Published:Updated:

உச்சத்தில் பிண்ணாகு.... கலக்கத்தில் விவசாயிகள் ...

உச்சத்தில் பிண்ணாகு.... கலக்கத்தில் விவசாயிகள் ...

பிரீமியம் ஸ்டோரி
உச்சத்தில் பிண்ணாகு.... கலக்கத்தில் விவசாயிகள் ...
மரத்தடி மாநாடு
உச்சத்தில் பிண்ணாக்கு... கலக்கத்தில் விவசாயிகள்...
உச்சத்தில் பிண்ணாகு.... கலக்கத்தில் விவசாயிகள் ...

நிலம் குளிரப் பெய்த மழையால் உற்சாகமடைந்த 'ஏரோட்டி' ஏகாம்பரம், வயல்வேலைகளில் மும்முரமாக இருந்தார். கக்கத்தில் இடுக்கிய செய்தித்தாளுடன் மெதுநடை போட்டு வந்து சேர்ந்தார்... 'வாத்தியார்' வெள்ளைச்சாமி.

உச்சத்தில் பிண்ணாகு.... கலக்கத்தில் விவசாயிகள் ...

அவரைப் பார்த்ததும், ''என்னய்யா ரெண்டு நாளா ஆள காணோம்" என்றபடியே மேலேறி வந்தார் ஏரோட்டி.

"கோயமுத்தூருல நடந்த விவசாயக் கண்காட்சிக்குப் போயிருந்தேன். அப்படியே மக வீட்டுக்கு ஒரு எட்டு போயிட்டு நேத்துதான் வந்தேன்" என்றார் வாத்தியார்.

"போன தடவை... தஞ்சாவூர் கோயில் ஆயிரமாவது ஆண்டு விழாவுக்கு போனேன்னு சொன்னே! இந்தத் தடவை கண்காட்சிக்குப் போனேங்கற. வயசான காலத்துல வீடு தங்காம... ஏதாவது சாக்கு சொல்லிக்கிட்டு ஊர் சுத்தக் கிளம்பிடுறயே. கொண்டாட்டம்தான்யா உனக்கு?" என்று ஏரோட்டி நக்கலாகச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஆஜாரான 'காய்கறி' கண்ணம்மா...

"அப்படி நாலு ஊர் போயி மக்க, மனுஷங்களப் பாத்துட்டு வர்றதுனாலதான்யா... இவ்வளவு அறிவோட இருக்கார். ஒன்னய மாதிரி குண்டுச்சட்டிக்குள்ளயே குதிரை ஓட்டச் சொல்றியா?" என்று ஏரோட்டியைக் கலாய்க்க, களைகட்ட ஆரம்பித்தது மாநாடு.

"விவசாயத்துக்கு கரன்ட் எந்த நேரத்துல வருதுனு யாருக்குமே தெரியறதில்ல. அதேமாதிரி, ராத்திரியில கரன்ட் வரும்போது நிலம் முழுக்கத் தண்ணி பாயுற வரைக்கும் முழிச்சுகிட்டே இருக்கணும். இருட்டுக்குள்ள முழுசா பாஞ்சுச்சா இல்லையானு பாக்கவும் முடியாம சம்சாரிக சிரமப்படுறாங்க. இவங்களுக்கு உதவறதுக்காகவே சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைக் கல்லூரி மாணவர் ராஜேஷ்குமார், ஒரு புதுக்கருவியைக் கண்டுபிடிச்சுருக்கார். வயல்ல போதுமான அளவுக்குத் தண்ணீர் பாஞ்சுடுச்சுனா... இந்தக் கருவி அலாரம் அடிக்கும்..." என்று வாத்தியார் சொல்ல...

''அடடே... ரொம்ப சுவாரஸ்யமா இருக்கே... சொல்லுய்யா... சொல்லுய்யா!" என்று ஆர்வம் பொங்கி வழிய கேட்டார் ஏரோட்டி!

''சொல்லத்தானே வர்றேன். சின்னதா ஒரு கருவி. நிலத்துக்கு எவ்வளவு தண்ணி பாயணும்கிறத அதுல பதிவு பண்ணி வெச்சுக்கலாம். அந்தளவு தண்ணி பாஞ்சதும்... அலாரம் அடிக்கும். இந்த அலாரத்தை நாம வசதிப்பட்ட இடத்துல வெச்சுக்கலாம். இதுக்கு 200 ரூபாய்தான் செலவு'' என்று முதல் தகவல் பதிவு செய்த வாத்தியார், அடுத்த செய்திக்கும் அவரே அச்சாரம் போட்டார்.

"தாலூகா, பஞ்சாயத்துனு பிரிக்கற மாதிரி... வனத்துறையில 'இடைபடு காடுகள் கோட்டம்'னு தனித்தனியா பகுதிகளைப் பிரிச்சுருப்பாங்க. இதுல ஏரிகளுக்குப் பக்கத்துல 'கிராம நலத் தோட்டம்'னு அமைச்சுருக்குற பகுதிகள்ல இருக்குற கருவேல மரங்களையும், சீமைக்கருவேல மரங்களையும் வனத்துறை சார்பா வருஷா வருஷம் ஏலம் விடுவாங்க. இந்த வருஷம் சேலம் மாவட்டத்துல இருக்குற 18 ஏரித்தோட்டங்கள்ல இருக்குற மரங்களை 1 கோடியே 23 லட்ச ரூபாய்க்கு ஏலம் விட்டுருக்காங்க. இது, அரசாங்கம் நிர்ணயிச்சுருந்த தொகையைவிட ஆறே முக்கால் சதவிகிதம் அதிகமாம். ஏகப்பட்ட வியாபாரிங்க ஏலத்துக்கு வந்து போட்டி போட்டுக்கிட்டதாலதான் நல்ல விலை கிடைச்சுருக்காம்" என்றார்.

உச்சத்தில் பிண்ணாகு.... கலக்கத்தில் விவசாயிகள் ...

"அட, அவ்வளவு மரத்தை வாங்கிட்டுப் போய் என்னதான் செய்வாங்க?" என்று கேட்டார், காய்கறி.

"ம்... அடுப்பெரிச்சு, சோறாக்கித் திம்பாங்க!" என்ற ஏரோட்டியின் நக்கலைத் தொடர்ந்த வாத்தியார்,

"அதுகள எரிச்சு மின்சாரம் தயாரிக்கறாங்க. பெரிய பெரிய தொழிற்சாலைகள்ல பாய்லருக்குப் பயன்படுத்துறாங்க. செங்கல் சூளையில இதைத்தான் எரிக்கிறாங்க. அதனால இதுக்கு எப்பவும் கிராக்கி அதிகம். ஒரு டன் 2,500 ரூபாயில இருந்து 3,000 ரூபாய் வரைக்கும் விக்குது" என்று விளக்கம் தந்தார்.

தன் பங்குக்கு ஒரு செய்தியைச் சொன்ன ஏரோட்டி, ''பப்பாளி, மரவள்ளி...னு எங்க பார்த்தாலும் மாவுப்பூச்சித் தாக்குதலா இருக்கு. ரசாயன மருந்துக்குக்கூட இந்த பூச்சிங்க அசரமாட்டேங்குது. அதனால, இந்த மாவுப்பூச்சிக்கு எதிரிப் பூச்சிகளை பெங்களூருல இருக்கிற தேசியப் பூச்சிகள் ஆய்வு மையம், அமெரிக்க விவசாயத் துறை கிட்ட இருந்து, இறக்குமதி செஞ்சிருக்கு. இந்தப் பூச்சிகள நம்ம தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துல பெரிய அளவுக்கு பெருக்கி விவசாயிகளுக்குக் கொடுக்க போறாங்களாம். இந்தத் திட்டத்தை அக்டோபர் 7-ம் தேதி வேளாண் பல்கலைக்கழகத்தில வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தொடங்கி வைச்சிருக்காரு" என்று சொன்னார்.

''ஆ... அமெரிக்கவுல இருந்து பூச்சிகள இறக்குமதி செய்யறாங்களா. எல்லாம் நல்ல படியா நடக்குமா?" என்று காய்கறி சந்தேகம் கிளப்ப ...

''அந்தப் பூச்சிங்க, மாவுப் பூச்சிகள புடிச்சி தின்னுடும்.அதுக விவசாயிகளுக்கு நண்பனாதான் இருக்கும். பயப்பட வேணாம்" என்று காய்கறியின் சந்தேகத்துக்கு அணை போட்டார் ஏரோட்டி!

"ஒப்புக்கிறோம்... நீயும் நாலு ஊரு சுத்தி சேதி கொண்டு வர்றேனு நாங்க ஒப்புக்கிறோம்" என்று காய்கறி கலாய்க்க... அதைக் கண்டு கொள்ளாதவராக அடுத்தச் செய்திக்குத் தாவினார், ஏரோட்டி.

''வழக்கமா மழைக் காலம் வந்தா பிண்ணாக்கு விலை கூடிப் போயிடும். இந்த வருஷமும் கூடிப் போச்சு. தேங்காய், கடலை விலையெல்லாம் உச்சத்துல இருக்கறதால, இந்த வருஷம் கொஞ்சம் அதிகமாவே பிண்ணாக்கு விலை ஏறியிருக்கு. தேங்காய் பிண்ணாக்குக்கு 50 மூட்டைக்கு, 200 ரூபாய் வரைக்கும் கூடி, இப்போ மூட்டை 1,060 ரூபாய்னு விக்குது. கடலைப் பிண்ணாக்கு 500 ரூபாய் வரை அதிகரிச்சு, மூட்டை 1,700 ரூபாயைத் தாண்டிடுச்சு. இதனால, சத்தமில்லாம பருத்தி, வேப்பம் பிண்ணாக்குக்கு விலையையும் ஏத்திட்டாங்க. கறவை மாடு வளக்குறவங்க பாடுதான் திண்டாட்டம். என்னை மாதிரி, சொந்தமாத் தீவனப்பயிர் செய்யுற விவசாயிக சமாளிச்சுக்க முடியும். தோட்டமில்லாதவங்களுக்குக் கட்டுப்படியே ஆகாது... பாவம்" என்று வருத்தப்பட்டார்.

அதைக் கேட்டு 'உச்' கொட்டிய கண்ணம்மா, கூடையிலிருந்து ஆளுக்கு இரண்டு கொய்யாப் பழங்களை எடுத்துக் கொடுத்தார்.

"தென்னை வளர்ச்சி வாரியம்... தென்னை விவசாயிகளுக்கும் தென்னை சார்ந்த பொருட்கள் தயாரிக்கறதுக்கும் மானிய உதவிகள அறிவிச்சுருக்கு. இதுக்காக தொழில் தொடங்கறதுக்கு பேங்க்ல கடன் வாங்கினா, இந்த மானியம் கிடைக்கும். பேங்க் மூலமா மானியத்துக்கு விண்ணப்பிக்கணும். மொத்தத் திட்ட மதிப்பீட்டுல 25 சதவிகிதம், இல்லனா... அதிகபட்சம் 50 லட்ச ரூபாய் வரைக்கும் மானியம் கிடைக்கும். தனிநபரா இருந்தா... திட்டமதிப்பீட்டுல 40 சதவிகிதம் வரைக்கும் கடன் வாங்கியிருக்கணும். கூட்டுறவுச் சங்கமா இருந்தா... 25 சதவிகிதம் வரைக்கும் கடன் வாங்கியிருந்தா போதும்" என்று வாத்தியார் புதுத் தகவல் சொன்னார்.

உடனே, ''தேங்காய் மிட்டாய் செய்யுறதுக்கும் மானியம் கொடுப்பாங்களா...?" என்று விவரம் புரியாதவராக காய்கறி கேட்க...

''ம்... பிள்ளையார் கோயில்ல சிதறு தேங்காய் உடைக்கறதுக்கும் மானியம் கொடுப்பாங்க..." என்று இடையில் புகுந்து கலாய்த்தார் ஏரோட்டி!

''சரிசரி, அதை விடுங்க நான் விவரத்தைச் சொல்லி முடிச்சுடறேன். அதாவது... பெட்டிகள்ல அடைச்ச இளநீர், தேங்காய் தண்ணீர் மூலம் தயாரிக்கிற வினிகர், உலர்த்தப்பட்ட தேங்காய்த்தூள், கொழுப்புச்சத்து நீக்கப்பட்ட தேங்காய்த்தூள், தேங்காய் பால் குழைவு, தேங்காய்ப் பொடி, அக்மார்க் தேங்காய் எண்ணெய், விர்ஜின் தேங்காய் எண்ணெய், தேங்காய் சீவல், தென்னைவெல்லம், பனிப்பந்து இளநீர், சிரட்டைத்தூள், செயலூக்கம் செய்யப்பட்ட சிரட்டைக்கரி, சிரட்டைக்கரி, கைவினைப்பொருட்கள், கொப்பரை உலர்த்திகள்... மாதிரியான பொருட்கள உற்பத்தி செய்றதுக்காக புதியத் தொழிற்கூடங்கள் அமைக்கவும், பழையத் தொழிற்கூடங்கள புதுப்பிக்கறதுக்கும், விரிவுபடுத்துறதுக்கும் மானியம் கிடைக்குமாம். மேற்கொண்டு தகவல் வேணும்னா, 0484-2809884 நம்பருக்கு போன் பண்ணிக் கேட்டுக்கலாம். இது கொச்சின்ல இருக்கற ஆபீஸ்ங்கறதால, மலையாளம், இல்லனா... இங்கிலீஸ்ல பேசுறதுதான் வசதியா இருக்கும். நம்ம சென்னையிலயும் ஒரு ஆபீஸ் இருக்கு. அதோட நம்பர் 044-22252664" என்று வாத்தியார் முடிக்க...

''இன்னிக்கு இதுபோதும்... நாலு தெருவைச் சுத்தினாதான், நமக்குப் பொழப்பு" என்றபடியே காய்கறி எகிற... முடிவுக்கு வந்தது அன்றைய மாநாடு.

படங்கள் தி. விஜய்

உச்சத்தில் பிண்ணாகு.... கலக்கத்தில் விவசாயிகள் ...
உச்சத்தில் பிண்ணாகு.... கலக்கத்தில் விவசாயிகள் ...
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு