பிரீமியம் ஸ்டோரி
பசுமை மேடை
பசுமை மேடை
வாசகர்கள்
பசுமை மேடை

மாட்டுச் சிறுநீரில் இருக்கிறது, சாணத்தை விட அதிக தழைச்சத்து!

விவசாயிகளுக்கு மாட்டுச் சாணத்தின் அருமை தெரிந்த அளவுக்கு மாட்டுச் சிறுநீரின் பயன் முழுமையாகத் தெரியவில்லை. பெரும்பாலான மாட்டுத் தொழுவங்களில் மாட்டுச் சிறுநீர் வீணாகக் காய்ந்து ஆவியாகிறது. இதன் முழுபயனையும் தெரிந்து கொண்ட யாரும் இதை வீணாக்க மாட்டார்கள். சாணத்தைவிட மாட்டுச் சிறுநீரில் நான்கு மடங்கு தழைச்சத்து இருக்கிறது. எனவே மாடுகளின் சிறுநீரை வீணாக்காமல் தொழுவத்தில் சேமித்து பாசன நீரோடு கலந்து விட்டால், மண்ணில் அனைத்து வளமும் பெருகும். இதன் பயன்பாடு குறித்து அரசும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தினால், பெரும்பாலான விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

பசுமை மேடை

- கோ. ராமசாமி, அரசூர்.

விளைச்சலைக் கூட்டிய வரப்புப் பாசனம்!

சில ஆண்டுகளுக்கு முன்புவரை வயல்களில் நெல்லும், வரப்புகளில் துவரையும், மேட்டுத் திடல், பெரிய வரப்புகளில் அவரை, வெண்டை, கொத்தவரை, பூசணி என பயிரிடுவது தஞ்சாவூர் டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக இருந்தது. இதன் மூலம் விளைச்சல் அமோகமாக கிடைத்தது. அதற்குக் காரணம்... வாய்க்கால் பாசனம்தான். வரப்பு ஓரங்களில் பயிரிடப்படுவதால் வேருக்கு நீர் கிடைக்கும். தவிர, மனிதர்கள் வாய்க்கால் வரப்புத் திடல்களில் காலைக் கடன் முடிப்பதும் நல்ல உரமாகிவிடும். இதனால் விளைச்சல் பெருகும். கோடைக் காலங்களில் மீன்களின் கழிவுகள், மீன்களைப் பிடித்து உண்ணும் பறவைகளின் கழிவுகள், இவை எல்லாம் மண்ணில் விழுந்து, வாய்க்கால் வழியே புதிய வண்டல் மண், வயலுக்கு வரும். இதனால், அடுத்த போகத்துக்குத் தேவையான பாதி உரமும், கால்நடைகளை மேய்ப்பதால், மீதி உரமும் கிடைத்துவிடும். நீர்வரத்து உள்ள காலங்களில் குளங்கள் நிறையும். ஊரில் உள்ள எல்லா குளங்களும் நிறைந்த பிறகு, மீதமுள்ள நீர் ஆற்றுடன் இணையும்.

ஆனால், தற்போது அனைத்தும் பறிபோய்விட்டன. இப்போது அந்த வாய்க்கால்கள் பிளாஸ்டிக் கழிவுகளாலும் ஏராளமானக் குப்பைகளாலும் அடைபட்டு, நீர்வரத்து குறைந்துவிட்டது. பல இடங்களில் வாய்க்கால்களே காணாமல் போய்விட்டன. எனவே, அனைத்துப் பாசன வாய்க்கால்களையும் தூர் வாரிக் கொடுத்தால், வரப்புப் பயிர்களை மீண்டும் சாகுபடி செய்ய ஏதுவாக இருக்கும்.

- ஆர். கோபாலகிருஷ்ணன், சென்னை-94.

கீரையை விரும்பும் மீன்கள்!

கடந்த 5 வருடங்களாக கலப்பு மீன் வளர்த்து வருகின்றேன். பசுமை விகடனில், ‘வாழை இலைகளைப் போடுவதால், மீன்கள் வேகமாக வளர்ச்சி அடைகின்றன, என்ற செய்தி வெளியாகி இருந்தது. முதிர்ந்த வாழை இலைகளைவிட, கீரை வகைகளை மீன்கள் மிகவும் விரும்பி உண்கின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் முளைக் கீரை, அகத்திக் கீரை, முருங்கைக் கீரை போன்றவைகளைப் போட்டு வருகின்றேன். கடலைப் பிண்ணாக்கு விலை அதிகம் என்பதால், குறைந்த விலைக்குக் கிடைக்கும் தேங்காய் பிண்ணாக்கு போட்டு வருகின்றேன்.

கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி, விரல்கடை அளவு மீன்குஞ்சுகளை விட்டேன். தற்போது 1 கிலோ அளவுக்கு வளர்ந்துள்ளன. ஆகவே, மென்மையான எந்த வகை இலை, புல் வகைகளையும் போடலாம் என்பது என் அனுபவ உண்மை.

- எம். பிச்சைபிள்ளை, அனந்தக்குடி.

பறவைகளின் ஆட்சி எங்கே?

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்து வீடுகளைச் சுற்றி, விவசாய நிலங்களைச் சுற்றி, சாலைகளின் ஓரங்கள் நெடுகிலும் என்று எங்கு பார்த்தாலும் மரங்களின் ஆட்சிதான். அவற்றில் மைனாக்கள், காகங்கள், கிளிகள், புறாக்கள், மரங்கொத்திகள் என பலவகை பறவைகள் கூட்டமாக இருந்தன. கோடைக் காலத்தில் பள்ளிப்பருவத்தில் காலையில் எழுந்தவுடன் மரங்களிலிருந்து தானே பழுத்து விழுந்து கிடக்கும் மாம்பழம், பனம்பழம், நாவல் பழம் என்று பொறுக்கிக்கொண்டு, ருசித்துக்கொண்டே வீடு திரும்புவோம்.

பறவைகளும் அந்தப் பழங்களைச் சாப்பிட்டு, அவற்றின் எச்சத்தை பல இடங்களிலும் பரப்பி, விதைப் பரவலுக்கு வழி வகுத்தன.

ஆனால், இன்றோ... மரங்களின் எண்ணிக்கை குறைந்து போனதால், பறவை இனங்களும் அருகி வருகின்றன. அதனால், மேற்சொன்னவை எல்லாம் பழங்கதையாகி, பரிதாபகரமான சூழலை நோக்கி நாம் துரத்தப்பட்டுக் கொண்டுள்ளோம். இந்நிலையை உணர்ந்து, மரங்களை நிறைய வளர்த்து, இயற்கைச் சூழல் பெருக அனைவரும் முன்வர வேண்டும்.

- பெ. ஹரிதாஸ், பண்ருட்டி

இது வாசகர்களாகிய உங்களுடைய பக்கம்...

நீங்கள் வாள் வீசுவதற்கான களம் மட்டுமல்ல... சாமரம் வீசுவதற்கான களமும் கூட!

விவசாயத்தில் நீங்கள் கண்டறிந்து பயன்பெற்றது; கேட்டறிந்து பயன்பெற்றது; பார்த்தறிந்து பயன்பெற்றது என்று பலனுள்ள விஷயங்கள் எதுவாக இருந்தாலும்... அது மற்றவர்களுக்கு பயன்படும் எனில்... இங்கே நீங்கள் எழுதலாம்.

விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளோடு தொடர்பு கொள்ளும்போது... ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அதையும் எழுதலாம்.

'இதை மட்டும் அரசாங்கம் செய்துட்டா... விவசாயத்துக்கும்... விவசாயிகளுக்கும் ரொம்பவும் பலனுள்ள விஷயமா இருக்கும்' என்று தோன்றும் நல்ல யோசனைகளையும். இங்கே நீங்கள் பதிவு செய்யலாம்.

விஷயத்தைத் தெளிவாக... கூடுமானவரையில் சுருக்கமாக எழுதி அனுப்புங்கள்.

பிரசுரமாகும் ஒவ்வொரு கடிதத்துக்கும் பயனுள்ள புத்தகம் சிறப்புப் பரிசாக வழங்கப்படும். உங்களின் முகவரி மற்றும் தொடர்பு எண்களை முழுமையாக எழுதத் தவறாதீர்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி 'பசுமை மேடை' பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை2.

பசுமை மேடை
பசுமை மேடை
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு