Published:Updated:

மஞ்சளில் மகசூலைக் கூட்டுவது எப்படி?

மஞ்சளில் மகசூலைக் கூட்டுவது எப்படி?

பிரீமியம் ஸ்டோரி
மஞ்சளில் மகசூலைக் கூட்டுவது எப்படி?
நீங்கள் கேட்டவை
புறா பாண்டி
"மஞ்சளில் மகசூலைக் கூட்டுவது எப்படி?"
மஞ்சளில் மகசூலைக் கூட்டுவது எப்படி?

"கடந்த ஆறு ஆண்டுகளாக இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி செய்து வருகிறோம். அரை ஏக்கரில் ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்களுக்கு 15 மூட்டை மகசூல் கிடைக்கிறது. ஆனால், எங்களுக்கு 9 மூட்டைதான் கிடைத்து வருகிறது. விளைச்சல் குறைவாக இருந்தாலும், எங்கள் மஞ்சளின் நிறம், தரம் நன்றாக உள்ளது. கூடுதல் விளைச்சல் பெற வழி காட்டுங்கள்?"

கீதா கர்ணராயர், வெங்கம்பூர்.

முன்னோடி இயற்கை விவசாயி நடராஜன் பதில் சொல்கிறார்.

"ரசாயனத்தை விட இயற்கை முறையில் கூடுதல் விளைச்சல் எடுக்க முடியும் என்று நாங்கள் தொடர்ந்து நிரூபித்து வருகிறோம். கடந்த ஆறு ஆண்டுகளில் நீங்கள் விளைச்சல் அதிகரிக்காமல் போனதுக்கான காரணத்தைக் கண்டுபிடித்து நிவர்த்தி செய்திருக்க முடியும். மஞ்சள் சாகுபடி செய்ய நிலத்தின் மண்வளமும், நீர்வளமும் முக்கியம். செம்மண், வண்டல் மண் நிலங்களில் மஞ்சள் நன்கு வளரும். உப்புத் தண்ணீரில் விளைச்சல் கிடைக்கவே கிடைக்காது. அதனால் இந்த இரண்டு விஷயங்களையும் நன்கு கவனிக்க வேண்டும்.

மஞ்சளில் மகசூலைக் கூட்டுவது எப்படி?

மஞ்சள் சாகுபடிக்கு முன் நவதானியங்களை விதைத்து, இரண்டு மாதம் வளர விட்டு மடக்கி உழவு செய்து நிலத்தை வளப்படுத்த வேண்டும். நடவுக்கு முன் விதைமஞ்சளை சூடோமோனஸ் கரைசலில் நனைத்து, எடுக்க வேண்டும். முப்பது நாட்களுக்குள் இரண்டு முறை களை எடுத்து விட வேண்டும். நடவு செய்து இரண்டு மாதம் கழித்து, 15 நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து பத்து லிட்டர் நீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து பயிர்களின் மேல் தெளித்து வர வேண்டும்.

பூச்சிகள் தென்பட்டால், பூச்சிவிரட்டியின் மூலம் அடித்து விரட்டலாம். இவற்றை சரியாக செய்து வந்தால், ரசாயன முறையைக் காட்டிலும் 20 சதவிகிதம் கூடுதல் மகசூல் கிடைக்கும்."

தொடர்புக்கு, அலைபேசி 99425-70814.


"திருநெல்வேலி மாவட்டத்தில் இஞ்சி சாகுபடி செய்ய முடியுமா?"

ஏ.எம். அப்துல் காதர், திருநெல்வேலி.

மஞ்சளில் மகசூலைக் கூட்டுவது எப்படி?

கிள்ளிக்குளம் வேளாண் கல்லூரியின் பேராசிரியர் முனைவர். நயினார் பதில் சொல்கிறார்.

"மலைப்பகுதி மற்றும் மலையடிவாரப் பகுதியில் மட்டும்தான் பொதுவாக இஞ்சி சாகுபடி செய்ய முடியும். ஊட்டி, பழநிமலைப் பகுதிகளின் அடிவாரம், ஏற்காடு, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் இஞ்சி நன்றாக வளரும். 25 முதல் 32 டிகிரி செல்சியஸுக்குள் வெப்ப நிலை இருந்தால் மட்டுமே இஞ்சி சாகுபடி செய்ய முடியும். இதே தட்பவெப்பநிலையில் பூண்டும் நன்கு விளைவதால், பல இடங்களில் இரண்டையும் சேர்த்தே சாகுபடி செய்கிறார்கள். விதைத்ததிலிருந்து எட்டு மாதத்துக்குள் இஞ்சியை அறுவடை செய்து விடலாம். விதைப்பு சமயத்தில் நல்ல மழை தேவை என்பதால், மலைப் பகுதிகளில் கோடைமழை பெய்யும் காலங்களான சித்திரை, வைகாசி மாதங்களிலும், மலையடிவாரப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை பெய்யும் ஐப்பசி, கார்த்திகை மாதங்களிலும் விதைக்கலாம். வீரிய ரகங்கள் பல இருந்தாலும், பாரம்பர்ய ரகங்களைத்தான் பெரும்பாலான விவசாயிகள் சாகுபடி செய்கிறார்கள். இஞ்சி பற்றி நீலகிரி மாவட்டம் விஜயநகரத்தில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சி நடந்து வருகிறது. மேலும் விவரம் தேவைப்படுபவர்கள் இந்த நிலையத்தைத் தொடர்பு கொள்ளலாம்."

தொடர்புக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், தோட்டக்கலை ஆராய்ச்சி மையம், விஜயநகரம், ஊட்டி. தொலைபேசி 0423-2442170.


"நெட்டுலிங்க மரத்தை அசோக மரம் என்று சொல்கிறார்கள், இது சரியா? உண்மையில் அசோக மரம் எப்படி இருக்கும்?"

ந. ஆடலரசு, பரவை.

கோயம்புத்தூர் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கத்தின் துணைச் செயலாளர் கண்ணம்மாள் ஜெகதீசன் பதில் சொல்கிறார்.

மஞ்சளில் மகசூலைக் கூட்டுவது எப்படி?

"அசோக மரமும், நெட்டுலிங்க மரமும் ஒன்று போல தோற்றம் அளிப்பதால் இந்தக் குழப்பம் நேருகிறது. ஆனால் அதன் இலைகளைக் கொஞ்சம் கூர்மையாக கவனித்து இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிய முடியும். நெட்டுலிங்க மரத்தின் இலைகள் கூராக வளைவுகளுடன் இருக்கும். அசோக மரத்தின் இலைகள் கூராக வளைவுகள் இல்லாமல் இருக்கும்.

நெட்டுலிங்கம் மரம் அழகுக்காகவும், காற்றுத் தடுப்புக்காகவும் வளர்க்கப்படுகிறது. அசோக மரம் மருத்துவ ரீதியாக வளர்க்கப்படுகிறது. 'சோகத்தைப் போக்கி இன்பத்தை அளிக்கும்' என்று நம்பப்படுவதால்தான் அசோகம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சீதையைக் கடத்திய ராவணன், சீதையிடம் இருந்து சோகத்தை விரட்டுவதற்காகவும், அவரது உடல் நலம் கெடாமலும் இருப்பதற்காகவும் அசோக வனத்தில் தங்க வைத்ததாக ராமாயணக் கதையில் வருகிறது.

சித்த மருத்துவத்தில் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை நோய்களுக்கு அசோக மரத்தின் இலை, பட்டைகளை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். இன்றும் கூட இலங்கையில் அசோக வனம் முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. அசோக மரத்தின் மகத்துவத்தை அறிந்தவர்கள் அதை நடவு செய்து வருகிறார்கள். அசோக மரத்தின் அடியில் களைப்பாறியவர்களுக்கு அதன் அருமை புரிந்திருக்கும். அசோக மரக்கன்றுகள் வனத்துறை மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. அருகில் உள்ள வன விரிவாக்க மையத்தை அணுகினால் கிடைக்கும்."


இயற்கை முறை விவசாயம் போல, ஆர்கானிக் முட்டை, ஆர்கானிக் சிக்கன் சாத்தியமா?"

எஸ். குணசேகரன், திருப்பூர்.

மூத்த விஞ்ஞானியும், கோழிப் பண்ணை ஆலோசகருமான டாக்டர். வேணுகோபால் பதில் சொல்கிறார்.

மஞ்சளில் மகசூலைக் கூட்டுவது எப்படி?

"உலக நாடுகளுக்கு இயற்கை விவசாய முறையைக் கற்றுக் கொடுத்த நாடு இந்தியா. காலங்காலமாக நாம் இயற்கை முறையில்தான் சாகுபடி செய்து வந்தோம். இப்போது மீண்டும் அந்தப் பாதைக்குத் திரும்பிக் கொண்டுள்ளோம். ரசாயன நஞ்சு தெளிக்காத, உரம் பயன்படுத்தப்படாத விளைபொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கிறது. இயற்கை முறை விவசாயத்துக்கு உலகளவில் சில வழிமுறைகளை வகுத்து, அதன்படி செய்பவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நடைமுறையும் உள்ளது. ஆனால், கோழி வளர்ப்புக்கு இதுபோன்ற வழிமுறைகள் எதுவும் இதுவரை வகுக்கப்படவில்லை.

கோழிகளுக்குத் தீவனத்தில் இருந்து தடுப்பூசிகள் வரை ஆய்வு செய்து இயற்கை முறைக்கு மாற்ற வேண்டும். அதாவது இயற்கை முறையில் விளைவித்த தானியங்களைக் கொண்டு தீவனம் தயாரிக்க வேண்டும். பூண்டு மஞ்சள், வேப்பிலை, துளசி... போன்றவற்றை இயற்கை முறையில் விளைவித்து அதன் மூலம் கோழிகளுக்கான நோய் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்ய வேண்டும். இவற்றைக் கடைபிடித்தால் ஆர்கானிக் முட்டை, ஆர்கானிக் சிக்கன் ஆகியவற்றை உற்பத்தி செய்வது சாத்தியமான விஷயம்தான். இதுவரை இதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், அதற்கான காலமும் வெகுதூரத்தில் இல்லை."

தொடர்புக்கு, அலைபேசி 94440-01071.

நீர்வள, நிலவளத் திட்டத் தகவல் மையத்தின் முகவரி வேண்டும்?

ஆ. சண்முகம், சிவகங்கை.

நீர்வள, நிலவளத் திட்டம் என்று சொல்லப்படும் மிகிவிகீகிஸிவி றிஸிளியிணிசிஜி தமிழக அரசின் வேளாண்மைத் துறை, நீர்வள ஆதாரத்துறை, வேளாண் பொறியியல் துறை, கால்நடைத் துறை, மீன்வளத் துறை... என்று ஏழுக்கும் மேற்பட்ட துறைகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் குறித்து தகவல் வேண்டுமானால், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பு அலுவலரைத் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு இயக்குநர் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர், நீர்வள நிலவளத் திட்டம், நீர் நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை-3. தொலைபேசி 0422-6611278.

மஞ்சளில் மகசூலைக் கூட்டுவது எப்படி?
மஞ்சளில் மகசூலைக் கூட்டுவது எப்படி?
மஞ்சளில் மகசூலைக் கூட்டுவது எப்படி?
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு