Published:Updated:

இயற்கை இலை வாழை... இனிய வருமானம்!

இயற்கை இலை வாழை... இனிய வருமானம்!
மகசூல்
ஜி.பழனிச்சாமி
ஒரு ஏக்கர் நிலம்... மாதம் 7,500 ரூபாய்..!
இயற்கை இலை வாழை... இனிய வருமானம்!
இயற்கை இலை வாழை... இனிய வருமானம்!
இயற்கை இலை வாழை... இனிய வருமானம்!

''மனசும் உடம்பும் திடமா இருக்கணும்னா... எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும். அதைவிட சிறந்த மருந்தோ, யோகாவோ கிடையாது. இது பயிருங்களுக்கும்கூட பொருந்தும். அதனாலதான், மனசுக்கு நிறைவான இயற்கை வழி விவசாயம் செய்துகிட்டிருக்கேன். அதனாலதான் என் பயிர்கள் எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்குது. ரசாயனம் பயன்படுத்துனா... பயிர்கள் கண்டிப்பா அழத்தான் செய்யும்''

-அர்த்தபுஷ்டியுடன் சிரித்துக்கொண்டே சொல்கிறார், பல்லடம் அருகே உள்ள கல்லம்பாளையத்தைச் சேர்ந்த வாழை இலை விவசாயி 'ஓஷோ' பழனிச்சாமி. 'வர்றாரு வல்லுநர்' பகுதியில் ஏற்கெனவே இடம்பிடித்ததன் மூலம் நமது வாசகர்களுக்கு அறிமுகமான இந்த 62 வயது இளைஞர், தனக்கு மட்டுமல்ல... எதிரிலிருப்பவர்களும் உற்சாகம் குறைந்துவிடாமல் குஷியோடு இருக்கும் வகையிலேயே தன்னுடைய பேச்சை அமைத்துக் கொண்டிருப்பது சிறப்பு.

''பிறந்தது வளர்ந்தது எல்லாமே இந்த ஊர்லதான். படிக்கற காலத்தில இருந்தே எனக்கு இயற்கை மேல ஆர்வம் அதிகம். திண்டுக்கல் பக்கத்துல இருக்குற சேவாப்பூர் இன்ப சேவா சங்கத்துல இயற்கை விவசாயத்தைக் கத்துக்கிட்டேன். கொஞ்சநாள் 'ஓஷோ' இயக்கத்துல இருந்தேன். அதிலிருந்து 'ஓஷோ பழனிச்சாமி'னு கூப்பிடுறாங்க. தொடர்ந்து நம்மாழ்வார் மாதிரியான இயற்கை வல்லுநர்களோட பழக்கம் வெச்சுக்கிட்டு, பதினஞ்சு வருஷமா தென்னை, வாழை, சவுக்கு, சப்போட்டா, பசுந்தீவனப் பயிர்னு இயற்கை வழி விவசாயம் பாத்துக்கிட்டிருக்கேன்.

வாழ வைக்கும் வாழை...!

முழுக்கமுழுக்க மண்புழு உரம், தொழுவுரம், பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், மூடாக்கு, இயற்கைப் பூச்சிவிரட்டினு மட்டுமே பயன்படுத்துறதால, என் பூமியில் துளிகூட நஞ்சு கிடையாது. '100% இயற்கைத் தன்மை கொண்ட மண்வளம்'னு அடிச்சுச் சொல்வேன். தக்காளி, வெண்டை, கத்திரி, மிளகாய்னு காய்கறி விவசாயத்தையும் இயற்கை வழியில செஞ்சுருக்கேன். எதைப் போட்டாலும் கப்புனு விளையுற செம்மண். பன்னீர் மாதிரி நல்ல தண்ணி, கூடவே இயற்கை இடுபொருள்... மகசூலைப் பத்தி சொல்லவா வேணும்..? இப்ப காய்கறி விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலையால, வாழை, தென்னைனு பண்ணிக்கிட்டுருக்கேன். ஒரு ஏக்கர்ல நடக்கும் இலைவாழை விவசாயம்தான் எனக்கு எப்போதும் கை கொடுத்துட்டிருக்கு'' என்று நீண்ட முன்னுரை கொடுத்த பழனிச்சாமி, ஒரு ஏக்கருக்கான இலை வாழை சாகுபடிப் பாடத்தைத் தொடங்கினார்.

வாடல்நோயை வர விடாத அக்னி அஸ்திரம்...!

இயற்கை இலை வாழை... இனிய வருமானம்!

நிலத்தைப் புழுதி பறக்க ஒருமுறை உழுது 5 டிராக்டர் தொழுவுரம், 5 டிராக்டர் கோழி எரு ஆகியவற்றைக் கொட்டி இறைத்து, மீண்டும் இரண்டு முறை டிராக்டர் மூலம் உழவு செய்து, மண்ணை திருநீறு போல பொலபொலப்பாக்க வேண்டும். பின் வாய்க்கால் அமைத்து, நாலரை அடிக்கு ஒன்று என்ற விகிதத்தில் நாட்டுவாழைக் கன்று நடவு செய்ய வேண்டும். கன்றைச் சுற்றி வட்டப் பாத்தி எடுக்க வேண்டும். இலை வாழை என்பதால், கன்றுகளுக்கிடையில் அதிக இடைவெளி தேவையில்லை. இதற்கு காரணம், வாழை இலைகளைத் தொடர்ந்து, அறுவடை செய்வதால் மரங்களுக்குத் தேவையான சூரிய வெளிச்சமும், காற்றும் போதிய அளவுக்கு கிடைத்துவிடும்.

ஒரு ஏக்கரில் 2,000 கன்றுகளை நடவு செய்யலாம். வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். 2 மற்றும் 4\ம் மாதங்களில் மண்வெட்டி மூலம் களை எடுத்து, மண் அணைப்பு செய்து, ஒவ்வொரு கன்றுக்கும் இரண்டு கையளவு (500 கிராம்) மண்புழு உரம் இட வேண்டும். 3\ம் மாதத்தில் ஒவ்வொரு மரத்தின் வேர்ப்பகுதியில் தலா 250 கிராம் வேப்பம் பிண்ணாக்கை வைத்து மூட வேண்டும். இது நூற்புழுவைக் கட்டுப்படுத்தும். நடவிலிருந்து நான்கு மாதங்கள் வரை மாதம் ஒரு முறை, 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் அக்னி அஸ்திரம், 3 லிட்டர் கோமூத்திரம் கலந்து தெளிக்க வேண்டும். இது வாடல்நோயைக் கட்டுப்படுத்தும்.

இயற்கை இலை வாழை... இனிய வருமானம்!

வாழை தரும் வருமானம்.. மாதம் ரூபாய் 7,500!

ஐந்தாவது மாதத்தில் இருந்து தொடர்ந்து எட்டு மாதங்கள் வரை இலைகளை அறுக்கலாம். அதற்குள் பக்கக் கன்றுகளும் நன்கு வளர்ந்து விடும். அதில் மூன்றை மட்டும் நிறுத்திவிட்டு மற்றவற்றைக் கழித்துவிட வேண்டும். தொடர்ந்து பக்கக் கன்றுகளில் இருந்தும் இலை அறுக்கலாம். இதுபோல மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இலையை அறுவடை செய்யலாம். பக்கக் கன்று பெரிதாக வளர்ந்த பிறகு, தாய் மரத்தை வெட்டித் துண்டுகளாக்கி தோப்பினுள் போட்டு விட்டால், அவை மட்கி நிலத்துக்கு உரமாகி விடும்'

சாகுபடிப் பாடத்தை முடித்த பழனிச்சாமி வருமானம் பற்றி பேசத் தொடங்கினார்.

''தலைவாழை இலை, நடு இலை, பக்கக் கன்னுல வர்ற இலைனு ஒரு நாளைக்கு 500 இலை வரைக்கும் அறுக்கலாம். ஒவ்வொண்ணையும் தனித்தனியா தரம் பிரிச்சு அன்னன்னிக்கு உள்ள விலைக்கு கொடுக்கலாம். நாமளே அறுத்து தினமும் மார்க்கெட்டுக்கு கொண்டு போனா, கல்யாண சீசன் சமயத்துல மாசம் இருபதாயிரம் ரூபா வரைக்கும் கிடைக்கும். மத்த மாசத்துல பத்தாயிரம் ரூபா வரை கிடைக்கும். அறுக்குறதுக்கு ஆள் இல்லாததால, மொத்தமா மாசத்துக்கு 7,500 ரூபாய்னு வியாபாரிகிட்ட பேசி விட்டுட்டேன். அவரே அறுத்து எடுத்துக்கிட்டு போயிடுவார்'' என்று சிரித்த முகம் மாறாமல் விடை கொடுத்தார் பழனிச்சாமி.

படங்கள் தி. விஜய்

இயற்கை இலை வாழை... இனிய வருமானம்!

70 ஆண்டுகளாக பொங்கும் நீர்!

இயற்கை இலை வாழை... இனிய வருமானம்!

பழனிச்சாமி வீட்டின் அருகில் 30 அடி ஆழத்தில் வற்றாத நீருடன் ஒரு பாசனக் கிணறு இருக்கிறது. இந்த இடத்தில் கிணறு தோண்ட நீரோட்டம் பார்த்துக் கொடுத்தவர் நடிகர் சிவகுமாரின் அப்பா... ராக்கைய்யா கவுண்டர். சிறந்த நிலத்தடி நீர் கணிப்பாளரான அவர், 70 ஆண்டுகளுக்கு முன்பு கணித்து கொடுத்த இந்த இடத்தில் கிணறு தோண்டியபோது, 30 அடி ஆழத்திலேயே நீர் பொங்கியிருக்கிறது. பக்கத்து இடங்களிலெல்லாம் 1,000 அடிக்கும் கீழாக நிலத்தடி நீர்மட்டம் இறங்கியும் இன்னமும் அந்தக் கிணறு வற்றாமல் நீரைச் சுரந்து கொண்டேயிருப்பது ஆச்சர்யமான விஷயம்தான்!

இயற்கை இலை வாழை... இனிய வருமானம்!
இயற்கை இலை வாழை... இனிய வருமானம்!
                            
      
பின் செல்ல