Published:Updated:

கொடி பீன்ஸ்....மானாவாரியில் ஒரு மகத்தான சாகுபடி

ஜி. பழனிச்சாமி படம்: க. தனசேகரன்

பக்கத்து வயல்

##~##

'காய்கறி விவசாயம் எப்போதுமே கைவிடாது’ என்பதை அனைத்து விவசாயிகளுமே நன்கு புரிந்து வைத்திருப்பர். ஆனால், பாசன வசதி இருந்தால் மட்டுமே காய்கறி விவசாயம் சாத்தியப்படும் என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில்... கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர், கொள்ளேகால் பகுதி விவசாயிகள் மானாவாரியில் பூண்டு, உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ்... என காய்கறிகளை சாகுபடி செய்து கலக்கி வருகிறார்கள். இப்பகுதிகளில் கிடைக்கும் பருவமழை, அதிகளவில் வெயிலும், குளிரும் இல்லாத மிதமானச் சூழல் ஆகியவற்றை சரியாகப் பயன்படுத்துவதுதான் இவர்களின் வெற்றிக்கான சூத்திரம்!

கர்நாடக மாநிலம், உடையார்பாளையா பகுதியைச் சேர்ந்தவர், ராபர்ட். இவர், கேழ்வரகு, கொடி பீன்ஸ் ஆகியவற்றை சாகுபடி செய்து வருகிறார். விட்டு விட்டுப் பெய்த லேசான மழைத் தூறலில் நனைந்தபடியே அவருடைய வயலுக்குள் நுழைந்தோம்.

''பூர்விகமே இந்த ஊருதான். ரெண்டு ஏக்கர் நிலம் இருக்கு. 40 வருஷத்துக்கு முன்ன கேழ்வரகு மட்டும்தான் பிரதானப் பயிரா இருந்துச்சு. இரண்டு போக வெள்ளாமை நடக்கும். பயிருக்கு நீர் பாய்ச்சுற வேலையே இருக்காது. நேரத்துக்குப் பெய்யுற மிதமான மழையே போதுமானதா இருக்கும்.

இப்பவும் இங்க நிறைய பேர் வீட்டுல கேழ்வரகுலதான் களி, தோசை சமைச்சு சாப்பிடுறாங்க. ஆனா, காலப்போக்குல நிறைய பேர் கேழ்வரகு பயிர் பண்றத குறைச்சுட்டு, காய்கறி விவசாயத்துக்கு மாறினாங்க. அதேசமயம், ஒரு போகம் மட்டும் கேழ்வரகு போடுறத எல்லாருமே வழக்கமா வெச்சுருக்கோம். நான் கேழ்வரகோட சேர்த்து, 25 சென்ட்ல கொடி பீன்ஸையும் சாகுபடி பண்ணிட்டிருக்கேன்'' என்ற ராபர்ட் தொடர்ந்தார்.

கொடி பீன்ஸ்....மானாவாரியில் ஒரு மகத்தான சாகுபடி

பூச்சித் தாக்குதல் இல்லை!

''வருஷம் முழுவதும் மிதமான சீதோஷ்ணம் இருக்கறதால பயிருக்கு எந்த நோயும் வர்றதில்லை. பூக்கள் உதிராது. பூச்சிகளும் வர்றதில்லை. அதனால், பூச்சிக்கொல்லி பயன்பாடும் கம்மிதான். இருந்தாலும் காய் பருவத்துல முன்னெச்சரிக்கையா, வேம்பு-பூண்டுகரைசலை ஒரு தடவை தெளிச்சு விட்டுடுவோம். இங்க எல்லாரும் பூண்டு பயிர் பண்றதால... அந்த காரமான வாசம் காத்துல வீசிட்டே இருக்கும். அதனால, பூச்சிகள் வரவே வராது. அதேசமயம்... சாலைகள்ல சரக்கொன்றை மரங்களும், அதிக பூ பூக்குற காட்டுச் செடிகளும் இருக்கறதால தேனீக்கள் அதிகளவுல இருக்கும். அதனால மகரந்தச் சேர்க்கை நல்லா நடந்து மகசூல் கூடுது'' என்ற ராபர்ட், பந்தலில் கொடி பீன்ஸ் சாகுபடி செய்யும் விதத்தைச் சொன்னார். அதை, பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

மழைக்கால விதைப்பு!

'பருவ மழை தொடங்குற ஜூன் முதல் வாரம் விதைப்புக்கு ஏற்றப் பருவம். 2 அடி அகலம், 100 அடி நீளம் என்ற அளவுக்கு பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும். பாத்திகளுக்கான இடைவெளி நான்கு அடி. பாத்தியில் அரை அடி விட்டம், அரை அடி ஆழத்துக்கு குழி எடுத்து... அதில், அரை கிலோ மேல் மண்ணோடு, அரை கிலோ ஆட்டு எருவைக் கலந்து இட்டு, குழிக்கு மூன்று விதை என்கிற கணக்கில் கொடி பீன்ஸ் விதைத்து மண் கொண்டு மூடவேண்டும் (கால் ஏக்கருக்கு 750 கிராம் விதை தேவைப்படும்). தொடர்ந்து 6 அடி உயர மூங்கில்களை, 8 அடி இடைவெளியில் நட்டு வைக்க வேண்டும். 2 அடி அளவுக்குக் குழி எடுத்து நட்டு வைத்தால், உறுதியாக நிற்கும்.

மூங்கில்களை இணைத்து, கோணி தைக்கும் 'பிளாஸ்டிக் ட்வைன்’ கயிறை வைத்து, சுவர் போல வலைப்பின்னல் போட வேண்டும். இது நெடும்பந்தல். கால் ஏக்கர் அளவுக்கு இப்படி அமைக்க,48 மூங்கில் மற்றும் 10 கிலோ 'ட்வைன்' கயிறு தேவைப்படும்.

60-ம் நாளில் உரம்!

பருவமழை தொடங்கும் காலம் என்பதால், பாசனம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. மழை கிடைக்காத பகுதியில் சாகுபடி செய்பவர்கள், பாசனம் செய்யலாம். களைகள் மண்டுவதைப் பொருத்து அவற்றை அகற்ற வேண்டும். விதைத்த குழியைச் சுற்றி இருக்கும் களைகளை மட்டும் அப்புறப்படுத்தினால் போதும். விதைத்து 30-ம் நாளுக்கு மேல், கொடி படரத் தொடங்கும். அவற்றை பந்தலில் படரவிட வேண்டும். 60-ம் நாளில் ஒவ்வொரு குழிக்கும் அருகில் 2 கிலோ அளவுக்கு காய்ந்த ஆட்டு எருவை இடவேண்டும். 100-ம் நாளில் இருந்து பீன்ஸை அறுவடை செய்யலாம். வாரம் ஒரு முறை முற்றிய காய்களை மட்டும் பறிக்க வேண்டும். தொடர்ந்து 8 வாரம் வரை பறிக்கலாம்'

500 கிலோ மகசூல்!

நிறைவாக மகசூல் மற்றும் வருமானம் பற்றி பேசிய ராபர்ட், ''ஒரு பறிப்புக்கு 60 கிலோவுக்கு மேல கிடைக்கும். 8 பறிப்புக்கும் சேர்த்து கால் ஏக்கர்ல இருந்து 500 கிலோ அளவுக்கு மகசூல் கிடைக்கும். கிலோ 35 ரூபாய்னு விலை போகுது. மொத்தம் 17 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்கும். 4 ஆயிரம் ரூபாய் செலவு போக, 13 ஆயிரத்து ஐநூறு ரூபாய் லாபம்.

எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து ரசாயன உரத்தைத் தொட்டதேயில்லை. பூச்சி, நோய்கள்ல இருந்து பயிரைக் காப்பாத்துறதும் சரி, பயிருக்குத் தேவையான ஊட்டத்தைக் கொடுக்கறதும் சரி... எல்லாமே இயற்கைதான். அந்த இயற்கைச் சூழலை பங்கமில்லாம அடுத்த தலைமுறைக்கும் சேர்த்துடணுங்கிறதுதான் என்னோட ஆசை'' என்று வானத்தை நோக்கி கைகூப்பினார்!

தொடர்புக்கு,
ராபர்ட்,
செல்போன்: 097393-15323.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு