Published:Updated:

இதோ,கரும்பு வெட்டும் கருவி....

இதோ,கரும்பு வெட்டும் கருவி....

இதோ,கரும்பு வெட்டும் கருவி....
கண்டுபிடிப்பு
ஊரோடி
ஒரு ஏக்கர் செலவில் 5 ஏக்கர் அறுவடை...
இதோ,கரும்பு வெட்டும் கருவி....
இதோ, கரும்பு வெட்டும் கருவி.....
ஆட்கள் பற்றாக்குறைக்கு அருமருந்து!

'தேவை, கண்டுபிடிப்புகளின் தாய்!'
-இது ஆங்கில பழமொழி.

கந்தராஜுக்கு இதெல்லாம் நிச்சயமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம்...? அவருக்கு ஆங்கிலம் சுத்தமாகத் தெரியாது. அதுமட்டுமல்ல... ஆரம்பக் கல்வியைக்கூட முடிக்காதவர். ஆனால், இந்தப் பழமொழிக்கு நூற்றுக்கு நூறு உதாரணமாகத் திகழ்கிறார் என்பதுதான் ஆச்சர்யமூட்டும் செய்தி.

இதோ,கரும்பு வெட்டும் கருவி....

மதுரை, ஆரப்பாளையம், மேலப்பொன்னகரம், மூன்றாவது தெரு... இதுதான் கந்தராஜின் முகவரி (அலைபேசி 97901-27981). இங்கே உட்கார்ந்து கொண்டு, கரும்பு வெட்டும் எளியகருவி ஒன்றை வெற்றி கரமாக வடிவமைத்து, தன் சொந்தத் தோட்டத்தில் அதை வெற்றிகரமாகப் பயன்படுத்தி வருகிறார். அவருடைய தேவைதான், இப்படியரு கருவியைக் கண்டுபிடிக்க வைத்திருக்கிறது. இது... அரை ஏக்கர், ஒரு ஏக்கர் என்று குறைந்த பரப்பில் கரும்பு பயிரிட்டுவிட்டு, அதை வெட்டுவதற்கு ஆள் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு மிகவும் வரப்பிரசாதமான ஒரு கருவி என்பது குறிப்பிடத்தக்கது.

பத்து வயதில், குழந்தை தொழிலாளியாக ஒர்க்ஷாப் வாழ்க்கையைத் துவக்கியவர், சின்னச் சின்னப் படிகளாக கடந்து, தனது கடின உழைப்பாலும், ஒழுக்கத்தாலும் மதுரையிலிருக்கும் டி.வி.எஸ். நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் இயந்திர பாகங்கள் தயாரித்துக் கொடுக் கும் அளவுக்கு முன்னேறினார். சம்பாதித்தப் பணத்தை நிம்மதியாக முதலீடு செய்ய நினைத்து, மதுரை அருகே உள்ள பாலமேடு கிராமத்தின் அருகில் ஐந்து ஏக்கர் நிலத்தை வாங்கி, விவசாயத்தில் கால் பதித்தவர், முழுநேர விவசாயியாக மாறிப்போனார். அவருடைய நிலம், மிகவும் சுமாரான'ஈழக்களி' பாங்கு கொண்ட நிலம். இதனால் வெளியிலிருந்து மண் கொண்டு வந்து சேர்த்து, அதை நல்லதொரு விவசாய பூமியாக முதலில் மாற்றினார். நெல் விவசாயம் செய்து பார்த்ததில் அவ்வளவாக திருப்தியில்லை. வறட்சியான காலத்திலும் கிணற்று போர் மூலம் போது மான தண்ணீர் கிடைக்கும் நிலம் என்பதால், அலங் காநல்லூர் சர்க்கரை ஆலை அலுவலர்களின் இனிப்பான பேச்சுக்கு மயங்கி, கரும்புக்கு மாறிவிட்டார்.

கரும்பு நன்றாக வளர்ந்தது. ஆலையிலிருந்து சரியான சமயத்தில் கரும்பு வெட்டுவதற்கான அனுமதியும் கிடைத்தது. ஆனால், கரும்பு வெட்ட ஆட்கள் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும், டன் ஒன்றுக்கு வெட்டுக்கூலி 350 ரூபாய், 400 ரூபாய் என்று எகிறிப்போய்விட, போட்ட முதல் கூட எடுக்க முடியாது என்கிற நிலை.

இனி கந்தராஜ் பேசுகிறார்,

-"இந்தப் பகுதியில சராசரியா ஒரு ஏக்கருக்கு 40 முதல் 45 டன் மகசூல் கிடைச்சாலே பெரிய விஷயம். அப்படியிருக்கும்போது, வெட்டுக் கூலியா இத்தனை பணம் போனா என்னாகிறது? பத்து மாசமா கை முதல் போட்டு, கடுமையான கரன்ட் தட்டுப்பாடு காரணமா ராவெல்லாம் முழிச்சிக்கிட்டிருந்து, தண்ணீ பாய்ச்சி, பாடுபட் டவனுக்கு கடைசியில என்னதான் மிச்சம்?னு ஏகப்பட்ட கேள்விங்க எனக்குள்ள எழுந்து நிக்க ஆரம்பிச்சிடுச்சி. இதைப் பத்தியே ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்.

இதோ,கரும்பு வெட்டும் கருவி....

கைவசம் இரும்புப் பட்டறை... டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்துக்கு வேலை பார்த்த அனுபவ அறிவு... இதெல்லாம் சேர்ந்துகிட்டு, மேற்கொண்டு என்னை தீவிரமா செயல்பட வெச்சிது. கடைசியில, 'கரும்பு வெட்டுற வேலையை எளிமையா செய்து முடிக்கற மாதிரி சின்னதா ஒரு கருவியைக் கண்டுபிடிச்சாகணும்'னு சபதம் போட்டு களத்துல குதிச்சேன்.

முதல்ல சைக்கிள் மூலமா இயங்கற கரும்பு வெட்டும் கருவியை வடிவமைச்சேன். அகமதாபாத் நகரத்துல இருக்கற, 'தேசிய அடிமட்ட கண்டுபிடிப்பாளர் அறக்கட்டளை'க்கு இந்தத் தகவல் போகவும்... அங்கிருந்து என்னை ரொம்பவும் உற்சாகப்படுத்தி னாங்க. எரிபொருளைப் பயன் படுத்தி இயங்குற மாதிரி யான கருவியைக் கண்டு பிடிக்கணும் சொல்லி, ஊக்க உதவித் தொகை கொடுத்தாங்க. ஆறு, ஏழு மாடல் வரை செய்து பார்த்தும் சரிப்பட்டு வரல.

கடைசியாத்தான் இப்ப இருக்கற வடிவம் கிடைச்சிது. பழைய டி.வி.எஸ்-50 வாகனத்தோட இன்ஜின், பஜாஜ் சன்னி ஸ்கூட்டரோட சக்கரம், முன்புறமா வட்ட வடிவ வெட்டும் ரம்பம். தேவையான ஷாப்டுகள், பல்சக்கரம், செயின் எல்லாம் சேர்ந்து நான் உருவாக்கியிருக்கிற இந்த மெஷினோட மொத்த எடை 13 கிலோ. இந்த மெஷினை வயக்காட்டுக்குக் கொண்டு போறதுக்கு பெரிய பெரிய ரோடும் தேவையில்ல.. வரப்பையும் உடைக்கத் தேவையில்ல. கரும்பு வயல் எந்த மூளையில இருந்தாலும் தோள்ல தூக்கி வெச்சிக் கிட்டு நடந்தே கொண்டு போயிடலாம். வரப்பு கொஞ்சம் வசதியா இருந்தா, அதுல போட்டு உருட்டிக்கிட்டே போகலாம். குழந்தைங்களை உட்கார வெச்சிக்கிட்டு, தள்ளி விளையாடுற வண்டி மாதிரி இருக்கறதால, இதைக் கையாளுற துல பெருசா எந்தக் கஷ்டமும் இல்ல.

