ஆனால், இது அத்தனைக்கும் கடந்த ஆண்டிலிருந்து முற்றுப்புள்ளி விழுந்து, விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில்... விவசாயிகளுக்கு பலவிதத்திலும் உதவியாக இருந்திருக்கிறது தர்மபுரி மாவட்ட, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை!
தர்மபுரி மாவட்டம், ஒகனேக்கலிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பிலிகுண்டு கிராமம். ஆள்அரவமே இல்லாத காட்டுக்குள் சுமார் நூறு வீடுகளோடு நிற்கும் இந்த கிராமத்து மக்களின் வாழ்வாதாரத்துக்கு கிராமத்தைச் சுற்றி 75 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதுபோக காவிரியில் மீன் பிடித்து விற்பது இவர்களுக்கு உபதொழில். நகரத் தொடர்புகளை விட்டு விலகியிருக்கும் கிராமம் என்பதால், பென்னாகரம் பகுதி வியாபாரிகள் சிலர்தான், அப்பாவி மக்களின் விளை பொருட்கள் மூலம் கொள்ளை லாபம் பார்த்து வந்திருக்கிறார்கள்.
இந்நிலையில், பென்னாகரத்தில் பல ஆண்டுகளாக ஆக்கபூர்வமாக செயல்படாமல் இருந்த இருந்த வேளாண் விற்பனைத்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை அதிகாரிகள் சிலர், மீண்டும் நல்ல முறையில் செயல்பட வைத்துள்ளனர். நல்லெண்ணெய் விற்பனையில் பிரபலமான சில நிறுவனங்களுடன் நேரடியாகப் பேசி, அவர்களை பென்னாகரத்துக்கு வரவழைக்கவே... உள்ளூரில் உற்பத்தியாகும் எள்ளுக்கு நல்ல விலை கிடைக்க ஆரம்பித்துவிட்டது. எள்ளின் தரத்துக்கு ஏற்ற விலை கிடைப்பதால், பென்னாகரம் பகுதி மட்டுமல்லாமல் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் அங்கே வர ஆரம்பித்துவிட்டனர். ஆனால், அருகிலேயே இருக்கும் பிலிகுண்டு விவசாயிகளுக்கு மட்டும் இந்தத் தகவல் எட்டாமலே இருக்க, அந்த கிராமத்தைச் சேர்ந்த எள் விவசாயி ப்ரியாவின் கைகளில் தற்செயலாகக் கிடைத்த மளிகைக் கடை பொட்டல பேப்பர், அதைச் சாதித்திருக்கிறது.
|