Published:Updated:

செழிக்க வைக்கும் செடிமுருங்கை...

Vikatan Correspondent
செழிக்க வைக்கும் செடிமுருங்கை...
மகசூல்
ஜி.பழனிச்சாமி
செழிக்க வைக்கும் செடிமுருங்கை...
செழிக்க வைக்கும் செடிமுருங்கை...

50 சென்டில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம்...!

கத்திரிக்காய், முள்ளங்கி, வெங்காயம், வெண்டைக்காய் என எந்தக் காயைப் பயன்படுத்தி சாம்பார் தயாரித்தாலும்... முருங்கைக்காய் சாம்பாருக்கு ஈடாகாது. அந்தளவுக்கு சாம்பாருக்கு மணத்தையும் சுவையையும் கூட்டித் தருவது முருங்கைதான். அதனால்தான் பல மசாலாக் கம்பெனிகள், தாங்கள் தயாரிக்கும் சாம்பார் பொடியில் முருங்கைக்காய்த் தூளையும் சேர்த்துத் தயாரிக்கின்றன. இதன் காரணமாகவே, சந்தையில் எப்போதுமே முருங்கை ஏக கிராக்கியான இடத்தில்தான் இருக்கிறது.

செழிக்க வைக்கும் செடிமுருங்கை...

இப்படிப்பட்ட கிராக்கியை சரியாகப் பயன்படுத்தும் வகையில், செடிமுருங்கை சாகுபடி செய்வதை வழக்கமாகவே கொண்டிருக்கிறார்கள், குறிப்பிடத்தக்க அளவிலான விவசாயிகள். குறிப்பாக... திண்டுக்கல், கரூர், திருப்பூர் மாவட்டங்களில் இத்தகையோர் அதிகம். அவர்களில் ஒருவராக கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதியில் செடிமுருங்கை சாகுபடி செய்து வருகிறார் ரவி.

"எங்க பகுதியில் முருங்கைதான் பிரதானப் பயிர். ஆரம்பத்துல மரமுருங்கைதான் இந்தப் பக்கம் முழுசும் இருக்கும். அதைவிட அதிக மகசூல் கொடுக்குற வீரிய ஒட்டுரக செடிமுருங்கை வந்த பின்னாடி, எல்லாரும் அதுக்கு மாறிட்டாங்க. ஆனாலும் மரமுருங்கையோட சுவைக்காக அங்கங்க கொஞ்சம் கொஞ்சம் விட்டு வெச்சுருக்காங்க. அது மாதிரி நானும் அம்பது மரங்களை வெச்சுருக்கேன்" என்ற ரவி, அதைப் பற்றி சிலாகித்தார் (பார்க்க, பெட்டிச் செய்தி). தொடர்ந்து பேசியவர்,

அதிகாரி காட்டிய இயற்கை வழி!

செழிக்க வைக்கும் செடிமுருங்கை...

"எனக்கு, கிணத்துப் பாசனத்தோட நாலரை ஏக்கருக்கும் கொஞ்சம் கூடுதலா நிலமிருக்கு. பருவத்துக்கேத்த வெள்ளாமை வெச்சு எடுத்துக்குவேன். ஆரம்பத்துல ரசாயன விவசாயம்தான் செஞ்சுக்கிட்டுருந்தேன். நாலு வருஷத்துக்கு முன்ன வேளாண் துறை அதிகாரி ஒருத்தர் (பாலகிருஷ்ணன்) பழக்கமானார். அவர்தான் என்னை இயற்கை விவசாயத்துக்கு மாத்தினார். அதுதொடர்பான கூட்டங்களுக்குக் கூட்டிட்டுப் போய், நிறைய விஷயங்களை நான் கத்துக்கறதுக்கு காரணமா இருந்தார். அதுக்கப்பறம் மூணு வருஷமா முழுக்க இயற்கை வழியிலதான் என்னோட விவசாயம் நடக்குது!

நல்ல செம்மண் நிலமா இருக்கறது எனக்கு ரொம்பவே கைகொடுக்குது. ஒரு ஏக்கர்ல கரும்பு போட்டிருக்கேன். போன கார்த்திகை மாசத்துலதான் அரை ஏக்கர்ல செடிமுருங்கை போட்டேன். எல்லாத்துக்கும் சொட்டுநீர்ப் பாசனம் பண்ணிருக்கேன். முழுக்க இயற்கை முறை விவசாயம்கிறதால நல்லா வளர்ந்திருக்கு. என்னோட கரும்பை இப்பவே எல்லாரும் வந்து ஆச்சர்யமாப் பாத்துட்டுப் போறாங்க" என்றவர், அரை ஏக்கருக்கான செடிமுருங்கை சாகுபடி பற்றி சொன்னார். அது, பாடமாக இங்கே இடம் பிடிக்கிறது.

கார்த்திகைப் பட்டம் நல்லது!

முருங்கை, செம்மண்ணில் நன்கு வளரும். இதற்கு கார்த்திகைப் பட்டம் ஏற்றது. நிலத்தைத் தேர்வு செய்தவுடன்... 2 டிப்பர் தொழுவுரம், 1 டன் கோழிக்குப்பை ஆகியவற்றைக் கொட்டி இறைத்து, இரண்டு உழவு ஓட்ட வேண்டும். பிறகு, ஐந்து அடி இடைவெளியில் சொட்டுநீர்ப் பாசனம் தயார் செய்து கொள்ள வேண்டும். செடிக்கு செடி ஆறடி, வரிசைக்கு வரிசை பத்தடி இடைவெளி இருக்குமாறு மண்வெட்டியால் லேசாக சுரண்டி அதில் விதையை இட்டு மூட வேண்டும்.

கொழுந்து... கவனம்!

செழிக்க வைக்கும் செடிமுருங்கை...
செழிக்க வைக்கும் செடிமுருங்கை...

கொஞ்சம் விதைகளை நாற்றுப் பையில் போட்டு பூவாளியில் தண்ணீர்விட்டு தனியாகப் பராமரித்து வர வேண்டும். அரை ஏக்கருக்கு 250 கிராம் விதைகள் தேவைப்படும். 8-ம்நாள் விதைகள் முளைத்து வரும். அந்த சமயத்தில் எங்காவது விதைகள் முளைக்காமல் இருந்தால், தனியாக பராமரித்து வரும் நாற்றுகளில் இருந்து எடுத்து நடவு செய்துவிட வேண்டும். விதைகள் முளைத்து வரும் வரை அதிக தண்ணீர் கொடுக்க வேண்டும். அதன்பிறகு, வாரம் இருமுறை தண்ணீர் விட்டால் போதும்.

20-ம் நாளுக்கு மேல், செடிகள் அரையடி உயரம் வளர்ந்திருக்கும். இதை சரியாக கவனித்து, அனைத்துக் கொழுந்துகளையும் கிள்ளிவிட வேண்டும். அப்போதுதான் பக்கவாட்டில் போத்துகள் தழைத்து வரும். 30-ம் நாளுக்கு மேல் ஒரு தடவை கொழுந்து கிள்ள வேண்டும். அதிகமாகக் களைகள் மண்டினால் மட்டும் களை எடுத்தால் போதும். லேசான களைகள் என்றால், எடுக்கத் தேவையில்லை. செடிகளை ஆறு அல்லது ஏழு அடிக்கு மேல் வளர விடாமல், கவாத்து செய்துகொண்டே இருக்க வேண்டும்.

கரும்பச்சைக்கு கோமூத்திரம்!

இயற்கை விவசாயம் என்பதால் நாள்கணக்கில் அட்டவணை வைத்தெல்லாம் உரங்கள் இடத் தேவையில்லை. செடியில் ஏதாவது ஊட்டம் குறைந்தால் மட்டும் தொழுவுரம் அல்லது கோழிக்குப்பை இடலாம். தொடர்ந்து கோமூத்திரத்தை மட்டும் சொட்டுநீரோடு கலந்து விட்டால், காய்கள் நல்ல கரும்பச்சை நிறத்தில் வரும். பூச்சித் தாக்குதல் வந்தால் மட்டும், பூச்சிவிரட்டி தயார் செய்து தெளித்துக் கொள்ளலாம். இலைகள் மஞ்சள் வண்ணத்துக்கு மாறினால், அந்த இலைகளை மட்டும் கழித்துவிட்டு, 300 மில்லி பஞ்சகவ்யாவை பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால், சரியாகி விடும்.

ஆண்டு முழுவதும் அறுவடை!

செழிக்க வைக்கும் செடிமுருங்கை...

90-ம் நாளுக்கு மேல் பூ எடுத்து, 120-ம் நாளுக்கு மேல் அறுவடைக்குத் தயாராகி விடும். காய்களின் இருப்பைப் பொருத்து வாரம் ஒரு முறை அல்லது இரு முறை அறுவடை செய்யலாம். ஆனால், காய்கள் முற்றுவதற்குள் அறுவடை செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியமானது. தொடர்ந்து கவாத்து மட்டும் செய்து கொண்டு, தேவைப்படும்போது ஊட்டங்கள் கொடுத்து வந்தால்... மூன்று வருடங்கள் வரை அறுவடை செய்யலாம். சிலர் அறுவடை முடிந்தவுடன் மரத்தைக் கழித்து விடுவார்கள். அது தேவையில்லாதது.

ஆரம்பத்தில் ஓர் அறுவடைக்கு 100 முதல் 150 கிலோ வரை காய்கள் கிடைக்கும். போகப் போக அதிகரிக்கும். அதிக பனிப்பொழிவு, அடைமழைக் காலங்கள் தவிர, ஆண்டு முழுவதும் காய் வரத்து இருந்து கொண்டே இருக்கும். முதல் ஆண்டில் எட்டு டன் மகசூல் கிடைக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் தலா பத்து டன்னுக்கு மேல் மகசூல் கிடைக்கும்.

நிறைவாக பேசிய ரவி, வருமானம் பற்றி சொல்லத் தொடங்கினார். "பக்கத்துல இருக்குற மூலனூர் சந்தையிலதான் வித்துக்கிட்டு இருக்கேன். 25 காய்களா வெச்சு வெச்சுக் கட்டிதான் சந்தைக்கு எடுத்துக்கிட்டுப் போவோம். ஜூன் மாசத்துல ஒரு கட்டு நூறு ரூபா வரைக்கும்கூட விலை போச்சு. ஜூலை மாச ஆரம்பத்துல ஒரு கட்டு இருபத்தஞ்சு ரூபாய்க்குதான் போயிகிட்டிருக்கு. வழக்கமா முகூர்த்த நாள், பண்டிகைகளை ஒட்டி நல்ல விலை கிடைக்கும். மத்த நாட்கள்ல இறங்கிடும். எப்படிப் பாத்தாலும் சராசரியா கிலோவுக்கு பதினஞ்சு ரூபா கண்டிப்பா கிடைக்கும்" என்று சொன்னார்.

தொடர்புக்கு,
கே.ரவி, அலைபேசி 94866-04430
பிரேம்குமார், அலைபேசி 96556-60999

படங்கள் கே. குணசீலன், ஜா. ஜாக்சன்.

ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம்!

செழிக்க வைக்கும் செடிமுருங்கை...

திருச்சி மாவட்டம், முசிறி அருகே இருக்கும் தண்டலைப்புத்தூர் ஊராட்சித் தலைவராக இருக்கும் பிரேம்குமார், தனது மாந்தோப்பில் ஊடுபயிராக செடி முருங்கை சாகுபடி செய்து வருகிறார். அவருடைய தோட்டத்துக்குச் சென்றிருந்தபோது... ‘‘நான் பத்து வருஷமா விவசாயம் பாக்குறேன். ஆரம்பத்துல ரசாயன விவசாயம்தான். பசுமை விகடன் வந்ததுக்கு அப்பறம் இயற்கை முறை விவசாயத்துக்கு மாறிட்டேன்" என்று முன்னுரையாகச் சொன்ன பிரேம்குமார்,

"கிணத்துப் பாசனத்தோட 25 ஏக்கர் நிலம் இருக்கு. முழுக்க சொட்டுநீர்ப் பாசனம் போட்டு, 7 ஏக்கர்ல எலுமிச்சையும் 15 ஏக்கர்ல மாவும் போட்டிருக்கேன். மீதி நிலத்துல பசுந்தீவனம், பயறு வகைகளை போட்டிருக்கேன். மாந்தோப்புல பத்து ஏக்கர்ல மட்டும் ஊடுபயிரா செடிமுருங்கையைப் போட்டிருக்கேன். இது மூணு வருஷத்துக்கு வருமானத்தைக் கொடுக்கும்" என்றவர், சடைசடையாகத் தொங்கிக் கொண்டிருந்த காய்களை நம்மிடம் காட்டினார்.

தொடர்ந்து பேசியயவர், "வழக்கமா 16 அடி இடைவெளிலயிதான் மா நடவு செய்வாங்க. அந்த இடைவெளியில முருங்கை நல்லா வளரும். மா நடவு செஞ்ச ரெண்டு மாசத்துலேயே செடிமுருங்கையையும் விதைச்சுடலாம். சொட்டுநீர் போட்டாலும், அதிக தண்ணீர் கொடுக்கறது நல்லதில்ல. வாரத்துக்கு ரெண்டு தண்ணி கொடுத்தா போதுமானது. தண்ணியை நிறைய கொடுத்தா... பூ உதிர்ந்துடும். மாசம் ஒரு தடவை, ஏக்கருக்கு மூணு லிட்டர் பஞ்சகவ்யாவை சொட்டுநீரில் கலந்துவிட்டா போதும். அதேமாதிரி பூவெடுக்குறதுக்கு முன்ன ஒரு டேங்குக்கு (10 லிட்டர்), 300 மில்லிங்குற கணக்குல பஞ்சகவ்யாவைக் கலந்து எட்டு டேங்க் தெளிக்கணும். தோட்டத்துல நாலு வான்கோழிகளை வாங்கி விட்டுட்டா, களை பிரச்னை இருக்காது. இதைத் தவிர பெருசா வேற எதுவும் செய்யத் தேவையில்ல.

விதைச்ச நாலாவது மாசத்துல இருந்து அறுவடையை ஆரம்பிக்கலாம். இதுவரை 5 தடவை அறுவடை பண்ணிருக்கேன். 1,900 கிலோ காய் கிடைச்சது. சராசரியா எங்க பகுதியில கிலோ பதினைஞ்சு ரூபாய்க்கு விற்பனையாகுது" என்றார்.

-காசி.வேம்பையன்

கீரைக்கு மரமுருங்கைதான் !

"செடிமுருங்கையில மகசூல் அதிகமாகக் கிடைச்சாலும், சுவையில மரமுருங்கைக்கு அது ஈடாகாது" என்று சொல்லும் சின்னதாராபுரம் ரவி,

"நாட்டுமுருங்கைக் குச்சிகளை ஒடிச்சி, 20 அடி இடைவெளியில் அரை அடி ஆழத்துக்கு குழி எடுத்து ஊன்றிட்டா போதும். குச்சியோட முனையில சாணத்தை உருண்டையா வைக்கணும். மழைக் காலமா பார்த்து இதை நட்டுட்டா, இதுக்குனு தண்ணி பாய்ச்ச வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. மழையை வெச்சே வளந்துடும். 5 வருஷத்துக்கு ஒரு முறை கவாத்து செஞ்சா போதும். வருஷத்துக்கு மூணு தடவை காய் ஒடிக்கலாம். ஒரு மரத்துல வருஷத்துக்கு 500 கிலோ காய் கிடைக்கும். இந்த முருங்கைக் கீரையைத்தான் சமையலுக்கு பயன்படுத்--துவாங்க. சுவை மட்டுமில்ல... முழுக்கவே மருத்துவ குணம் கொண்டது மரமுருங்கை" என்று பெருமிதத்--தோடு சொன்னார்.

செழிக்க வைக்கும் செடிமுருங்கை...
செழிக்க வைக்கும் செடிமுருங்கை...