Published:Updated:

மஞ்சள் மகிமை மணக்குது பெருமை

மஞ்சள் மகிமை மணக்குது பெருமை


10-10-07
மகசூல்
பொங்கல் சிறப்பிதழ்
மஞ்சள் மகிமை  மணக்குது பெருமை
ஜல்லிப்பட்டி பழனிச்சாமி  
மஞ்சள் மகிமை  மணக்குது பெருமை
 
மஞ்சள் மகிமை மணக்குது பெருமை!
மஞ்சள் மகிமை  மணக்குது பெருமை
மஞ்சள் மகிமை  மணக்குது பெருமை
மஞ்சள் தோட்டத்தில் மோகன ராமகிருஷ்ணன்

மஞ்சளின் மகிமை பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை... நாட்டுப்புற பாமரன் முதல், நாடாளும் மன்னர் வரை மஞ்சளுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் மரியாதை நாமெல்லாம் அறிந்ததுதான். அந்த அளவுக்கு மகத்துவம் வாய்ந்த மஞ்சளைப் போற்றிப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது ஈரோடு மாவட்டம்.

வாசனைப் பயிராகவும்... பணப்பயிராகவும் இருக்கும் இந்த மஞ்சள்... ஈரோடு, கொடுமுடி, மொடக்குறிச்சி, பெருந்துறை, சென்னிமலை பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளைந்து மணம் வீசிக்கொண்டிருக்கிறது.

''சாகுபடிக்கு ஏத்த மண் வளம், சக்கரை மாதிரி தண்ணீ ரெண்டும் ஒரு சேர இருக்கறதைப் பார்த்து ஏதோ ஒரு மவராசன் இந்தப் பூமியில மஞ்சள விதைச்சுப் பார்த்திருக்கான். அது, 'தளதள'னு விளைஞ்சு நின்னு சிரிச்சிருக்கு. அப்புறமென்ன, 'மஞ்சள்பூமி'ங்கற பேரு காலாகாலத்துக்கும் நிலைச்சுப்போச்சி'' என்று மஞ்சள் மகிமை பற்றி சிலாகிக்கும் பவளத்தான்பாளையம் விவசாயி மோகன ராமகிருஷ்ணன் (அலைபேசி 94426-23263),

''ஆரம்பத்தில் நாட்டுரக மஞ்சள் விவசாயம்தான் ஈரோடு பகுதியில பிரதானம். காலப்போக்குல புதுசுபுதுசா வீரிய ரகங்கள் வந்து சேர்ந்துடுச்சி. பெரும்பாலான விவசாயிங்களை அது ஆக்கிரமிச் சிட்டாலும், என்னை மாதிரி ஒரு சில விவசாயிங்க மட்டும் நாட்டுரகத்தையும் விடாம சாகுபடி செய்துகிட்டிருக்கோம். நானெல்லாம், மஞ்சளை நம்ம பூமிக்கான அடையாளமாவும் பார்க்கற ஆளு.

மஞ்சளைப் பொறுத்தவரை பொங்கலுக்கு அறுவடைக்கு வந்துடும். அந்த மஞ்சளைக் குழைச்சி, பிள்ளையார் பிடிச்சி, பொங்கல்பானையில மஞ்சள் கொத்தைக் கட்டி, ஏகத்துக்கும் மரியாதை செய்றது தானே நம்ம பண்பாடு'' என்று முன்னோட்டமாக பேசியவர், மஞ்சள் தோட்டத்துக்குள் நடைபோட் டபடியே தொடர்ந்தார்.

''மஞ்சள் இல்லாத விவசாயத்தை இந்தப்பகுதி விவசாயிங்களால நினைச்சிப் பார்க்க முடியாது. வீரியரகம்தான் இங்க சக்கை போடுபோடும். நான், ரெண்டரை ஏக்கர் நிலத்துல நாட்டுரகத்தை தனியா பயிர் செய்திருக்கேன். மஞ்சள்ங்கறது மிக உயர்ந்த கிருமி நாசினி. ஆனா, மூட்டை மூட்டையா ரசாயன உரம்... டப்பா, டப்பாவா பூச்சி மருந்துனு மஞ்சள் வயல்ல கொட்டுறாங்க விவசாயிங்க பலரும். இதனால மஞ்சளே நஞ்சா மாறிக்கிட்டிருக்கு. இந்த மண்ணும் நாசமாகுது. இதைப்பார்த்து வெறுத்துப் போய், எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு இயற்கை விவசாயத்தை நடைமுறைப் படுத்துறேன். பஞ்சகவ்யா, ஊஞ்சஇலை மோர், சோற்றுக்கற்றாழை, வேம்புனு என்னைச்சுத்தி இருக்கறதைப் பயன்படுத்தி, மஞ்சளுக்கான உரம், பூச்சிவிரட்டிகளை தயாரிச்சிக் கிறேன். இதன் மூலமா முட்டுவளிச் செலவு குறையுது’' என்று சொன்ன மோகன ராமகிருஷ்ணன், மஞ்சள் பற்றி பாடமெடுத்தார். அவர் சொன்ன பாடக்குறிப்புகள் இதோ-

'இந்திய நாட்டின் மணம் வீசும் ஏற்றுமதி பொருட் களில் மஞ்சள் முக்கிய இடத்தை பிடித்து நிற்கிறது. உணவு, மருந்து, சாயம், க்ரீம் என்று பலவாறு ஜொலிக்கிறது. முக்கியமாக பெண்களின் தாலிக் கயிறாக மின்னுகிறது. நம்முடைய கலாச்சாரத் தோடு பின்னிப்பிணைந்துவிட்ட தெய்வீகப் பயிர்களில் ஒன்றுதான் மஞ்சள்.

ஏக்கருக்கு ஆயிரம் கிலோ விதை மஞ்சள் தேவைப் படும். நாட்டுரகம் என்பதால், நாமே சேமித்து வைத்துக் கொள்ளவேண்டும். அறுவடையின்போது தரமுள்ள மஞ்சளாகப் பார்த்து தேர்ந்தெடுத்து சேமிக்கவேண்டும். மற்ற விவசாயிகளிடம் இருந்தும் வாங்கிக் கொள்ளலாம். கிலோ 5 முதல் 8 ரூபாய் விலையில கிடைக்கும்.

மஞ்சள் மகிமை  மணக்குது பெருமை

விதைக்கான மஞ்சளை, 200 லிட்டர் பஞ்சகவ்யாவில் கொஞ்சம் கொஞ்சமாக நனைத்து எடுத்து, ஒரு மணி நேரம் நிழலில் காய வைக்கவேண்டும். நிழற்பாங்கான இடத்தில் வேப்பந்தழைகளை அரை அடி உயரத்துக்கு மேடைபோல பரப்பி, அதன் மீது விதை மஞ்சளைக் கொட்டி, மீண்டும் வேப்பந் தழைகளை கொண்டு மூடாக்குப் போடவேண்டும். இப்படிச் செய்தால், கள்ளிப்பூச்சித் தாக்குதல் ஏற்படாமல் இருக்கும். தரமான விதை கிடைப்பதோடு, உயர்விளைச்சலும் கிடைக்கும். 90 முதல் 120 நாட்கள் வரை விதை மஞ்சளை இப்படி மூடாக்கில் வைத்திருந்து, பின்பு நடவு செய்யவேண்டும்.

தை அல்லது மாசி மாதங்களில் சணப்பு விதைத் துவிட்டு, பாசனம் செய்ய வேண்டும், மூன்று மாதத்தில் 'தளதள'வென அவை வளர்ந்து நிற்கும். அப்படியே டிரக்டர் கொண்டு உழவு செய்தால், அருமையான பசுந்தாள் உரமாக அது மாறிவிடும். அடுத்து, பத்து வண்டி அளவுக்கு தொழுஉரத்தை நிலத்தில் இறைக்க வேண்டும். அதன்பிறகு, மண் 'பொல பொல'வென மாறி, புழுதி கிளம்பும் அளவுக்கு நன்றாக நான்கு தடவை உழவு ஓட்டவேண்டும். பின்பு கலப்பை கொண்டு முக்கால் அடி பார் ஓட்டலாம். தொடர்ந்து ஆட்களைக் கொண்டு பாத்தி வாய்க்கால் அமைத்து, அரை அடிக்கு ஒரு விதைக் கிழங்கு என மண்வெட்டி கொண்டு லேசாக குழி பறித்து விதைக்கவேண்டும். 25 நாட்களுக்கு ஒருதடவை கை களை எடுக்கவேண்டும். செடி நன்றாக வளர்ந்து நிழல் கட்டும் நாள் வரை சுமார் 6 களைகள் எடுக்கப்படவேண்டும். ஒவ்வொரு களை எடுப்புக்குப் பின்னரும் உரம் கொடுக்க வேண்டும்.

மஞ்சள் மகிமை  மணக்குது பெருமை

300 நாட்களில் அறுவடை. மஞ்சள் கிழங்குகளை எடுத்து, வேகவைத்து நிழலில் கொட்டவேண்டும். நன்றாக உலர்ந்த பின்பு, இயந்திரத்தைப் பயன்படுத்தி மெருகு (பாலீஷ்) செய்வது அவசியம். அப்படி மெருகேற்றினால், மஞ்சளிலிருந்து மணம் வீசும். 10 டன் மஞ்சளை வேகவைத்து, மெருகு கூட்டுவதற்கு 10 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கும். மெருகு போட்டு முடித்த பிறகு, 10 டன் மஞ்சள், 2,500 கிலோவாக குறைந்து நிற்கும்.

மஞ்சளைப் பொருத்தவரை மூட்டைகளில் பிடித்து எத்தனை நாள் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். கெட்டுப்போகாது. நல்ல விலை வரும் சமயத்தில் விற்று விடலாம். ஈரோடு மாவட்டத்தில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் இருக்கின்றன. அங்கே ஏல முறையில் விற்பனை செய்யலாம். தனியார் கமிஷன் மண்டிகளிலும் விற்கலாம். இன்றைய தேதியில், குவிண்டால் மஞ்சள் மூவாயிரம் ரூபாய் வரை போகிறது. இது கட்டுப்படியாகாத விலைதான். குறைந்தபட்சம் 4,000 ரூபாய் விலை கிடைத்தால்தான், ஓர் ஆண்டு முழுக்க உழைத்து விளைவித்ததற்கான பலன் கிடைத்தமாதிரி இருக்கும்.

மணம் வீசும் வாசனைப் பயிர்களில் ஒன்றான மஞ்சளுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம். மத்திய- மாநில அரசுகள் முயற்சி செய்து, ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகப்படுத்தவேண்டும். பொதுவாக மஞ்சள் சேமித்து வைத்து விற்கப்படுவதால், கிராமங்கள் தோறும் பஞ்சாயத்து மூலம் சேமிப்பு கிடங்குகள் அமைத்து தந்தால் உதவியாக இருக்கும்'

இப்படியெல்லாம் சொல்லி முடித்த மோகன ராமகிருஷ்ணன்,

''லாபமோ, நஷ்டமோ... விடாப்பிடியா தஞ்சாவூரு பக்கம் நெல் விளைவிக்கறாங்க. அதை ஒரு சேவையாகவும், ஊரோட பெருமையை காப்பத்தறதுக்காகவும் செய்துகிட்டிருக்காங்க. அதேபோலத்தான்... எது வந்தாலும் சரினு மஞ்சள் விவசாயத்தை விடாப்படியா செய்து, ஈரோட்டோட பெருமையைக் காப்பாத்திக் கிட்டிருக்கோம். அப்படிப்பட்ட எங்களுக்கு கட்டுபடியாகிற விலை கிடைக்க அரசாங்கம் முயற்சி எடுக்கணும்'' என்று அரசாங்கத்தை நோக்கி குரல் கொடுத்தார்.

மஞ்சள் துண்டு மன்னவராக வலம் வரும் முதல்வர் கருணாநிதியின் காதுகளுக்கு இதுப்போய்ச் சேரும் என்றே தோன்றுகிறது.

இயற்கை டானிக்

இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கி தயாரிப்பது எப்படி?

'ஊஞ்சமர தழையினை நன்றாக இடித்து மண்பானை யில் போட்டு, சுத்தமான நாட்டுப்பசு மோரை ஊற்றி, மண்ணில் புதைத்து வைக்கவேண்டும். 10 நாள் கழித்து, அதை எடுத்து, 10 மடங்கு தண்ணீர் கலந்துகொள்ளவேண்டும். இதை ஒவ்வொரு களை எடுப்புக்குப் பின்னரும் தயாரித்து தெளித்து வந்தால், அருமையான பயிர் வளர்ச்சி டானிக்காக இருக்கும். செடி ஒரே சீராக 'தளதள'வென வளர்வது நன்கு புலப்படும்.

நோய் என்று பார்த்தால் அசுவினித் தாக்குதல் அதிகம். புரட்டாசி மாதத்தில் அழுகல் நோய் வர வாய்ப்பு உண்டு. சொந்தமாக நோய் தடுப்பான், பூச்சி விரட்டிகளை தயாரித்துக் கொள்வதே சிறந்தது.

சோற்றுக்கற்றாழை, வேம்பு, எருக்கு, தும்பை, துளசி ஆகியவற்றின் இலைகளைப் பறித்து வந்து உரலில் போட்டு இடித்து, அதை மண்பானையில் சேகரித்து பசுவின் சிறுநீரில் ஊற விடவேண்டும். பத்து நாட்கள் நன்றாக மூடி வைத்து, பின்னர் எடுத்து 10 மடங்கு தண்ணீரில் கலந்து, விசைத்தெளிப்பான் கொண்டு பத்து நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கலாம். அசுவினி, அழுகல் போன்றவை காணாமல் போய்விடும். கடைசி இரண்டு தடவை மருந்து தெளிக்கும்போது, வெள்ளை பூண்டு, பெருங்காயம் ஆகியவற்றை இடித்து பொடி செய்து கலந்து தெளிக்கலாம்'' என்கிறார் மோகன ராமகிருஷ்ணன்.

ஊடுபயிர்

மஞ்சள் விவசாயத்தில் ஊடுபயிர் சாகுபடி மிகவும் சிறப்பானது. மஞ்சள் பத்து மாதங்களில் வளர்ந்து வருவதற்குள்ளாக, 90 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய சின்ன வெங்காயம், கத்திரி ஆகியவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். வெங்காயம் 2,500 கிலோ... கத்திரி 2,000 கிலோ என்று மகசூல் கிடைக் கும். இதன் மூலம் தனியான ஒரு லாபம் கிடைக்கும்.

கடந்த டிசம்பர் 29 தொடங்கி நான்கு நாட்களுக்கு ஈரோட்டில் நடந்து முடிந்த ஜீரோபட்ஜெட் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்கியிருக்க, பவளத்தான்பாளையத்தில் உள்ள பள்ளி வளாகத்தைக் கொடுத்து உதவியது, ஏ.இ.டி. மெட்ரிக்குலேஷன் பள்ளி நிர்வாகம். அதன் நிர்வாகிகளில் ஒருவர்தான் இந்த மோகன ராமகிருஷ்ணன். அதைப்பற்றி பேசியவர்,

''எங்கள் பள்ளியில் தமிழகம் முழுக்க வந்திருந்து தங்கியிருந்த பலதரப்பட்ட விவசாயிகளைச் சந்தித்து பேசினேன். அவர்களின் ஆர்வம் கண்டு சிலிர்த்துப் போனேன். அதையடுத்தே நானும் ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்பைக் கவனித்தேன். தற்சமயம், ஏதோ ஒரு வகையில் இயற்கை வழி சார்ந்த விவசாயத்தைச் செய்துவருகிறேன். ஆனால், இன்றிலிருந்து ஜீரோபட் ஜெட் விவசாயி என்று மாறப்போகிறேன்'' என்றார் உறுதியான குரலில்.

 
மஞ்சள் மகிமை  மணக்குது பெருமை
-படங்கள் கே.கார்த்திகேயன்
மஞ்சள் மகிமை  மணக்குது பெருமை
                            
      
அடுத்த கட்டுரைக்கு