வேறு எந்த பயிர் வளர்ச்சி ஊக்கிகளோ... உரமோ தேவையில்லை. 60ம் நாளிலிருந்து, காய்கள் அறுவடைக்குத் தயாராகிவிடும். அதிலிருந்து ஐந்து மாதங்கள் வரை காய் எடுக்கலாம். இடையிடையே தேவைப்பட்டால், களையெடுக்க வேண்டும்.
பூச்சிகளின் மீது கவனம்!
கத்திரியில், செம்பேன், காய்ப்புழு, தண்டுப் புழுத் தாக்குதல் அதிகம் இருக்கும். இவற்றை இயற்கை மூலிகைப் பூச்சிவிரட்டிகள் மூலமாகவே கட்டுப்படுத்தி விடலாம் (கடந்த ஆண்டு வரை மூலிகைப் பூச்சிவிரட்டி பயன்படுத்தி வந்த செல்வராஜ் தற்போது அதைப் பயன்படுத்துவதில்லை. அதேசமயம் தினமும் தோட்டத்தைச் சுற்றி வந்து, பாதிக்கப்பட்ட செடிகள், சொத்தைக் காய்களை உடனடியாக அப்புறப்படுத்தி, மாடுகளுக்கு தீவனமாகக் கொடுத்து வந்துள்ளார். இதனால், அவருக்கு பூச்சித் தாக்குதல் இல்லை).
விற்பனைக்கு அலைய வேண்டாம்
பாடத்தை முடித்த செல்வராஜ், "ஒரு ஏக்கரில் சராசரியாக 10 டன் கத்திரி கிடைக்கும். கேரள வியாபாரிகள், தோட்டத்துக்கே வந்து, எடை போட்டு வாங்கிக்கிறாங்க. இன்னிய நிலைமைக்கு ஒரு கிலோ 8 ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரை கொடுக்குறாங்க. இயற்கை விவசாய விளைபொருள் அங்காடி வெச்சுருக்கறவங்களும் தேடி வந்து வாங்குறாங்க. ஆனா, இயற்கை கத்திரிக்காய்னு கூடுதல் விலையெல்லாம் வெச்சுக் கொடுக்குறதில்ல. நஞ்சில்லாத காய்கறியை உற்பத்தி பண்ணி கொடுக்கறோம்ங்கிற மன நிறைவே எனக்கு போதுமானதா இருக்கு'' என்று சந்தோஷமாகச் சொன்னார்.
பூச்சிவிரட்டி தயாரிப்பது எப்படி?
வேப்பங்கொட்டை கரைசல் பூச்சிகளை விரட்டி அடிக்கவும், பயிர்களுக்கு நோய் எதிர்ப்புத் தன்மை உருவாகவும், ஏற்கெனவே இருக்கும் நோய்களைத் துரத்தவும் இது பயன்படும். பத்து கிலோ வேப்பங் கொட்டையை நன்கு தூளாக்கி, 20 லிட்டர் நீரில் கரைத்து 24 மணி நேரம் வைத்திருக்கவும். இதை வடிகட்டி 200 லிட்டர் நீருடன் 100 கிராம் காதி சோப்பு (கரைசல் பயிர்களின் மீது ஒட்டுவதற்காக) கலந்து, கைத்தெளிப்பான் கொண்டு காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்கவும். ஏக்கருக்கு 10 முதல் 12 டேங்க் வரை பிடிக்கும்.
இதனால் கம்பளிப் புழுக்கள், அசுவிணி, தத்துப்பூச்சிகள், வெட்டுக்கிளிகள், புகையான், இலை சுருட்டுப்புழு, ஆனைக் கொம்பன், கதிர்நாவாய் பூச்சிகள் உள்ளிட்ட பலவும் கட்டுப்படுகின்றன. மேலும் சாம்பல் நோய், மஞ்சள் வைரஸ் நோய் போன்றவையும் கட்டுப்படும்.
|
|