Published:Updated:

நீங்கள் கேட்டவை

நீங்கள் கேட்டவை

நீங்கள் கேட்டவை

நீங்கள் கேட்டவை

Published:Updated:

10-06-2010
நீங்கள் கேட்டவை
நீங்கள் கேட்டவை
புறா பாண்டி
"கரும்பைக் கொல்லும் களை... அதற்கு எப்படி வைப்பது உலை?"

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீங்கள் கேட்டவை

"திண்டுக்கல் சுற்று வட்டாரப் பகுதிகளில் கரும்பு வயலில் தும்பைச் செடியைப் போல ஒரு களைச் செடி வளர்கிறது. அது வளர்ந்து பூத்தவுடன், கரும்பு முழுவதும் காய்ந்து விடுகிறது. அந்தச் செடியைப் பிடுங்கி எறிந்தாலும், திரும்பத் திரும்ப முளைத்து வருகிறது. பலர் வந்து பார்த்து ஆலோசனைகள் சொல்லியும் எதுவும் பலனளிக்கவில்லை. அதை எப்படிக் கட்டுப்படுத்துவது?"

சுப்பிரமணியம், ஸ்ரீராமபுரம்.

கரும்பு விவசாயிகள் சங்கச் செயலாளரும், கரிம விவசாயிகள் கட்டமைப்புச் செயலாளருமான, தனபால் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை

"கரும்பு சாகுபடியைப் பொறுத்தவரை முதல் நான்கு மாதங்கள் களை விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிடில் 20% அளவு விளைச்சல் பாதித்து விடும். பொதுவாகக் களை என்பது மண்ணுக்கு வலு சேர்க்கும் உரப் பயிர் என்பதைப் புரிந்து கொண்டால், களைகளை ரொம்ப சுலபமாக மேலாண்மை செய்துவிட முடியும். சூரிய வெளிச்சம் அதிகமாக வயலில் விழும்போதுதான் களைகள் முளைக்கின்றன. கரும்புக்காக நாம் இடும் உரங்கள் மண்ணில் அதிகளவில் இருக்கும்பட்சத்தில், கரும்போடு போட்டிப் போட்டு, கரும்பு எடுத்துக் கொள்ளும் முன்னரே களைகள் உரத்தை எடுத்துக் கொள்ளும்.

களைகளைத் தவிர்க்க 'மூடாக்கு' மட்டும்தான் சிறந்த வழி. மூடாக்கு மூன்று வழிகளில் பலன் கொடுக்கிறது. களைகளைப் பெருமளவில் கட்டுப்படுத்தும். வழக்கமாகத் தேவைப்படும் நீரில் பாதியளவுதான் தேவைப்படும். மூடாக்காக நாம் இடும் கழிவுகள் மட்கி மண்ணுக்கு வளம் சேர்க்கும். இவ்வளவு நன்மைகள் இருந்தும் நம் விவசாயிகள் மூடாக்கிட தயக்கம் காட்டி வருகின்றனர். உங்கள் நிலத்தில் நீங்கள் உடனடியாக கரும்புத் தோகைகளை உரித்து மூடாக்கு போட வேண்டும். கரும்பு அறுவடை முடிந்தவுடன் தோகைகளை எரிக்காமல் மூடாக்கு போடுங்கள்.

இது தவிர... உளுந்து, தட்டைப்பயறு போன்ற பயறு வகைகளை உயிர்மூடாக்காக கரும்பு பாரில் விதைத்து விடுங்கள். இந்த உயிர்மூடாக்கு மூன்று மாதங்கள் வரை காற்றில் இருந்து தழைச்சத்துக்களை (நைட்ரஜன்) இழுத்து வயலில் சேர்க்கும். இந்தப் பயறுகள் மூலமாக கூடுதல் வருமானமும் பெறலாம். மூடாக்கு போட்டுவிட்டால், கரும்பு முளைத்து வராதே என்று பயப்படத் தேவையில்லை. அது, எல்லாவற்றையும் முட்டி மோதிக் கொண்டு முளைத்து மேலே வந்து விடும்."

தொடர்புக்கு 94433-38848.


"எங்களுடைய மாட்டின் பால் கெட்டித்தன்மை இல்லாமல், தண்ணீர் போல உள்ளது. இதற்கு என்ன காரணம்?"

ஆர். வரதப்பன், சிவகங்கை.

சேலம் மாவட்ட கால்நடை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர். ஆ. துரைசாமி பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை

"நீங்கள் பால் கறக்கும்போது, நுரை வருகிறதா என்று கவனியுங்கள். நுரை வந்தால்தான் புரதச்சத்து நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். நுரையில்லாமல், தண்ணீர் போல இருந்தால் புரதச்சத்துப் பற்றாக்குறையே காரணம் என்று புரிந்து கொள்ளலாம். புண்ணாக்கு, பருத்திக் கொட்டை... போன்றவற்றை தீவனமாகக் கொடுத்து இதை சரி செய்ய முடியும். தவிர டானின் (சுருங்கிய வடிவில் உள்ள புரதம்) அதிகமாக உள்ள சவுண்டல் (சூபாபுல்), கிளரிசிடியா, வாதநாராயணன்... போன்ற மரங்களின் இலைகளையும் தீவனமாகக் கொடுக்க வேண்டும். இவற்றை புற வழிப் புரதங்கள் என்பார்கள் (Bypass protein). இவை, மாட்டின் இரைப்பையிலுள்ள நான்காம் அறையில் தங்கி செரிமானம் ஆகும். இதனால்தான் பாலில் புரதம் கூடும்.

பாலில் எஸ்.என்.எஃப். என்று சொல்லப்படும் கொழுப்பு தவிர, பிற சத்துக்களின் அளவு குறைவாக இருந்தால், தாதுஉப்புக் கலவையைக் கொடுக்க வேண்டும். சிலர் இதைத் தீவனத்தொட்டியில் மேலாகக் கொட்டி விடுகிறார்கள். அது தவறு. அப்படிச் செய்யும்போது, தொட்டியின் அடியில் சென்று தங்கி விடுவதால், மாடுகளுக்குக் கிடைக்க வேண்டிய சத்துக்கள் கிடைக்காது. இதைத் தவிர்க்க தீவனத்துடன் தாதுஉப்புக்களை நன்றாகப் பிசைந்து, அதனுடன் 50 கிராம் சமையல் சோடா உப்பையும் கலந்து கொடுக்க வேண்டும். இந்தத் தீவனத்தைத் தொடர்ந்து கொடுக்கும்போது ஏழு நாட்களிலேயே பாலில் மாற்றம் தெரியும்."

தொடர்புக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், 5/136, ஸ்டேட் பாங்க் ஆபீஸர்ஸ் காலனி-2, சேலம்- 636004. தொலைபேசி 0427-2440408.


"கிராமங்களில், 'இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு' என்று சொல்கிறார்கள். இது உடல்நலம் சம்பந்தப்பட்ட சொலவடையா... அல்லது விவசாயம் சார்ந்ததா?"

ஆர். கண்மணி, புதுச்சேரி.

வேளாண் சமூகக் கல்வியாளர் நா. ஜனார்த்தனன் பதில் சொல்கிறார்.

"தமிழ்நாட்டில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விவசாயம் நடந்து வருகிறது. இந்த மண்ணில் வாழ்ந்த மக்கள் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த விஷயங்களைத்தான் பேசியும், எழுதியும் வந்துள்ளார்கள். இருபொருள் தரும்படி சொற்களைப் பயன்படுத்துவது நம் முன்னோர்களின் சிறப்பு. அந்த வகையில்தான் 'இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு' என்பதைப் பார்க்க வேண்டும்.

நீங்கள் கேட்டவை

எள்ளும், கொள்ளும் சங்க இலக்கியங்களில்கூட இடம் பெற்றுள்ளன. எள் மிகச் சிறந்த உணவுப்பொருள். இது உடல் அளவில் இளைத்து இருப்பவர்களை வலுவுள்ளவர்களாக மாற்றும் தன்மை கொண்டது. கிராமப்புறங்களில் இன்றும்கூட நரம்புத் தளர்ச்சி வந்தவர்களுக்கு எள் உருண்டையைக் கொடுப்பதைக் காணலாம். சுருக்கமாகச் சொன்னால் எள் இல்லாத தமிழர் பலகாரத்தைப் பார்க்க முடியாது. எள்ளில் இருந்து பிழிந்து எடுக்கப்படும் எண்ணெயைத்தான் 'நல்லெண்ணெய்' என்று சொல்கிறோம். ஆக, இளைத்தவனை தேற்றும் என்பதால், 'இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு' என்று சொன்னார்கள்.

நீங்கள் கேட்டவை

அதேபோல, கொழுத்தவனுக்குக் கொள்ளு கொடுக்க சொன்னதிலும் காரணம் உள்ளது. ஊளைச்சதை போட்டவர்களை, கட்டுடல் காளையாக மாற்றும் சக்தி கொள்ளுக்கு உண்டு. கொள்ளு, குதிரைகளுக்கு விருப்பமான உணவு. அதை சாப்பிட்டால், களைப்பு இல்லாமல் குதிரைகள் ஓடும். அதிக அளவுக்கு தீனி எடுத்துக் கொண்டாலும், குதிரைக்கு அளவான உடல் இருப்பதற்குக் காரணம் அந்தக் கொள்ளுதான்.

விவசாய ரீதியில் பொருத்திப் பார்த்தாலும், இந்த சொலவடை அப்படியே பொருந்தும். பொருளாதார ரீதியாக வளம் குறைந்து இருப்பவர்கள், எள் பயிர் செய்தால் நல்ல பலன் பெற முடியும். மானாவாரியில் கூட சிறப்பாக விளைச்சல் கொடுக்கக் கூடியது. செலவில்லாமலே நல்ல வருமானம் கிடைத்துவிடும். அதனால்தான், 'பொருளாதாரத்தில் இளைத்தவர் எள் பயிர் செய்ய வேண்டும்' என்றார்கள்.

அளவுக்கு மீறிய பணம் இருந்தாலும், நிலத்தில் பயிர் செய்யாமல் விடக்கூடாது. எதையாவது பயிர் செய்ய வேண்டும். சோம்பேறித்தனமாக இருந்து, நிலத்தில் பயிர் செய்வதை மறந்து விடக்கூடாது என்பதற்காகவே... 'கொழுத்தவனுக்கு கொள்ளு' என்றும் சொல்லி வைத்தார்கள்."

தொடர்புக்கு 98942-48272.


"அரிசி ஆலைகளில் இருந்து வெளிவரும் கழிவுநீரைப் பயிர்களுக்குப் பாய்ச்சினால் பாதிப்பு ஏற்படுமா?"

இந்திரன், காஞ்சிபுரம்.

நீங்கள் கேட்டவை

நெற்குன்றம், அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எம். ஜெயபாலன் பதில் சொல்கிறார்.

"அரிசி தயாரிப்புக்கு முன்பு நெல்லை நீரில் ஊற வைப்பார்கள். அந்த நீரை வெளியேற்றி விட்டு, நெல்லை அடுப்பில் வேக வைப்பார்கள். நெல் வெந்த பிறகு வேகவைத்த தண்ணீரும் வெளியேற்றப்படும். இந்தத் தண்ணீர் எதிலும் நாங்கள் எந்த வகையான ரசாயனத்தையும் கலப்பதில்லை. அதனால், இதை தாராளமாக வயலுக்குப் பாய்ச்சலாம். இன்னும் சொல்லப் போனால் நெல் ஊறியத் தண்ணீரில் அரிசியில் உள்ள சத்துக்களும் கலந்து இருப்பதால், நிலம் வளமாகும். 'தேங்கி நிற்கும் இந்தக் கழிவு நீரில் துர்நாற்றம் வீசுகிறதே...' என்ற சந்தேகம்தான், வயலுக்கு அந்த நீரைப் பாய்ச்சலாமா என்ற கேள்வியை எழுப்புகிறது. தாராளமாகப் பாய்ச்சலாம். இது நான் அனுபவரீதியாகவும் உணர்ந்த உண்மை."


''வேளாண்மைக் கலைச் சொற்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அதற்கான அகராதி எங்கு கிடைக்கும்?''

க. சுப்பிரமணி, திருவண்ணாமலை.

''தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண்மைக் கலைச்சொல் பேரகராதியை வெளியிட்டுள்ளது. இதில் வேளாண்மை, தோட்டக்கலை, மனையியல், மலரியியல், வனவியல்... என்று வேளாண்மை சார்ந்த துறைகளின் கலைச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. இதன் விலை ரூ.200. அஞ்சல் மூலம் பெற 55 ரூபாயைக் கூடுதலாக அனுப்ப வேண்டும். டி.டி. அல்லது மணியாடர் அனுப்பலாம்.

தொடர்புக்கு விரிவாக்கக் கல்வி இயக்குநர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை-641 003. தொலைபேசி 0422-6611233.

நீங்கள் கேட்டவை
நீங்கள் கேட்டவை
நீங்கள் கேட்டவை
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism