''3 சென்ட் நிலத்தில் 10 அடிக்கு 1 பாத்தி என மூன்று பாத்திகள் கட்டி, அவற்றுக்கு இடையில 2 அடிக்கு 1 வாய்க்கால் எடுக்கவேண்டும். அரை டன் தொழுவுரத்தைக் கொட்டி நிரப்பிவிட்டு, 100 கிராம் தண்டுக்கீரை விதைகளை ஒரு பாத்தியில மட்டும் விதைத்து தண்ணீர் விட்டால், போதும்... மூன்றாவது நாளே முளைக்க ஆரம்பித்துவிடும். நெல் நாற்றங்கால் பிடுங்குவது போல வேரோடு பறித்து, தண்ணீரில் அலசிவிட்டு, ஒவ்வொரு கீரையாக மூன்று பாத்திகளிலும் நடவு செய்யவேண்டும். மூன்று பாத்திகளிலும் 2,000 முதல் 3,000 வரை நடலாம். மூன்று மாதம் கழித்து தண்டு நன்கு வளர்ந்த பிறகு, வேரோடு பறித்து விற்பனைக்கு அனுப்பலாம். ஒரு தண்டு, மூன்று ரூபாய் என்று விலை வைத்து வியாபாரிகள் நிலத்துக்கே வந்து வாங்கிச் செல்வார்கள்.
தண்டுக் கீரையில் இலைக் குருத்துப்புழு தாக்குதல் அதிகமாக இருக்கும். இதைக் கட்டுப்படுத்த, வீட்டுச் சாம்பலை காலை நேரத்தில் மேலாக தூவினால், குருத்துப் புழு குறையும். இப்போது எல்லாருடைய வீட்டிலும் கேஸ் அடுப்பு என்பதால், சாம்பல் கிடைக்காது. அத்தகையச் சூழலில், பூச்சிமருந்து கடைகளில் இருந்து வாங்கிகிட்டு, வந்து வெள்ளை காடா வேட்டித் துணியில கொட்டி, நல்லா இறுக்கக் கட்டி; அதை அப்படியே கீரை மேல துணியை ஆட்டுனா. துணி ஓட்ட வழியா மருந்து செடி மேல பரவும். இதுதான் சிம்பிளான வழி'' என்று நம்மிடம் விளக்கியவர்,
''கீரை சாகுபடியில பிள்ளைங்களும் எனக்கு ஒத்தாசையா இருக்காங்க. அதனால என்னால தொடர்ந்து இதைச் செய்யமுடியுது'' என்று சொல்லி கீரைக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார்.
இப்போதைக்கு கீரைகளின் விலை உயர்ந்துவிட்டாலும், கீரையைப் பாரம்பர்யமாக செய்து வரும் இப்பகுதி மக்களுக்கு ஒரு 'ஓ' தாங்க போடணும்
|