இதோ,கரும்பு வெட்டும் கருவி....

ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டா... ஒரு மணி நேரம் ஓடும். மூணு மணி நேரம் ஓடினா கால் ஏக்கர் கரும்பை, அதாவது 5 டன் கரும்பு வெட்டி முடிச்சிடலாம். மெஷின் ஓட்ட ஒரு ஆள், துணைக்கு ரெண்டு பொம்பளை ஆள்னு இருந்தா போதும். இந்த 5 டன் கரும்பையும் சுளுவா வெட்டி, சோகையடிச்சி, கட்டுக் கட்டி, டயர் வண்டியில ஏத்தி, தினமும் ஆலைக்கு அனுப்பிக்கிட்டே இருக்கலாம்" என்று தன்னு டைய கண்டுபிடிப்புப் பற்றி விவரித்த கந்தராஜ், அதைப் பயன்படுத்தி கரும்புகளை வெட்டியும் காண்பித்தார். பார்களில் அடிக்கரும்பைக்கூட விட்டு வைக்காமல், சுத்தமாக வெட்டித் தள்ளி வியப்பைக் கூட்டியது அந்தச் சின்னஞ்சிறு கருவி!

தொடர்ந்து பேசிய கந்தராஜ், "எந்தத் தொழில் செஞ்சாலும், எந்த வேலை பார்த்தாலும் நிச்சயம் லாபம் இருக்கணும். ஆனா, இந்தக் கரும்பு வெள்ளாமை, ஆரம்பிச்ச வேகத்துலயே கசந்து போற மாதிரி ஆயிருச்சி. அதனாலதான் வேக வேகமா கருவி தயாரிப்புல இறங்கினேன். இதை மட்டும் நான் கண்டுபிடிக்கலனா... என் கதி அதோகதியாகியிருக்கும். கரும்பு விவசாயத்தை விட்டொழிச்சிட்டு, வீட்டுக்கே திரும்பியிருப்பேன். நல்லவேளையா இதைக் கண்டுபிடிச்சேன்... தப்பிச்சேன்!

இதோ,கரும்பு வெட்டும் கருவி....

பெரிய பெரிய விவசாயிங்க... பெரிய நிலப் பரப்பு... இதுக்கு ஏத்த மாதிரியான மெஷின்களைப் பத்தித்தான் எல்லாருமே யோசிக்கிறாங்க. 3 ஏக்கர் 4 ஏக்கர் சம்சாரிங்களைப் பத்தி யாருமே நினைச்சிப் பார்க்கறதில்லை. நான் சின்ன விவசாயி, அதனால சின்ன விவசாயிக்குத் தகுந்த மாதிரி யோசிச்சேன்.

இந்த மெஷினை ஓட்டுறது ரொம்பவும் சுலபம். கயித்தைப் பிடிச்சி இழுத்தா... இன்ஜின் ஓட ஆரம்பிச்சிடும். அதுல இருந்து சக்கரம் இயங்கறதால தள்ளிக்கிட்டு போக வேண்டியதில்ல. குறைஞ்சது 3 அடி பார்ல நல்லா ஓடும். வயல்ல மெதுவா போகும்போது முன்பக்கம் இருக்கிற வட்ட ரம்பமும் சுத்தும். கரும்புகிட்ட கொண்டு போனதும் கண்மூடி கண் திறக்குறதுக்குள்ள கரும்பை வெட்டிடும். ஒரு ஆம்பளையாள் இந்த மெஷினை ஓட்டிக்கிட்டே போக, ரெண்டு பொம்பளை ஆளுக கரும்பை எடுத்து, சோகை யடிச்சி, கட்டுப்போடலாம். கரும்பு கோணல் மானலா வளர்ந்து கிடந்தாலும் சரி... குறுக்கும், நெடுக்குமாக படுத்துக்கிடந்தாலும் சரி, அழகாக வெட்டித் தள்ளிடும் இந்தக் கருவி. கரும்புக்கு மட்டுமில்ல... மாட்டுக்கு சீமைப்புல் அறுக்கலாம், சோளம், மக்காச்சோளம், சூரியகாந்தி, மல்பெரி மாதிரியான பயிருங்களோட அடி அறுப்புக்கும் பயன்படுத்தலாம்.

இப்படி ஒன்றை கண்டுபிடிச்சிருக்கற விஷயம் மதுரையில இருக்கற சேவா தொண்டு நிறுவனத் துக்கு தெரியவரவும், அவங்க செலவுல வேளாண்மை கல்லூ ரிக்கு (திருச்சி மாவட்டம், குமுளூரில் இருக்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம்) என்னோட மெஷினை அனுப்பி வெச்சாங்க. அங்க இருக்குற 5 விஞ்ஞானிங்க சோதனையெல் லாம் செஞ்சி பாத்துட்டு, திருப் தினு ஆய்வறிக்கை கொடுத்தவங்க, கூடவே சில யோசனைகளையும் சொல்லியிருக்காங்க. இப்ப இருக் கறது 50 சி.சி. இன்ஜின். இதை இன்னும் கூட்டணும்னு முக்கி யமா சொல்லியிருக்காங்க. அதனால, 100 சி.சி. இன்ஜின் மூலமா இந்தக் கருவியை தயாரிக்கலாம்னு இருக்கேன். '4 ஸ்ட்ரோக்' இன்ஜின்ல கியர் பாக்ஸ், கிக் ஸ்டாட்டர் இதெல் லாம் இருக்கறதால வேலை விரைவா முடியும். பெட்ரோல் செலவும் அளவா இருக்கும். 100 சி.சி. இன்ஜினைப் பயன்படுத் தினா, இப்ப இருக்கற இந்த மெஷினோட மொத்த எடையில இன்னும் 3 கிலோ வரைக்கும் கூடும். அதாவது, கிட்டத்தட்ட 16 கிலோவுக்கு வந்துடும்.

என்னோட வயல்ல கரும்பு அறுவடை செய்யுறதைப் பார்த் திட்டு பக்கத்து விவசாயிங்களும் இது போல மெஷின் கேக்கறாங்க. இனிதான் அதைப் பத்தியெல்லாம் யோசிக்கணும்" என்று சொன் னவர்,

"பழைய டி.வி.எஸ்- 50 இன்ஜின், பழைய டயர்கள், பழைய பல் சக்கரம்னு எல்லாமே பழசுதான். அதனால பத்தாயிரம் ரூபாய்க்கு கொஞ்சம் முன்ன, பின்னதான் செலவாச்சி. எல்லாத் தையும் புதுசா போட்டு, பார்க்கறதுக்கு அழகா, கம்பெனி தயா ரிப்பு மாதிரி நல்லபடியா உருவாக்கினா... இருபத்தைந்தாயிரம் வரைக்கும் செலவு பிடிக்கும்" என்று சொன்னார்.

நுனி நாக்கு ஆங்கிலம்... பல்கலைக் கழகத்தில் வழங்கப்படும் பெரிய பெரிய பட்டங்கள்... இவையெல்லாம் இருந்தால்தான் புதிய கண்டுபிடிப்புகளை வெளிக் கொண்டு வர முடியும் என்ப தில்லை. அனுபவமும், அடிப்படை இன்ஜினியரிங் திறமையும் இருந்தாலே கருவிகளைக் கண்டு பிடிக்கலாம். இதற்கு கந்தராஜ் மிகச்சரியான உதாரணம்.

ஏக்கர் கணக்கில் கரும்புத் தோட்டங்கள் இருந்தால், கரும்பு களை வெட்டித் தள்ள அசுர இயந்திரங்கள் இருக்கின்றன. தமிழக அரசு கூட, வெளிநாடுகளில் இருந்து இத்தகைய இயந்திரங்களை வரவழைத்து விவசாயிகளுக்கு வாடகைக்கு விடும் யோசனையில் இருக்கிறது. தனியார் நிறுவனங்கள் சிலவும் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றன. இவை இன்னமும் முழுமையாக கைகூடவில்லை. அப்படியே கைகூடினாலும், 5 ஏக்கருக்கும் அதிக அளவில் கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு மட்டுமே அது பலன் தரும். ஆனால், ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் விவசாயிகள், இத்தகைய கருவிகளைப் பார்த்து ஏங்கத்தான் முடிகிறது. 'நமக்கு ஒரு விடிவு வராதா?' என்று புலம்பத்தான் முடிகிறது. அத்தகையோருக்கு விடிவு தரும் விதத்தில் உருவாக்கப் பட்டிருக்கும் இந்தக் கருவி, எல்லா விவசாயிகளுக்கும் கிடைக்கப் போவது எப்போது...?

கூடுதல் மகசூல்!

கருவியைப் பயன்படுத்தும்போது, பிசிறு இல்லாமல் தரையை ஒட்டி சுத்தமாக வெட்டுவதால் கரும்பு மகசூல் அதிகமாகக் கிடைக்கிறது. அதாவது, எடை அதிகமாக இருக்கும். இரண்டாம் கட்டை கரும்பும் நன்றாக வெடித்து வருகிறது. இரண்டாம் முறை கங்கு வெட்டி, மட்டம் போடும் வேலையும் இல்லை என்பதால் இந்தச் செலவும் மிச்சம். வெட்டரிவாள் பயன்படுத்தி வெட்டும்போது, அடிப்பாகமானது சற்று விடப்பட்டே வெட்டப்படும். இதனால் பாரில் நீட்டிக் கொண்டிருக்கும் அடிக்கட்டை, வயலில் வேலை செய்பவர்களின் கால்களை பதம் பார்த்துவிடும். கருவி மிகச்சுத்தமாக வெட்டுவதால் அந்தப் பிரச்னையும் இல்லை.

சிறு கரும்புத் தோட்டங்களுக்குத்தான் என்றில்லை. பெரிய தோட்டங்களுக்கும் இதைப் பயன்படுத்த முடியும். பெரிய அளவிலான இயந்திரத்தை தோட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்கே பெரு முயற்சி எடுக்கவேண்டும். வழியில் வேறொருவரின் கரும்புத் தோட்டம் இருந்து, அந்தக் கரும்புகள் வெட்டும் பருவத்துக்கு வராமல் இருந்தால், பெரும் இயந்திரத்தை அங்கே கொண்டு செல்வது சிரமமாக இருக்கும். அதைவிட, கந்தராஜ் தயாரித்திருக்கும் இயந்திரத்தை ஒன்றுக்கு இரண்டாகப் பயன்படுத் தினால் வேலை சுலபமாக முடிந்துவிடும்.

அழைப்பு விடுக்கும் அரசு!

இதோ,கரும்பு வெட்டும் கருவி....

கந்தராஜ் கண்டுபிடித்திருக்கும் கருவி பற்றிய விவரங்களை தமிழக வேளாண் துறை செயலாளர் சுர்ஜித் கே. சௌத்ரி முன்பாக வைத்தபோது, "இந்த இயந்திரத்தைக் கண்டுபிடித்திருப்பவர், இயந்திரம் மற்றும் வேளாண் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட வற்றின் சான்றிதழ்களோடு என்னிடம் வரட்டும். அவருடைய கண்டுபிடிப்பு ஏற்கத் தக்கதாக இருந்தால், பெரும்பாலான விவசாயிகளுக்குக் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்யத் தயார்" என்று உறுதி கூறினார்.

கந்தராஜுக்கு இந்த விவரங்களைத் தெரிவித்து, வேளாண் துறை செயலாளரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கிறோம்.

 
இதோ,கரும்பு வெட்டும் கருவி....
இதோ,கரும்பு வெட்டும் கருவி....
                            
      
அடுத்த கட்டுரைக்கு