Published:Updated:

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சிகப்பு கார்...

த. ஜெயகுமார் படங்கள்: எஸ். நாகராஜ்

 பாரம்பரியம்

##~##

'விதைகள், ஒரு நாட்டின் செல்வங்கள்’ என்பார்கள். அதனால்தான், விதைகளை வழிவழியாகப் பாதுகாத்து வந்தனர் முன்னோர். கும்பாபிஷேகத்தின் போது, கோயில் கலசங்களில் வரகு உள்ளிட்ட விதைகளைப் போட்டு வைப்பது இன்றைக்கும் வழக்கமாக இருக்கிறது. இதற்கு அடிப்படையே... ஆபத்துக் காலங்களில் உதவுவதற்காகத்தான். ஆனால், காலப்போக்கில் நவீனமயமாக்கலுக்கு ஆட்பட்டு, பாரம்பரிய ரகங்களின் விதைகளைத் தொலைத்துவிட்டு, 'கம்பெனி’காரர்களிடம் கையேந்தி நிற்கிறோம்.

மதிப்புமிக்க இத்தகையப் பாரம்பரிய விதைகளில் எஞ்சியிருக்கும் ரகங்களில் ஒன்று... சிகப்புகார் நெல்! ஒரு காலத்தில், தமிழர்களின் தட்டை நிரப்பிக் கொண்டிருந்தது... சத்தான இந்த பாரம்பரிய ரக அரிசி. ஆனால், தற்போது அது கேரளாவில் பெருமையோடு மணந்து கொண்டிருக்கிறது. நம்மவர்களோ... 'மோட்டா ரகம்... யாரு சாப்பிடுவாங்க' என்று ஒதுக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதேசமயம், கேரளாவின் தேவைக்கு... இங்கிருந்துதான் பெருமளவு அரிசி அனுப்பப்பட்டு வருகிறது! இதற்காகவே... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, செங்குன்றம் பகுதி விவசாயிகள் தொடர்ந்து பயிரிட்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவர் பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தணிகா.

''நான் சொந்தமா பத்து ஏக்கர்லயும், குத்தகைக்கு பத்து ஏக்கர்லயும் விவசாயம் செஞ்சுட்டு வர்றேன். ரூபாலி, ஏ.டி.டி.-43, டி.கே.எம்.-9 (சிகப்புகார்), பாப்பட்லா நெல் ரகங்களைப் பயிர் செய்றேன். இந்த ரகங்கள்ல பயிர் செய்யறதுக்கு ரொம்ப உகந்தது சிகப்புகார். ரெண்டு மழை இருந்தாபோதும்.... பயிர் வெளைஞ்சுடும். பூச்சிக்கொல்லி, உரம் இதெல்லாம் அதிகளவுல தேவைப்படாது. முன்னயெல்லாம், அரசூர், காட்டாவூர், கனகவள்ளிபுரம், சோம்பட்டு, இழுப்பாக்கம் கிராமங்கள்ல, ஒரு போகத்துக்கு 50 ஆயிரம் மூட்டை (75 கிலோ மூட்டை) வரைக்கும் விளைச்சல் இருக்கும். இந்த ரகத்துக்கு சரியான விலை கிடைக்காததால, இப்போ 20 ஆயிரம் மூட்டை அளவுக்குக் குறைஞ்சுடுச்சு. விக்கிறதுக்கு கேரளா வியாபாரிகளைத்தான் நம்பி இருக்க வேண்டியிருக்கு. தமிழ்நாட்டுல இதுக்குனு சந்தை இருந்தா... நிறைய விளைய வெக்க முடியும்'' என்றார் தணிகா, நம்பிக்கையுடன்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சிகப்பு கார்...

செங்குன்றத்தில் அரிசி மண்டி நடத்தி வரும் வியாபாரி பழனி, ''முன்னயெல்லாம் சிகப்பு கார் அரிசியை வீடு, ஹோட்டல்கள்ல இட்லி, புட்டு செய்யறதுக்கு வாங்கிட்டு போவாங்க. வெள்ளை இட்லி வந்த பிறகு, ஹோட்டல்கள்லயும் இதோட பயன்பாட்ட நிறுத்திட்டாங்க. மோட்டா ரகமா இருக்கறதால வீடுகள்லயும் குறைச் சுட்டாங்க. சிகப்பு கார் அரிசி, கிலோ 34 ரூபாய்னு விலை போகுது. ஆனா, ஒரு மூட்டை வித்து முடிக்க நாலு மாசம் ஆகும்'' என்று வருத்தக் குரலில் சொன்னார்.

கேரள மக்களின் பெரு விருப்பமாக இருக்கும் இந்த ரகம் பற்றி பேசும் வடசென்னை மலையாளிகள் சங்கத் தலைவர் புஷ்பன், ''இந்த அரிசியை 'பாலக்காடு மட்டை', 'மட்டஞ்சம்பா' இப்படி பல பேர்ல சொல்லுவாங்க. இந்த சிகப்பரிசி எங்க மக்களுக்கு ரொம்பவும் பிடித்தமானது. முக்கியமான ஃபங்ஷன்கள்ல சிகப்பரிசி சாதம்தான் போடு வோம். அரபு நாட்டுல பல காலமா தங்கியிருக்கற மலையாளிங்ககூட இதைத்தான் விரும்பி சாப்பிடறாங்க. இந்த அரிசி போதுமான சப்ளை இல்லாத நேரங்கள்லதான், மத்த ரக அரிசியை சாப்பிடுறோம்'' என்று சொன்னார்.

திரூர் நெல் ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் டாக்டர். தேவநாதனிடம் இந்த ரகத்தின் பெருமை பற்றி கேட்டபோது, ''சிகப்பு கார் ரகத்தை டி.கே.எம்.-9 என்கிற பெயரில் விவசாயிகள் பயிர் செய்கிறார்கள். வறட்சியைத் தாங்கி, குறைவான தண்ணீரில் வளரக்கூடியது. பூச்சித்தாக்குதல் இல்லாத பயிர். மழைக்காலத்தில் மானாவாரியாகவும் விதைக்கலாம். 100-110 நாட்களில் அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 30-35 மூட்டை (75 கிலோ) மகசூல் கிடைக்கும்.

சிகப்பு நிறத்துக்குக் காரணம்... அதிலிருக்கும் 'ஆந்தோசைனின்’ என்கிற வேதிப்பொருள். இது நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டது. புற்றுநோய் மாதிரியான நோய்கள் வராமல் தடுக்கிறது. இரும்புச்சத்து, தாதுச்சத்து, வைட்டமின் பி-1, தையமின் ஆகியவை அதிகளவில் உள்ளன. நார்ச்சத்து நிறையவே இருப்பதால், சாப்பிடுபவர்களுக்கு செரிமான பிரச்னை இருக்காது. அதேசமயம், கொழுப்புச்சத்து குறைவாக இருப்பதால்... ரத்த ஓட்டத்தை சீர் செய்ய உதவுகிறது. மற்ற அரிசி வகைகளை 'பாலீஷ்’ போட்டால்... அனைத்துச் சத்துகளும் போய்விடும். ஆனால், சிகப்பரிசியை பாலீஸ் போட்டாலும்... சத்துக்கள் அவ்வளவாக குறைவதில்லை. இதை, நீரிழிவு நோய் உள்ளவர்கள்கூட தைரியமாகச் சாப்பிடலாம்'' என்று சிபாரிசு செய்தார்.

தொடர்புக்கு,
திரூர் நெல் ஆராய்ச்சி நிலையம்:044-27620233/383
தணிகா, செல்போன்: 94435-59601.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு