Published:Updated:

கொட்டிக் கொடுக்கும் ஏழு கீரைகள்!

விகடன் விமர்சனக்குழு
கொட்டிக் கொடுக்கும் ஏழு கீரைகள்!
மகசூல்
கு.ராமகிருஷ்ணன்
ஒரு ஏக்கர்... ஒரு வருடம்... ரூ.1,80,000...
கொட்டிக் கொடுக்கும் ஏழு கீரைகள்!
கொட்டிக் கொடுக்கும் ஏழு கீரைகள்!
கொட்டிக் கொடுக்கும் ஏழு கீரைகள்!

'பல ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளால் மட்டும்தான் லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும். ஒரு ஏக்கர் நிலத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது?'

-இப்படி கவலையோடு யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா..?

தஞ்சாவூர் மாவட்டம், பொன்னாவரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குமார் சொல்வதைக் கேட்டால்... உடனடியாக உற்சாகம் பிய்த்துக் கொள்ள ஓடியாடி உழைக்க ஆரம்பித்து விடுவீர்கள்!

''திட்டமிட்டு விவசாயம் செய்தால் ஒரு ஏக்கர் நிலத்திலும் லட்சங்களில் வருமானத்தை அள்ளலாம். அப்படி அள்ளிக்கொண்டிருப்பதால்தான் இதைச் சொல்கிறேன்!''

மேற்கொண்டும் குமார் பேசுவதைக் கேட்போமா..?

''எங்க அப்பா காலத்திலிருந்து கீரை விவசாயம்தான் எங்களுக்கு பிரதானம். இப்ப நானும் என்னோட ரெண்டு தம்பிகளும் சேர்ந்து அஞ்சு ஏக்கர்ல கீரை சாகுபடி செஞ்சுக்கிட்டிருக்கோம். எங்க குடும்ப ஆட்களே எல்லா வேலையும் செய்றதாலதான், இவ்வளவு பெரிய பரப்புல கீரை சாகுபடி செய்ய முடியுது. வேலைக்கு ஆள் கிடைக்காததாலதான் பெரும்பாலான விவசாயிகள் கீரை சாகுபடியைக் கை விட்டுட்டாங்க. அப்படியே ஒரு சிலர் செஞ்சாலும்கூட சென்ட் கணக்குலதான் கீரை சாகுபடி செய்றாங்க. தினமும் நாங்களே கீரையைப் பறிச்சிக்கிட்டுப் போயி, தஞ்சாவூர் உழவர் சந்தையில விற்பனை செய்றதால, தினமும் கை நிறைய வருமானம் பார்க்க முடியுது.

ஒரு ஏக்கர் நிலம் வெச்சிருக்கற சின்ன விவசாயி கூட கீரை சாகுபடியில நல்ல வருமானம் பாக்கலாம். நான் ஒரு ஏக்கர் நிலத்துல, அரைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கன்னி, பசலி, மணத்தக்காளி, சிறுகீரை, புளிச்சக்கீரைனு ஏழு வகையான கீரைகளை சாகுபடி செய்றேன். இப்படி பல கீரைகளை ஒருசேர கொண்டு போனா, ஒரு கீரையில குறைச்சலா வருமானம் வந்தாலும், இன்னொரு கீரையில கூடுதலா கிடைச்சுடும்'' என்றவர் கீரை சாகுபடி முறை பற்றி பாடம் எடுக்கத் தொடங்கினார்.

'கீரையைப் பொறுத்தவரை எல்லா காலங்களிலும் நன்றாக வளரும். குறிப்பாக கோடை காலத்தில் விளைச்சல் அதிகமாக இருக்கும். அனைத்து வகையான மண்ணிலும் கீரை செழித்து வளரும். களிமண் பகுதிகளில் விளைச்சல் அமோகமாக இருக்கும்.

ஒரு ஏக்கர் நிலத்தில் கீரை சாகுபடி செய்ய, இரண்டு டன் தொழுவுரம் போட்டு, மண்ணில் கட்டியில்லாத அளவுக்கு உழவு செய்ய வேண்டும். கீரை சாகுபடியில் தொழுவுரம் மிக அவசியம். அடியுரமாக தொழுவுரம் கொடுத்தால், ரசாயன உரத்துக்கானச் செலவு மிகவும் குறையும். பத்தடி நீளம், ஆறடி அகலத்தில் பாத்திகள் எடுத்து, நிலத்தின் அமைப்புக்கு ஏற்ப வாய்க்கால் அமைத்து கொள்ள வேண்டும்.

ஒரு ஏக்கரில் ஏழு கீரை!

பிறகு, 30 சென்ட் நிலத்தில் ஒரு கிலோ அரைக்கீரை; 30 சென்டில் ஒன்றரை கிலோ முளைக்கீரை 5 சென்டில் 100 கிராம் மணத்தக்காளி; 10 சென்டில் கால் கிலோ பசலி; 5 சென்டில் அரை கிலோ புளிச்சக்கீரை; 10 சென்டில் அரை கிலோ சிறுகீரை என்று விதைகளை மணலோடு கலந்து பரவலாகத் தெளிக்க வேண்டும். மீதமுள்ள 10 சென்டில்

கொட்டிக் கொடுக்கும் ஏழு கீரைகள்!

50 கட்டுகள் கொண்ட பொன்னாங்கன்னி செடியை நெருக்கமாக நடவு செய்து உடனே தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மறுபடியும் 3-ம் நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 10-ம் நாள் 25 கிலோ பாக்டம்ஃபாஸ், 25 கிலோ யூரியாவைத் தெளித்து, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 16-ம் நாள் மறுபடியும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு நான்கு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும்.

பொதுவாகவே, கீரைக்கு சற்று காய்ச்சலான பாசனம் இருந்தால் நல்லது. அதேசமயம், நான்கு நாட்களுக்கு மேல் தண்ணீர் பாய்ச்சாமல் இருந்தால், வாடத் தொடங்கிவிடும். விதைத்த 25-ம் நாளிலிருந்து, ஏழு வகையான கீரையையுமே அறுவடை செய்யத் தொடங்கலாம்.

முளைக்கீரை

முளைக்கீரையை வேரோடு அறுவடை செய்ய வேண்டும். தினமும் சராசரியாக 300 கட்டுகள் வீதம் பத்து நாட்களுக்கு மூவாயிரம் கட்டுகள் கிடைக்கும். ஒரு கட்டு சராசரியாக இரண்டு ரூபாய் விலை போகும். 30 சென்டிலும் முழுமையாக அறுவடை முடிந்ததும், இரண்டு மூன்று நாட்கள் கழித்து பாத்தியை நன்கு கொத்திவிட்டு, சுமார் 500 கிலோ தொழுவுரம் போட்டு மண்ணை சமப்படுத்தி, மீண்டும் முளைக்கீரை சாகுபடியைத் தொடங்கலாம். இதேபோல் ஓர் ஆண்டுக்கு சுமார் ஒன்பது தடவை சாகுபடி செய்யலாம்.

முளைக்கீரையைத் தவிர, மற்றக் கீரைகள் அனைத்துமே கிள்ளக் கிள்ள துளிர்த்துக் கொண்டே இருக்கும். ஒரு முறை விதைத்து, பல மாதங்கள் அறுவடை செய்து கொண்டே இருக்கலாம். மற்றக் கீரைகள் அனைத்துக்கும் சேர்த்து மாதம் ஒரு முறை 5 கிலோ யூரியாவைப் போட்டு தண்ணீர் பாய்ச்சினால், செழிப்பாக வளர்ந்து கொண்டே இருக்கும்.

சிறுகீரை

சிறுகீரையை தினமும் ஒரு சென்ட் அளவுக்கு அறுவடை செய்ய வேண்டும். பத்து நாளில் பத்து சென்ட் அறுவடை முடிந்து விடும். பதினோராவது நாள் மறுபடியும், முதல் நாள் அறுவடை செய்த இடத்திலிருந்து அறுவடையைத் தொடங்கலாம். இதேபோல மூன்று மாதம் வரை அறுவடை செய்யலாம். தினமும் 40 கட்டுகள் வீதம் மூன்று மாதத்தில் மொத்த மகசூலாக 3,600 கட்டுகள் கிடைக்கும். ஆண்டுக்கு மூன்று முறை சாகுபடி செய்யலாம். ஒவ்வொரு முறையும் பாத்தியைக் கொத்தி, தொழுவுரம் போட்டு, விதைகளைத் தூவ வேண்டும்.

கொட்டிக் கொடுக்கும் ஏழு கீரைகள்!

அரைக்கீரை

அரைக்கீரையை தினமும் 200 கட்டுகள் வீதம் அறுவடை செய்தால், இருபது நாள் கழித்து மறுபடியும் முதல் நாள் அறுவடை செய்த இடத்திலிருந்து அறுவடையைத் தொடங்கலாம். ஐந்து மாதம் வரை தொடர்ந்து மகசூல் கிடைக்கும். ஒரு நாளைக்கு 200 கட்டுகள் வீதம் மொத்தம்

30 ஆயிரம் கட்டுகள் கிடைக்கும். முழுமையாக அறுவடை முடிந்த பிறகு இரண்டு, மூன்று நாட்கள் கழித்து மீண்டும் அதே பாத்தியில் மண்ணைக் கொத்தி, 500 கிலோ தொழுவுரம் போட்டு, அரைக்கீரை சாகுபடியைத் தொடங்கலாம். ஆண்டுக்கு இரண்டு முறை இந்தக் கீரையை சாகுபடி செய்யலாம்.

மணத்தக்காளி

மணத்தக்காளிக் கீரையை தினமும் இருபது கட்டுகள் வீதம், ஐந்து மாதம் வரை சுழற்சி முறையில் அறுவடை செய்தால், 3,000 கட்டுகள் கிடைக்கும். ஐந்து மாதம் கழித்து மீண்டும் பாத்தியைக் கொத்தி, தொழுவுரம் போட்டு, விதை தூவி, சாகுபடியைத் தொடங்கலாம்.

புளிச்சக்கீரை புளிச்சக்கீரையை தினமும் 30 கட்டுகள் வீதம் சுழற்சி முறையில் அறுவடை செய்தால், ஐந்து மாதத்தில் 4,500 கட்டுகள் மகசூல் கிடைக்கும். இதையும் ஆண்டுக்கு இரண்டு முறை சாகுபடி செய்யலாம்.

கொட்டிக் கொடுக்கும் ஏழு கீரைகள்!

பசலிக்கீரை

பசலிக்கீரையை தினமும் 40 கட்டுகள் வீதம் சுழற்சி முறையில் அறுவடை செய்தால், ஓர் ஆண்டில் மொத்த மகசூலாக 14,400 கட்டுகள் மகசூல் பெறமுடியும்.

பொன்னாங்கன்னி

பொன்னாங்கன்னியை தினமும் 40 கட்டுகள் வீதம் சுழற்சி முறையில் ஓர் ஆண்டு வரை அறுவடை செய்யலாம். மொத்த மகசூலாக 14,400 கட்டுகள் கிடைக்கும்.

கொட்டிக் கொடுக்கும் ஏழு கீரைகள்!

ஆண்டுக்கு 1,80,000!

ஓராண்டில் ஒன்பது தடவை முளைக்கீரை, மூன்று தடவை சிறுகீரை, தலா இரண்டு தடவை அரைக்கீரை, மணத்தத்தக்காளி மற்றும் புளிச்சக்கீரையும், தலா ஒரு தடவை பசலி மற்றும் பொன்னாங்கன்னிக்கீரை சாகுபடி செய்வதன் மூலம் 1,41,600 கீரைக்கட்டுகள் கிடைக்கும். ஒரு கட்டு சராசரியாக இரண்டு ரூபாய் விலை போகும். இதன் மூலம் 2,83,200 ரூபாய் வருமானம் கிடைக்கும். எல்லாச் செலவும் போக நிகர லாபமாக சுமார், ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

ஓராண்டுக்குப் பிறகு, நிலத்தில் உள்ள கீரைச் செடிகளை மண்ணோடு மண்ணாக நன்கு உழவு ஓட்டி, தொழுவுரம் போட்டு, வாய்க்கால் வெட்டி, புதிதாகப் பாத்திகள் அமைத்து மீண்டும் சாகுபடியைத் தொடங்கலாம். விதைக்காக, கொஞ்சம் செடிகளை அறுவடை செய்யாமல் விட்டுவிட்டால், மூன்று மாதத்துக்கு மேல் முற்றி விடும். அவற்றை அறுத்து வெயிலில் காயவைத்தால், விதைகள் உதிரும். அந்த விதைகளை சுத்தமாகப் புடைத்து, தனியாகப் பிரித்தெடுத்து பயன்படுத்தலாம்.'

சாகுபடி பாடத்தை முடித்த குமார், ''பொதுவாகக் கீரையில நோய் மற்றும் பூச்சித் தாக்குதல் அதிகம் இருக்கும்னு சொல்வாங்க. ஆனா, இந்தப் பகுதியில் அந்தப் பிரச்னை இல்லை. பனிக்காலத்துல மட்டும் லேசா புள்ளி விழும். அதுவும்கூட தானாவே கட்டுப்படுறதால பூச்சிமருந்து அடிக்கறதில்ல. அந்தச் செலவு முழுசா மிச்சம்'' என மகிழ்ச்சியோடு சொன்னவர்,

கொட்டிக் கொடுக்கும் ஏழு கீரைகள்!

''மத்த எல்லா சாகுபடியை விட கீரை சாகுபடியில நிச்சய லாபம் இருக்கு. கீரைக் கட்டைத் தூக்கிட்டு சந்தைக்குப் போனா... மொத்தத்தையும் வித்துட்டு திரும்பிடலாம். கீரைக்கான தேவை அதிகமா இருக்கறதால... நாங்க விடாம அதை செய்துகிட்டிருக்கோம்'' என்று சொல்லும் குமார்... இயற்கை விவசாயம், ரசாயன விவசாயம் என்றெல்லாம் பிரித்து அறிந்திருக்கவில்லை.

''கீரைக்கு தொழுவுரம் கட்டாயம் போடணும்கிறது பாலபாடம். அதோட கூடுதல் மகசூல் தேவையா இருக்கறதால, யூரியாவையும் நாங்க விடாம போடறோம். மத்தபடி இயற்கை விவசாயம்கிறத இனிமேதான் யோசிச்சுப் பார்க்கணும்'' என்றார்.

படங்கள் மு. ராமசாமி

கொட்டிக் கொடுக்கும் ஏழு கீரைகள்!

இயற்கை முறையில் கீரை சாகுபடி!

கொட்டிக் கொடுக்கும் ஏழு கீரைகள்!

இயற்கை முறையில் கீரை சாகுபடி செய்து வருபவர்களில் தஞ்சாவூர் மாவட்டம், ஆச்சாம்பட்டியைச் சேர்ந்த செந்தமிழனும் ஒருவர். ''தற்போது ஆட்கள் பற்றாக்குறை காரணமாக கீரை சாகுபடியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கும் நான், இன்னும் சில மாதங்களில் அதை ஆரம்பிக்க இருக்கிறேன்'' என்று முன்னுரையாகச் சொன்ன செந்தமிழன்,

''ஓர் ஏக்கருக்கு 3 டன் தொழுவுரம் போடவேண்டும். 300 ஆடுகளைக் கொண்டு 5 நாட்கள் கிடை கட்ட வேண்டும். 14 லிட்டர் அமுதக்கரைசலை, 140 லிட்டர் தண்ணீரில் கலந்து, 200 கிராம் சூடோமோனஸையும் போட்டு, மெல்லியத் துணியால் மூடி நிழலில் ஊறவைக்க வேண்டும். இறுகக் கட்டினால் பொங்கிவிடும். விதைப்புக்கு முதல் நாள் இதனை நிலத்தில் தெளித்தால்... நுண்ணியிர்கள் பெருகி, மண் வளமாகும். விதைத்த 5-ம் நாள் 200 லிட்டர் அமுதக்கரைசலை, தண்ணீர் பாய்ச்சும்போது கலந்துவிட வேண்டும். பூச்சித் தாக்குதல் வராமல் தடுக்க 12-ம் நாள் 6 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டியை 60 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். தண்டு தடிமனாகவோ, பச்சையாகவோ இல்லாமல் இருந்தால், அதுபோன்ற சமயங்களில் 14 லிட்டர் அமுதக்கரைசலை, 140 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கீரை கிடைக்கும். இதுதான் மண்ணின் மணம் தாங்கிய கீரையாக மணக்கும். ரசாயன விவசாயம் செய்த நிலத்தில், ஆரம்பத்தில் கொஞ்சம் குறைவான மகசூல்தான் கிடைக்கும். அதேசமயம், இயற்கைக் கீரைக்கு கூடுதல் விலை கிடைப்பதால், அந்த நஷ்டம் ஈடுகட்டப்படும். காலப்போக்கில் மகசூல் அதிகரித்து கூடுதல் லாபத்தைக் கொடுக்கும்'' என்று சொன்னார்.

கொட்டிக் கொடுக்கும் ஏழு கீரைகள்!
கொட்டிக் கொடுக்கும் ஏழு கீரைகள்!