ஒரு மாதம் வரை, வாரம் இரு முறையும், அதன் பிறகு வாரம் ஒரு முறையும் தண்ணீர் கொடுக்க வேண்டும். இரண்டாவது ஆண்டு, 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுத்தால் போதும். மூன்றாம் ஆண்டு, கடும்கோடையாக இருந்தால் மட்டுமே தண்ணீர் தர வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் தண்ணீர் தர வேண்டியதில்லை... பருவ மழையே போதும்.
பலன் கிடைக்க 10 வருஷம்!
நடவிலிருந்து 5-ம் ஆண்டு காய்ப்புக்கு வரும். அப்போது ஒரு மரத்துக்கு 3 முதல் 4 காய்கள்தான் கிடைக்கும். 6-ம் ஆண்டு சுமார் 8 காய்களும், 7-ம் ஆண்டு 10 காய்களும் கிடைக்கும். அதன் பிறகுதான் படிப்படியாக மகசூல் அதிகரிக்கும். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 50 முதல் 100 காய்கள் கிடைக்கும். பூ வந்ததிலிருந்து சுமார் 95-ம் நாள் காய் பறிக்கலாம். நன்கு பழுக்கும் முன்பே பறித்துவிட வேண்டும். பழுத்து விட்டால், இதன் வாசனை தெரிந்து பறவைகள் பழத்தைச் சேதப்படுத்திவிடும். அதேசமயம் இளங்காயாகவும் பறிக்கக் கூடாது. காயில் உள்ள முள்ளை ஒடித்துப் பார்த்தால் தண்ணீர் போல் ஒரு திரவம் வரவேண்டும். பால் போல் வந்தால் அந்தக் காயைப் பறிக்கக் கூடாது. காயில் உள்ள முட்கள், நன்கு அகன்று விரிந்து, கையில் குத்தாத நிலையில் இருக்கும் போது பறிக்கலாம். அப்போது காய் நன்கு முற்றி, மிக லேசான மஞ்சள் நிறத்துக்கு மாறியிருக்கும். அதுதான் பறிப்பதற்கு சரியான தருணம். பறித்த சில நாட்களிலேயே பழுத்துவிடும்.
ஆண்டுக்கு ஒரு கவாத்து..!
பலா இலைகள் மண்ணில் விழுந்து மட்கி உரமாகி விடுவதால், தனியாக எந்த உரமும் தேவையில்லை. இருந்தாலும், ஆண்டுக்கு ஒரு முறை, மரத்தின் கிளைகளின் நிழல் முடியும் எல்லையில், மரத்தைச் சுற்றி ஒரு அடி ஆழமும், ஒன்றரையடி அகலமும் கொண்ட குழியை எடுத்து... அதில், மரத்துக்கு 50 கிலோ வீதம் தொழுவுரம் போடவேண்டும். மரங்களுக்கு நன்றாக சூரிய ஒளி கிடைக்கும் வகையில் ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயம் கவாத்து செய்ய வேண்டும். ஒரு கொத்தில் இரண்டு காய்கள் மட்டும் இருந்தால்தான் தரமான பெரிய பழங்கள் கிடைக்கும். அதனால், கொத்துக்கு இரண்டு காய்களை மட்டும் வைத்துக் கொண்டு, கூடுதலாக உள்ள காய்களை, பிஞ்சாக இருக்கும்போதே வெட்டி எடுத்துவிட வேண்டும். பிஞ்சு காய்களை கறியாகச் சமைத்து சாப்பிடலாம்.
காய்த் துளைப்பான் கவலையில்லை..!
|