சாங்கிலி மாவட்டத்திலிருக்கும் வறண்ட பகுதியான அட்பாடி தாலூகாவைச் சேர்ந்த பலரும், இருபது ஆண்டுகளுக்கு முன்பு, வாழ வழியில்லாமல் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயரத் தொடங்கினர். பிறகு, குறைந்த அளவிலான நீரைப் பயன்படுத்தி மாதுளை பயிர் செய்யும் வித்தையைக் கற்றுக்கொண்ட சிலர், அதை முயற்சி செய்து பார்க்க.. அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. இந்த விஷயம், சாங்கிலியைத் தாண்டி, நாசிக், சோலாப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளுக்கும் பரவவே... அங்குள்ள விவசாயிகளும் மாதுளையைப் பயிர் செய்ய ஆரம்பித்தனர். மாநிலத்தில், இப்போது ஏறத்தாழ ஒரு லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் மாதுளை பயிர் செய்யப்படுகிறது என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்!
''பெரிதாக பராமரிப்பு எதையும் செய்யாமலேயே மாதுளை விவசாயத்தின் மூலம் குறைந்தபட்சம் ஏக்கருக்கு 2 லட்ச ரூபாய் வருமானம் ஈட்ட முடியும். பண்ணையில் முழுக்கவனம் செலுத்திப் பார்த்தால், ஏக்கருக்கு 15 லட்ச ரூபாய் வரைகூட வருமானம் கிடைக்கும். அதனால்தான் ஒவ்வொரு விவசாயியும் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணத்தை வங்கிகளில் சேமிக்க முடிகிறது. எங்களுக்குத் தெரிந்து... ஏழு, எட்டு ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிகள் பலரும் ஒரு கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்துள்ளனர்'' என்கிறார்கள் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயத் துறை அதிகாரிகள்.
"இந்தியாவின் மாதுளை விளைச்சலில் 80%, மகாராஷ்டிராவில் இருந்துதான் கிடைக்கிறது. 99-ம் வருடத்தில் 7 டன்னாக இருந்த ஏற்றுமதி, தற்போது 35,000 டன் என்ற அளவுக்கு மேல் எகிறிக் கொண்டிருக்கிறது" என்கிறது, இந்திய வேளாண் சந்தையைக் கவனித்துவரும் 'அபீடா' அமைப்பு அளிக்கும் புள்ளி விவரம்!
இதே மகாராஷ்டிராவில்தான், பருத்தி விவசாயிகள் கொத்துக் கொத்தாக தற்கொலை செய்துகொள்ளும் விதர்பா பகுதியும் இருக்கிறது என்பதுதான் வேதனை!
குவிண்டாலுக்கு 500 ரூபாய் ஊக்கத்தோகை !
பருப்பு வகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை ஏறிக்கொண்டே இருப்பது மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக மாறவே, பருப்பு உற்பத்தியைக் கூட்டுவதற்கான வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளனன. விவசாயிகளிடம் கிலோவுக்கு ஐந்து ரூபாய் ஊக்கத் தொகை வழங்கி கொள்முதல் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
|