1991-ம் ஆண்டு விமானப்படைத்தளம் அமைப்பதற்காக தஞ்சாவூர் அருகே ராவுசாப்பட்டி, ஏழுப்பட்டி, தாளம்பட்டி, மாப்பிளைநாயக்கன்பட்டி, நாஞ்சிக்கோட்டை உள்ளிட்ட பத்து கிராமங்களில் சுமார் 1,500 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி, மத்தியப் பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைத்தது மாவட்ட நிர்வாகம். இழப்பீட்டுத் தொகையாக மிகச்சொற்பமே வழங்கப்பட்டதால், பிழைக்க வழியின்றி பத்தொன்பது வருடங்களாகப் போராட்டத்தையே தங்களின் வாழ்க்கை ஆக்கிக் கொண்டுவிட்டனர் இந்த விவசாயிகள்!
இதுபற்றி நம்மிடம் பேசிய ராவுசாப்பட்டியைச் சேர்ந்த குணசேகரன், "வருவாய்த்துறை அதிகாரிங்க நிலத்தைக் கேட்டு வந்தப்பவே, 'அதை வெச்சுத்தான் பொழைச்சுக்கிட்டுருக்கோம். அதையும் கொடுத்துட்டு என்ன பண்றது?'னு கேட்டோம். 'அரசாங்கம் கேட்டா, கொடுத்துதான் ஆகணும். அதுக்குப் பதிலா இழப்பீட்டுத் தொகை கொடுப்போம்'னு சொல்லி, கட்டாயமா கையகப்படுத்திட்டாங்க. அப்ப, ஒரு ஏக்கர் நிலம் ஒண்ணேகால் லட்சம் ரூபாயில இருந்து ரெண்டு லட்ச ரூபாய் வரைக்கும் போய்க்கிட்டிருந்துச்சு. 'சரி, பணம் வரும்ல, அதை வெச்சு வேற இடத்துல நிலம் வாங்கிப் பிழைச்சுக்கலாம்னு மனசைத் தேத்திக்கிட்டோம். ஆனா, ஏக்கருக்கு ஐயாயிரம் ரூபாயிலிருந்து, பன்னிரண்டாயிரம் ரூபாய் வரைக்கும்தான் இழப்பீடுனு சொல்லி, எங்க வாழ்க்கையில மண்ணை அள்ளிப் போட்டுட்டாங்க.
|