செம்மொழியான தமிழ்மொழியாம்....' என்ற பாடல் திரும்பிய பக்கமெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கிறது நாடு கடந்து! இன்றைக்கு இந்த அளவுக்கு போற்றிப் பாடப்படும், செம்மொழியாகிய தமிழ்மொழி, இன்றளவும் உயிரோடு இருக்கிறது என்றால்... அதற்குக் காரணம்? அந்தத் தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பார்த்துப் பார்த்து உருவாக்கி வைத்த வேளாண் தொழில்நுட்பங்கள்தான். ஆம், உணவு இல்லையென்றால்... தமிழன் என்ன, சீனர்கள், அமெரிக்கர்கள், ஆடு, மாடுகள் என்று எந்த உயிருமே இருக்க முடியாது!
சங்கப் பாடல்களில் பயிர்த்தொழில்நுட்பங்கள்!
அத்தகைய உணவை உருவாக்கத் தேவையான பயிர்த் தொழில்நுட்பங்கள் ஏராளமானவற்றை, 'கல் தோன்றி, மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்தகுடி' எனப்படும் தமிழன் கண்டு சொல்லி வைத்திருக்கிறான். அவை அனைத்துக்கும் ஆதாரம்... இன்றைக்கும் கிராமப்புறங்களில் வழக்கத்தில் இருக்கும் பாரம்பரியமானத் தொழில்நுட்பங்கள்தான். அதையும் மீறி ஆதாரம் வேண்டுமா... ஆராயுங்கள் சங்கப் பாடல்களை!
ஆம்... புறநானூறு, நற்றிணை, தொல்காப்பியம், திருக்குறள் என்று இன்றைய முதல்வர் கருணாநிதி தூக்கிப் பிடிக்கும் அத்தனைப் பாடல்களிலும் பொதிந்து கிடக்கும் வேளாண் தொழில்நுட்பங்கள் அநேகம். ஆனால், அத்தகையப் பெருமை வாய்ந்த வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து, நடைபெற இருக்கும் செம்மொழி மாநாட்டில் யாரும் பேசப் போவதாகத் தெரியவில்லை. அங்கே சமர்ப்பிக்கப்பட இருக்கும் ஆய்வறிக்கைகள் பற்றிய பட்டியலில் 'வேளாண்மை' என்பதே இல்லை.
அதற்காக நாம் விட்டுவிட முடியுமா என்ன...? இதோ சமர்ப்பிக்கப்படுகிறது ஓர் ஆய்வறிக்கை!
வேளாண்மையை ஒழித்த பசுமைப் புரட்சி!
1960-களில் 'பசுமைப் புரட்சி' ஏற்படுத்திய மாற்றங்கள் மிக மோசமானவை. அதில் முக்கியமானது, ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தமிழர்கள் கடைபிடித்து, மேம்படுத்தி வந்த எண்ணற்ற வேளாண் தொழில்நுட்பங்களை, 50 ஆண்டுகளிலேயே ஒழித்துக் கட்டியதுதான்.
வேளாண்மைக்கு முதன்மை இடம் அளித்த பண்டைத் தமிழர்கள், பயிர் விளைச்சலை அதிகரிப்பதற்கான பல்வேறு தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்தனர். அவையெல்லாம் சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை, இன்றைய விவசாய நெருக்கடிகளுக்கும் தீர்வாக அமைந்துள்ளன என்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!
ஐவகை நிலங்கள்!
சங்ககால விவசாயத்தின் சிறப்பு, நிலத்தை வகைப்படுத்திப் பிரித்ததுதான். மலை (குறிஞ்சி), காடு (முல்லை), ஆற்றோரச் சமவெளி (மருதம்) ஆகிய மூன்று வகை நிலங்களிலும் பயிர்த்தொழில் செய்யப்பட்டது. இந்த மூன்று வகை நிலங்களுக்கும் தனித் தனியானத் தொழில்நுட்பங்கள் இருந்தன.
தமிழ்ச் சமூகத்தின் இலக்கணத்தைத் தொகுத்த தொல்காப்பியர், ஒரு நிலத்துக்கான பயிர்களை மற்ற நிலத்தில் செய்வதை 'மயக்கம்', அதாவது, 'முறை தவறிய செயல்' என்று சொல்லி வைத்திருக்கிறார். இந்தக் கருத்தின் பின்னே, பண்டைத் தமிழர்களுக்கு சூழலியல், மண்ணியல், தாவரவியல் ஆகிய துறைகள் குறித்த அறிவு, நிரம்பவே இருந்தது என்பதை உணரலாம்.
பயிரிடும் முறையில், நிலத்துக்குத் தகுந்த நுட்பங்கள் கடைபிடிக்கப்பட்டன.
அன்றே, ஒற்றை நாற்று நடவு முறை!
|