்களையும் காது கொடுத்து கேட்கறதுக்கு முதலாளிங்க முன் வரட்டும். அதைவிட்டுட்டு... விவசாயிகள தொடர்ந்து விலக்கி வெச்சா... நாளைக்கு போட்டுக்கறதுக்கு துணியிருக்கும். ஆனா, போடறதுக்குதான் உடம்புனு ஒண்ணு இந்த உலகத்துல இருக்கவே இருக்காது... புரிஞ்சுக்கோங்க!

இப்படிக்கு
கோவணாண்டி

ஓநாயைப் பட்டியில விட்டுட்டு, ஓலமிட்டு என்ன பிரயோஜனம் !
ஓநாயைப் பட்டியில விட்டுட்டு, ஓலமிட்டு என்ன பிரயோஜனம் !
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு