Published:Updated:

சீர் கெட்டு போச்சு ஏரு... நேராக்கித் தாங்க நேரு!

சீர் கெட்டு போச்சு ஏரு... நேராக்கித் தாங்க நேரு!

சீர் கெட்டு போச்சு ஏரு... நேராக்கித் தாங்க நேரு!
முறையீடு
கோவணாண்டி
சீர் கெட்டு போச்சு ஏரு... நேராக்கித் தாங்க நேரு!
சீர் கெட்டு போச்சு ஏரு... நேராக்கித் தாங்க நேரு!

விவசாயத் துறைக்கு புத்தம் புதுசா 'பொறுப்பு' ஏத்திருக்கற மாண்புமிகு கே.என். நேருவுக்கு, கோவணாண்டி வணக்கம் போடறேனுங்க!

'ஆகா, கிளம்பிட்டான்யா... கிளம்பிட்டான்யா..! இன்னமும் முழுசா காலடிகூட எடுத்து வைக்கல... அதுக்குள்ள இந்த கோவணாண்டி வேலையைக் காட்ட ஆரம்பிச்சிட்டானே'னு அவசரப்பட்டு என்னைப் பத்தி தப்பான எந்த முடிவுக்கும் வந்துடாதீங்க. இது வரவேற்பு மடல்தான்!

சீர் கெட்டு போச்சு ஏரு... நேராக்கித் தாங்க நேரு!

'தலைவரையே தட்டிக் கேக்குற அளவுக்கு தைரியமான எங்க சேலத்து சிங்கம்'னு கரைவேட்டிங்க பெருமையா சொல்லிக்கிற வீரபாண்டி ஆறுமுகம் உட்கார்ந்து, கோலோச்சிக்கிட்டிருந்த ஆசனத்துக்கு புதுசா வந்திருக்கீங்க. 'உடம்புக்கு நோவு'னு அப்போலோ ஆஸ்பத்திரியில போய் படுத்துக் கிடக்கறாரு வீரபாண்டியாரு. ஆனா, 'வில்லங்க வெவகாரம்தான் பதவி பறிப்புக்குக் காரணம்'னு ஊரெல்லாம் ஒரே பேச்சாயிருக்கு. எது எப்படியோ... அவரோட துறையைத் தூக்கி கையில கொடுத்துட்டாரு உங்க தலைவரு.

'விவசாயம்தான் நம்ம குலத்தொழில்'னு காலகாலமா அதை விடாம செய்துகிட்டிருக்கற ஒரு விவசாயக் குடும்பத்துல பொறந்து வந்திருக்கற நீங்க... விவசாயத்தைத் தொடர்ந்து செய்துகிட்டிருக்கற நீங்க... விவசாயத்துக்காகவே உங்க குடும்பத்து சார்புல ஆராய்ச்சி நிலையமே தொறந்திருக்கற நீங்க... எங்களுக்காக ஏதாச்சும் செய்வீங்கனு நம்பிக்கையோட வரவேற்கிறேனுங்க.

'இயற்கை விவசாயம்தான் விவசாயிகளை வாழ வைக்கும்... இந்த நாட்டையும் வாழ வைக்கும்'னு பலமேடைகள்ல ஆணித்தரமா கருத்தை எடுத்து வெச்ச ஆளு நீங்க. அதை செயல்ல காட்ட நேரம் கூடி வந்திருக்கு.

சீர் கெட்டு போச்சு ஏரு... நேராக்கித் தாங்க நேரு!

உங்க தலைவருக்கே ஒரு காட்டு காட்டினவர்தான் நம்ம வீரபாண்டியார். ஆனா, இந்த அதிகாரவர்க்கத்தை அவரால பெருசா அசைச்சிப் பார்க்க முடியலீங்க. கிட்டத்தட்ட விவசாய துறைங்கிறது சீர்கெட்டுத்தான் கிடக்கு. போலீஸ் துறைக்கு ஈரல்தான் கெட்டுப்போயிருக்கு. வெவசாயத் துறையோ ஈரல், கிட்னி, மூளை, நுரையீரல்னு ஒரு இடம் பாக்கியில்லாம கெட்டுக் குட்டிச்சுவரா கெடக்கு. அதை வீரபாண்டியாரால இத்தனை நாளா தொட்டுக்கூட பார்க்க முடியல. அதனாலதான் புதுசா வந்திருக்கற உங்ககிட்டயாவது சொல்லலாமேனு கையில பேனாவை எடுத்துட்டேன். 'புதுப்பொண்டாட்டி ஜோர்'னு சொல்ற மாதிரி, புதுசா பொறுப்புக்கு வந்திருக்கற வேகத்துலயாவது விவசாயத் துறையில அடிமட்டம்... நுனிமட்டம்னு எல்லா மட்டத்தையும் ஒரு பிடிபிடிச்சா தேவல!

கிராமத்து டீக்கடை பக்கம் கால் வெச்சாலே... 'விவசாயத்துக்கான களமே கிராமம்தான். ஆனா, விவசாய களப் பணியாளரையோ, விரிவாக்க அதிகாரிகளையோ வயக்காட்டுல பார்த்து பத்து வருஷத்துக்கு மேல ஆகிப்போச்சுது'னு பல ஊர்கள்ல கோவணாண் டிங்க புலம்பிக்கிட்டிருக்காங்க. அதிகாரிங்களுக்கு வேலை என்ன வோ கிராமத்துலதான். ஆனா, டவுனுக்குள்ள போய் வீட்டைக் கட்டிக்கிட்டு, அங்க ஏதாச்சும் ஒரு டீக்கடையிலயோ... சலூன் கடையிலயோ வெட்டி ஞாயம் பேசிட்டு, பொழுது சாய்ஞ்சதும் புல்லட்டைக் கிளப்பிக்கிட்டு வீட்டுல போய் தூங்கிடறாங்க. அப்படி இல்லனா... தேங்காய் விக்கிறது... மாங்காய் விக்கிறது... வட்டிக்கு விடறது... ஊர்க் கோயில்ல நாட்டாமை பண்ணிக்கிட்டு உதார் விடறதுனு தெனா வெட்டாவே திரியறாங்க. மாசக் கடைசியில, 'அங்க போனேன் அதைப் பார்த்தேன்', 'இங்க போனேன்... இதைப் பார்த்தேன்'னு கணக்கெழுதி கெவருமென்ட் காசை கறக்கறதுல குறை வைக்கிறதில்ல.

சம்சாரிங்க, 'கரும்பு போடுறீங்களா... நெல்லு போடுறீங்களா...'னு கேக்கறதில்ல! 'பருத்தி போடுறாங்களா, மருந்து அடிக்கறாங்களா'னு பாக்கறதில்ல. 'நல்ல விதையை வாங்கறாங்களா, பாழாப்போன விதையை வாங்கறாங்களா'னு பரிசோதிக்கறதில்ல. உரக் கம்பெனிங்க, பூச்சிக் கொல்லி விஷக் கம்பெனிங்க, கண்டபடி விதை யில கோல்மால் பண்ற விதைக் கம்பெனிங்க... இவங்கள்லாம் கொடுக்கிற கமிஷனை வாங்கிக் கிட்டு, தஞ்சாவூர் பொம்மையாட்டம் தலையை மட்டும் ஆட்டிப்புட்டு வர்ற நம்ம அதிகாரிங்க, அந்தக் கம்பெனிங்க சொல்றதையெல்லாம், அப்படியே எங்ககிட்ட வாந்தியெடுக்கறாங்க. வெவரம் புரியாத நாங்கள்லாம்... கடன, ஒடன வாங்கி, அதையெல் லாம் வரிமாறாம செய்துமுடிச் சிட்டு, கடைசியில தலையில துண்டைப் போட்டுக்குறோம்.

பருத்தி போட்டவன், பாழா போயிட்டான்... பனியன் வித்த வன், பணக்காரனாயிட்டான்! பால் வித்தவன், படுத்து கிடக்கிறான்... தண்ணி வித்தவன், தாண்ட வமாடுறான்! தென்னை போட்டவன், திண்ணையில கெடக்கிறான்... எண்ணெய் வித்தவன், ஏரோ பிளேன்ல பறக்கறான்! கரும்பு போட்டவன், கண்ணீர்ல மிதிக் கிறான்... சர்க்கரை மில் வெச்சவன் பன்னீர்ல குளிக்கிறான்!

''ம்... நம்ம வந்த வழி அப்படி''னு எங்களையே நொந்துக்கிட்டு ஏரோட்டிக்கிட்டிருக்கோம். ஆனா, எங்க பேரைச் சொல்லி உங்க ஆளுங்க அடிக்கற கொள்ளை தாங்க முடியலீங்களே! கொடுக்கிற மானியத்தையா வது, எங்க கையில நேரடியா கிடைக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணுங்க. உரம், சொட்டுநீர், இயந்தி ரம்னு பல கம்பெனிங்க, விலையக் கூட்டி, மானி யத்தையும் அவங்களே சாப்பிடறாங்க. 50% மானி யம்னு சொல்றாங்க. கணக்குப் பார்த்தா, கடை சியில 5% கூட எங்க கைக்கு வரமாட்டேங்குது.

இந்தியா பூராவும் இதே கூத்துதான். உங்களோட பெரிய மந்திரி, அதானுங்க மத்தியில இருக்கற உங்க கூட்டாளி சரத் பவார், இந்த வருஷம் மாத்திரம் 1 லட்சத்தி 20 ஆயிரம் கோடிக்கு உர மானியம் கொடுத்திருக்கறதா கணக்குப் போட்டுச் சொல்றாரு. ஆனா, நிஜத்துல விவசாயிகளுக்கு உரம் கிடைக்கிறது, 'தலைமைக் கழகத்துல அம்மா'வை பார்க்கற கதையாத்தான் இருக்கு.

அப்ப, கோடிக்கணக்குல நீங்க சொல்ற அந்த உரமெல்லாம் எங்க போவுது.... அதுக்கான மானியம் எங்க போவுது? கூடுதலா காசு கிடைக் கும்னு எல்லா உரத்தையும் கண்டவனுக்கும் வித்துப்புட்டாங்களோ என்னமோ...? பயங்கரவா திங்கள்லாம் இப்ப சகட்டுமேனிக்கு குண்டு போட்டுக்கிட்டே இருக்காங்க. அவங்களுக் கெல்லாம் ரொம்ப சுலபமா அமோனியா கிடைக்குது. ஒருவேளை, உயிரை எடுக்கறவங் களுக்கு மானிய விலையில நம்ம ஆளுங்க உரத்தைக் கொடுக்கறாங்களோ?

விவசாயப் பொறியியல் துறையில ரிக், ஜே.சி.பி., டிராக்டர், பவர்டிரில்லர்னு பலவிதமான கருவிங்க இருக்குது. இதையெல்லாம் குறைஞ்ச வாடகைக்கு விவசாயிகளுக்குக் கொடுத்து விளைநிலங்களையும், விளைச்சலையும் பெருக்கணும்கிறதுதான் அரசாங் கத்தோட திட்டம். ஆனா, நிஜத்துல என்ன நடக்குது? விவசாயத்தைக் கெடுத்து, விளை நிலங்களை அழிச்சி, வீட்டுமனையா மாத்தி கூறுபோட்டு வித்துக்கிட்டிருக்கற புரோக்கர் களுக்கு, அந்தக் கருவியையெல்லாம் வாடகைக்கு விட்டுட்டு, விவசாயத்துக்கு கொடுத்ததா கணக்கு எழுதி காசு பார்த்துக்கிட்டிருக்காங்க பல இடத்துல.

உங்க தலைவர்கிட்ட இதை யெல்லாம் சொல்லி அழலாம்னு விவசாய சங்க தலைவருங்க நேரம் கேட்டாக்கா... 'பிஸி பிஸி'னு சொல்லி சந்திக்க விடமாட்டேங்கறாங்க. ஆனா, குடும்பப் பிரச்னை யை உலகத்தையே கூட்டி வெச்சி சொல்றதுக்கு மட்டும் அவருக்கு ஏகப்பட்ட நேரமிருக்குது. உலக அரசியல் வரலாற்றுலயே முதல்முறையா குடும்பப் பிரச்னையை.... தேசிய பிரச்னையா மாத்தி, நாட்டுல இருக்கற எல்லா டி.வி., பத்திரிகையிலயும் மொத பக்கத்துல செய்தி வரவெச்சிட்டார். கடைசியில... 'அதெல்லாம் சும்மனாச்சுக்கும் அடிச்சிக்கிட்டோம்'னு சொல்லி, அதுக்கும் பிரதான இடத்தைத் தேடிக்கிட்டார். ஆனா, எங்ககிட்ட மனு வாங்க மட்டும் நேரமில்ல. இந்த லட்சணத்துல, 'தமிழ்நாட்டுல உணவு தானிய உற்பத்தி பெருகியிருக்கு'னு சொல்லிக்கிட்டிருக்கார் கருணாநிதி.

இதைப்பத்தி சொன்னா, ''விவசாயத் துறையில திரும்பின பக்கமெல்லாம் ஊழல்தான் பெருகி நிக்கிது. அப்படியிருக்கும்போது எங்கேயிருந்து உற்பத்தி பெருகும்?''னு கேக்கறாரு எங்க ஊரு இங்கிலிபீஸு வாத்தியார். ஆளு என்னவோ கதர் சட்டைதான். ஆனா, கொஞ்ச நாளா, உங்க கூட்டணியில கும்மாங்குத்து நடக்கறதால எல்லாத்தையும் பிச்சி உதற ஆரம்பிச்சிட்டார்.

''100 லட்சம் டன் உணவு தானியத்தை உற்பத்தி செஞ்சு குவிச்சிட்டாங்கனு கொஞ்ச நாளைக்கு முன்னால தமிழக விவசாய அதிகாரிகளை உச்சிமோந்து பாராட்டித் தள்ளியிருக்காரு முதல்வர் கருணாநிதி. மத்திய அரசோட வேளாண் வளர்ச்சி இலக்கு 4%. ஆனா, அதை சாதிக்கறதுக்கு தலையால தண்ணி குடிக்குது மத்திய அரசு. அப்படியிருக்கும்போது, தமிழகத்துல மட்டும் '6.5% வளர்ச்சி'னு சொல்றது யாரை ஏமாத்தறதுக்காக?''னு கேக்கறாருங்க.

''கருணாநிதி, நிஜமாவே தெரிஞ்சுதான் பேசினாரா... இல்ல, சட்டக் கல்லூரி சண்டையை தூண்டிவிட்டது ஜெயலலிதாதான்னு சொல்லிட்டு, கடைசியில விளையாட்டுக்குச் சொன்னேன்னு பல்டி அடிச்சிருக்காரே அது மாதிரி ஏதும் சொல்லியிருப்பாரோ...''னு நக்கல் வேற அடிக்கறாரு நம்ம வாத்தியாரு.

''கருணாநிதி சொல்ற 100 லட்சம் டன் உணவு தானியத்தை ஆறரை கோடி தமிழக மக்கள் ஒவ்வொருத்தருக்கும் பங்கு போட்டுக் கொடுத்தா... வருட சராசரி வெறும் 154 கிலோதான் வருது. ஆனா, இந்திய அளவுல தனி மனித உணவு தானிய சராசரி 208 கிலோ. உலக அளவுல பார்த்தா... 309 கிலோ. இந்திய கணக்குக்கே 54 கிலோ இடிக்குது. அப்படியிருக்கும்போது, 154 கிலோவை வெச்சிக்கிட்டு, என்னமோ உலக சாதனை செய்துட்ட மாதிரி பீத்திக்கிறாரே கருணாநிதி. இப்படியே போனா, பசி&பஞ்சம்னு பட்டினிச்சாவு அரங்கேறிக்கிட்டிருக்கற சோமாலியா, எத்தியோப்பியா வரிசையில கூடிய சீக்கிரமே இந்தியாவோட பேரையும் சேர்த்து எழுதிடுவாங்க''னு போட்டுக் கிழிக்கறாருங்க அந்த வாத்தியாரு.

உண்மையை மறைக்கறது நாட்டுக்கும் உதவாது... ஓட்டுக்கும் உதவாது... ஒருவேளை, உங்கள மாதிரி ஆளுங்களோட வீட்டுக்கு உதவலாம். 'தனி மரம், தோப்பாகாது'னு சொல்ற மாதிரி, நாளைக்கு ஒங்க ஒரு சில வீடுகளை மட்டும் வெச்சிக்கிட்டு, 'நாடு'னு சொல்ல முடியாது. எதையுமே கண்டுக்காம, இப்படியே 'சித்தன் போக்கு சிவன் போக்கு'னு போயிக்கிட்டு... நாம நினைக்கறது மட்டும்தான் நடக்கணும்கிற மாதிரி ஆட்சியை நடத்திக் கிட்டிருந்தா... கடைசியில முதலமைச்சரும்... அவரை சுத்தி ஜால்ரா போடறதுக்கு மந்திரி பிரதானிங்களும்தான் இருப்பீங்க. நீங்க ஆள்றதுக்கு நாடும் இருக்காது... காடும் இருக்காது. சுடுகாடு தான் இருக்கும்... ஆமாம் சொல்லிப்புட்டேன்.

இப்படிக்கு
கோவணாண்டி

 
சீர் கெட்டு போச்சு ஏரு... நேராக்கித் தாங்க நேரு!
சீர் கெட்டு போச்சு ஏரு... நேராக்கித் தாங்க நேரு!
                            
      
அடுத்த கட்டுரைக்கு